ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், மிகப் பெரும் ஞானியாகவும், உண்மையான ‘இன்ஸானே காமில்’ எனப்படும் பரிபூரண மனிதப் புனிதராகவும் இருந்தார்கள். சூஃபித்துவ சிந்தனை மற்றும் நடவடிக்கைகளுக்கு அன்னார் வழங்கிய பங்களிப்பும், முக்கியத்துவமும், அகிலமெங்கும் அதிகமதிகம் அங்கீகரிக்கத் தக்கதாக இருக்கின்றது.
இந்தியாவின் வங்காள மாகாணத்தில், பால்காடி எனும் கிராமத்தில் கி.பி.1859 ல் ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள் பிறந்தார்கள். அன்னாரின் தந்தை, இறையியல் மற்றும் ஆன்மீக அறிவியல் ஆகிய இரு துறைகளிலும் நிபுணராகவும், மேலும் ‘ரசவாதம்’ எனப்படும் பொருட்களை ஒரு தன்மையிலிருந்து வேறொன்றாக மாற்றம் பெறச்செய்யும் கலையிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்கள் ஆறு வயதினராக இருக்கும் போதே அன்னாரின் தந்தை காலமாகி விட்