School of Sufi Teaching

ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்)

ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்) அவர்கள், கி.பி. 1870 க்கும் 1871 க்குமிடையில், உ.பி.மாநிலத்தில், ஆஜம்கார் எனும் ஊரில் பிறந்தார்கள். அவர்களின் தந்தையார் மியான் கரீம் பக்ஷ் என்பவர்கள், சிஷ்தி ஷெய்கு மவ்லானா நிஜாபத் அலி ஷாஹ் (ரஹ்) அவர்களின் சீடராவார்கள். ஹஜ்ரத்தின் தாயார், மிகுந்த ஆன்மீக ஈடுபாடு உடையவர்களாகவும், அதே ஷெய்குடைய சீடராகவும் திகழ்ந்தார்கள். காலப்போக்கில், மியான் கரீம் பக்ஷ் அவர்களும், ஷெய்காக ஆகி விட்டார்கள். அப்போது இளவலாக இருந்து வந்த, தன் புதல்வர் ஹாமித் ஹஸன் அவர்களைத், தனது ஆன்மீக ஆசிரியர், மவ்லான நிஜாபத் அலி
ஷாஹ் (ரஹ்) அவர்களிடம் அறிமுகப்படுத்தி மகிழ்ந்தார் தந்தை. ஷெய்கு அவர்கள், தம் கவனத்தை அவரின் பக்கம் திருப்பினார்கள். ஒரு வேளை, அவ்வாலிபரின் ஆன்மீகத் திறன்களை நோட்டமிட்டார்கள் போலும். பொருத்தமற்ற பயிற்சிகளால், அவரில் குடி கொண்டிருக்கும் ஆன்மீகத் திறமைகளுக்குக் களங்கம் உண்டாகி விடலாம் என்ற எண்ணத்தில், அவரை எல்லோரும் கல்வி கற்கும் முறையான படிப்பில் சேர்க்க வேண்டம் என அறிவுறுத்தினார் ஆசிரியர். தனது ஆன்மீக ஆசானின் அறிவுரைப்படியே, தனது புதல்வரை, திருக்குரானை மனனம் செய்த ஹாஃபிஸாக உருவாக்கினார் தந்தை.

ஆசிரியருடன் தொடர்பு

ஹஜ்ரத் ஸையித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், மியான் கரீம் பக்ஷ் (ரஹ்) அவர்களின் சீடர். ஒரு முறை சீடரைத் தனது இல்லம் வரை வரவழைத்துத் தனது புதல்வரை அறிமுகம் செய்து
வைத்தார் மியான் கரீம் பக்ஷ்.. எதனையும் தங்கமாக்க வல்ல ரசவாதக் கல்லுடன், எந்தப் பொருள் இணந்தாலும், அதுவும் தங்கமாகவே மாறிவிடுவது போல, இவ்விருவரின் சந்திப்பும் அமைந்து விட்டது. ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்) அவர்கள், ஹஜ்ரத் ஸையித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களின் விசுவாசமிக்க உண்மையான சீடராக ஆகி விட்டார்கள்.

கி.பி.1901 ஆம் ஆண்டு, ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்) அவர்கள் பர்மாவில் இருக்கும் போது, தங்கள் ஷெய்கு ஹஜ்ரத் ஸையித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களுக்குக் கடுமையான காய்ச்சல் என்ற தகவல் வந்தது. அவசரமாகப் புறப்பட்டு வந்தார்கள். ஆனால், வந்து சேர்வதற்கு முன்னரே, தங்களின் கண்ணியத்திற்குரிய ஆசிரியர் இப்பூவுலகை விட்டும் விடை பெற்றுச் சென்றிருந்தார்கள். ஷைய்கு அவர்களின் துணைவியார், ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்) அவர்களிடம், தாங்கள் தான் இதன் பிறகு ஆன்மீகப் பிரதிநிதி என அறிவித்தார். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே தான் அம்மாபெரும் உயர் பதவிக்கு தகுதியுள்ளவன்தானா என்ற மனக் குழப்பத்தில் திகைத்து நின்று விட்டார் ஹஜ்ரத். இதைக் கண்ட, அவ்விதவைப் பெண், தானும் இத்தகைய கேள்வியை ஷெய்கு அவர்களிடம் கேட்டதாகவும், அதற்கு, “நான் அவருடன் பக்க பலமாக இருப்பேன்” எனப் பதில் வந்ததாகவும் சொன்னார். இதைக் கேட்டவுடன், ஐயம் நீங்கி தன்னம்பிக்கையுடன், தனது புதிய பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற உறுதி பூண்டார், ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்).

திட்டமிடலும், ஒழுங்கும்

ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்) அவர்களின் வாழ்வு, ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஒரு முன்னுதாரணம். தனது நேரத்தை முறையாக வகுத்து, மிகுந்த கவனத்தோடும், விழிப்புணர்வோடும் செலவு செய்வார்கள். காலை முதல் மாலை வரை, தனது ஒவ்வொரு நிமிடத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, உலக மற்றும் ஆன்மீகப் பொறுப்புகளை நிறைவேற்றி வருவார்கள். இன்றைக்கு வரை, நவீன கால சூஃபி மாணவர்கள் யாவரின் வாழ்வின் இலக்கும் இதுவாகவே இருந்து வருகிறது. மக்ரிப் தொழுகைக்குப் பின் ஒரு மணி நேரம் தியானத்தில் வீற்றிருப்பார்கள். அதன் பிறகு இஷா தொழுகை, அதைத் தொடர்ந்து சுமார் 90 நிமிடங்கள் வரை ஸலவாத் ஓதுவதில் ஈடுபடுவார்கள். அதன் பிறகு இரவு உணவு, அதன் பின்னர், மாணவர்களின் பயன்

கருதி, அவர்களுடன் மார்க்க சம்பந்தமான உரையாடல். இரவு 11 மணிக்கெல்லாம், சபையை நிறைவு செய்து, 3 மணிக்கு தஹஜ்ஜத் தொழுகைக்குத் தயாராகும்படி அறிவுறுத்தி அனுப்பி வைப்பார்கள். அவர்களுக்கு முன்னரே தான் எழுந்து, பள்ளிவாசல் சென்று தஹஜ்ஜத் தொழுகையிலும், திக்ரிலும் ஈடுபட்டு விடுவார்கள். பெரும்பாலான நாட்களின் கால அட்டவணை இப்படித்தான் இருக்கும். ஆயினும், சில வேளைகளில், இஷா தொழுகைக்குப் பின்னர், இரவு முழுவதும் தியானத்திலேயே திளைத்து விடுவார்கள். விடியும் வரை அது தொடரும். அன்னார் எப்போதுமே, புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள். காலை வேளைகளில், புதுப்பொலிவுடன் தங்கள் வயல்வெளிகளுக்குச் சென்று, பயிர்களைப் பார்வையிடுவார்கள். அவ்வாறு செல்லும் தருணங்களில், மாணவர்களும் உடன் செல்லுவார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து போதனைகள் நடந்து கொண்டேயிருக்கும். மதிய உணவு, ளுஹர் தொழுகை, குரான் ஓதுதல் மற்றும் ஆன்மீகப் பரிமாற்றம் போன்றவற்றுக்காக சிறிது நேரம் இடைநிறுத்தம், அதன் பிறகு சிறுதுயில், பின்னர் மீண்டும் வயல்வெளிக்குச் செல்வது வழக்கமாக இருந்து வந்தது. விவசாயப் பணிகளுக்காக, ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்) அவர்கள், ஜுன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை உள்ளூரிலேயே தங்கியிருப்பார்கள். அறுவடைக்காலமும், விதைக்கும் வேலையும் நிறைவு பெற்றவுடன், மற்ற வேலைகளைத் தங்கள் புதல்வர்களிடம் பொறுப்பு சாட்டிவிட்டு, தரீக்காவின் பணிக்காக, வருடாந்திரப் பயணத்துக்கு ஆயத்தமாகிவிடுவார்கள். குறைந்த பட்சம் 3 மாதங்களை இப்புனிதப் பணிக்கு ஒதுக்கி விடுவார்கள். வருடா வருடம் தங்கள் செயல் திட்டங்களை நிறைவேற்றுவதில் உறுதியாகவும், அதே விஷயத்தில் மாணவர்களும் பொறுப்புடன்
நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி வருவார்கள். “பழத்தின் அருமையை வைத்தே, மரத்தின் பெருமை” என்பதைப் போல அவர்கள் தங்கள் ஆசிரியர் ஸெயித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களை முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டுமெனச் சொல்வார்கள். இந்த சூஃபிப் பாரம்பரியத்தின், மிக உன்னதமான சிகரத்தை அடைந்த, ஹஜ்ரத் ஸெயித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்)

அவர்களின் மாணவர்களாக இருப்பதால், அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, தங்களைத் தாங்களே அவர்களைப் போல் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது அன்னாரின் அறிவுரை.
உள்ளார்ந்த அருள் நோக்கு (தவஜ்ஜுஹ்) ஒரு முறை தரீக்காவின் பிரச்சாரப் பணிக்காக, தங்களின் தலை சிறந்த மாணவர் (பிரதிநிதி), ஹஜ்ரத் முஹம்மது ஸயித் கான் (ரஹ்),அவர்களைத் தேர்வு செய்து, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் பயணம் சென்று வருமாறு அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு புறப்பட்டுச் சென்றவர், மிக சீக்கிரத்திலேயே ஒரு வகை கலக்கத்தோடு திரும்பிவிட்டார். காரணம் கேட்ட போது, தெளிவான பதில் தரவில்லை. அவர்களைக் மிகவும் கடிந்து கொண்டார்கள். பின்னர் மீண்டும் அழைத்து, நேருக்கு நேர் அமர வைத்து, தங்களின் சக்தி வாய்ந்த உள்ளார்ந்த அருள் நோக்கினை (தவஜ்ஜுஹ்) அவர்கள் மேல் செலுத்தினார்கள். ஷேகின் கண்களிலிருந்து சுடர்விடும் ஒளிக்கற்றைகள் புறப்பட்டு வந்தது போலிருந்தது. இதன் விளைவாக, ஹஜ்ரத் முஹம்மத் ஸயித் கான் (ரஹ்) அவர்களின் அந்தரங்கத் தடைகள் மற்றும் இடையூறுகள் நீக்கப்பட்டு விட்டன. ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்) அவர்கள், உள்ளார்ந்த அருள் நோக்கு எனப்படும் தவஜ்ஜுஹ் செலுத்துவதற்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுத்தார்கள். இதயத்தின் இருண்ட திரைகளை நீக்குவதென்பது ஒரு சிக்கலான காரியம் என்று சொன்னார்கள்.

தத்தெடுத்தல்

ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்) அவர்கள், ஓரிரவு கனவொன்று கண்டார்கள். ஓர் இறந்த மனிதர், ஆனால் அவரின் இதயத்தில் ஒரு பிரகாசம் இருந்து கொண்டிருக்கிறது. இறந்த பிறகும், இவரின்
இதயத்தில் ஒளி இருந்து வரக் காரணம் என்ன என்று அறிய ஆவல கொண்டு விசாரித்ததில், அம்மனிதர் ஒரு அனாதைப் பிள்ளையை அரவணைத்து தன் சொந்தப் பிள்ளையைப் போல் வளர்த்தெடுத்தார் என்ற தகவல் கிடைத்தது. ஒவ்வொரு நற்செயலும், இறையருளோடு தொடர்புடையது என்பதை ஹஜ்ரத் விளங்கிக் கொண்டார்கள். தான்

பெற்ற குழந்தைகள் தன்னிடம் இருந்த போதும், ஒரு அனாதைக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தார்கள்.

வேலை மற்றும் சேவை மனப்பான்மை

தான் ஷெய்கு எனும் பொறுப்பில் இருப்பதால், தனக்கென்று முக்கியத்துவமோ, தனிப்பட்ட கவனிப்போ தரப்படுவதை மறுப்பார்கள். தனது மாணவர்களை சமமாகவும், மரியாதையோடும்
நடத்துவார்கள். ஒரு முறை ஒரு கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ள தம் சகாக்களோடு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். இடை வழியில் பயணம் தடை பட்டு எல்லோரும் இறங்க
வேண்டியதாயிற்று. கல்யாண வீட்டுக்காரர் ஹஜ்ரத் அவர்களுக்கு வேறொரு வாகனம் ஏற்பாடு செய்தனுப்பினார். அதில் அனைவரும் சேர்ந்து பயணிக்குமளவு இடமில்லாததால், நாங்கள் அனைவருமே கால்நடையாக அங்கு வந்து சேர்கிறோம் என்று பணிவன்போடு சொல்லி, தம்முடன் வந்த சகாக்களோடு நடந்து செல்ல ஆரம்பித்தார்கள். சுட்டெரிக்கும் மே மாத வெயிலில், அன்னார் பல மைல் தூரம் நடந்தே சென்றார்கள். அதுதான் அவர்களின் பெருந்தன்மையும், பணிவும். திரும்புமுன் தன்னோடு வந்தவர்கள் அனைவருக்கும், முறையான வாகன வசதி ஏற்பாடு இருக்கிறதா என உறுதி செய்து கொண்டார்கள். தங்கள் ஆசிரியர் ஹஜ்ரத் ஸயித் அப்துல் பாரி ஷாஹ்( ரஹ்) அவர்களின், அடக்கஸ்தலத்தை ஒட்டி ஒரு நிலத்தை வாங்கினார்
ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்). மேலும், பின்னாளில் வருகை தரும் யாத்ரீகர்கள் தங்கிச் செல்வதற்காக அவ்விடத்தில் ஒரு கட்டிடத்தையும் கட்டத் தொடங்கினார். கட்டுமானப் பணிகளைத் தாங்களே முன்னின்று ஒவ்வொரு அங்குலத்தையும் பார்வையிட்டு வந்தார். கட்டுமான தளத்தில் ஒவ்வொரு நாளும் வேலை ஆட்களுக்கு மத்தியில் வலம் வந்து வேலைகளை முடுக்கி விடுவார். அப்பகுதியில் உள்ள ஒரு நபர், வேலையாட்களுக்கு மத்தியில், ஒரு உயர்ந்த கண்ணியவான் நின்று கொண்டிருப்பதைக் கவனித்து, அது யார் என விசாரித்தார். அவர்தான், ஆஸம்கார் நகரின் ஷெய்கு என்று சொல்லப்பட்டது. நல்ல சந்தர்ப்பம் பார்த்து, அம்மனிதர் ஹஜ்ரத்திடம் வந்து, தாங்கள் மிக உன்னத அந்தஸ்தில் இருந்து கொண்டு, இவ்வாறு கட்டிட வேலையிடத்தில் வேலை செய்யலாமா என்று கேட்டு விட்டார். அதற்கு ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்), கடின உழைப்பும், சேவையும் எனக்கு கவுரவமே அன்றி சுமையல்ல என்று சொன்னார்கள். உலக ரீதியில் ஒரு சாதாரண விவசாயியாக இருந்த போதிலும், கிழக்கிந்தியாவில் சூஃபித்துவம் பரவ ஒரு முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். ஆயினும், சூஃபிப் பாரம்பரியத்திற்குள் மிகப்பெரும் பணிவுடையவராகவும், எளிமையானவராகவும் திகழ்ந்தார்கள். தங்களின் சாதனைகள் என்னவென்று கலந்துரையாடும் சந்தர்ப்பத்தில், ஒரு சில ஒளிரும் முகங்களை உருவாக்கியதே மிகப் பெரும் சாதனை என்று மெத்தப் பணிவோடு பதிலிறுத்தார்கள்.

Total
0
Shares
முந்தையது

ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்)

அடுத்தது

ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்)

தொடர்புடைய இடுகைகள்
மேலும் வாசிக்க

எமது ஞான குருமார்களின் பரம்பரை

ஓர் ஆசிரிய-மாணவர் உறவு மூலம் சூஃபி போதனைகள் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆசிரிய-மாணவத் தொடர்பும், ஒரு சங்கிலியின் இணைப்பாக உருவாகி, பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள்…
மேலும் வாசிக்க

ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்)

ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்) அவர்கள், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், உதய்ப்பூருக்கு அருகில் காங்குருலி எனும் நகரில் கி.பி.1920 ஆம் ஆண்டு பிறந்தார்கள். சிறு…
மேலும் வாசிக்க

ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்)

ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், மிகப் பெரும் ஞானியாகவும், உண்மையான ‘இன்ஸானே காமில்’ எனப்படும் பரிபூரண மனிதப் புனிதராகவும் இருந்தார்கள்.…
மேலும் வாசிக்க

ஷாதிலி

ஷேக் அபுல் ஹஸன் ஷாதிலி (கி.பி.1196/1197-1258) அவர்களின் பெயரிலிருந்தே ‘ஷாதிலி தரீகா’ பெயர்பெற்றுக் கொண்டது. வடக்கு மொரோக்கோவில், ஸியூட்டா எனும் நகருக்கருகில் “கிமாரா” எனும்…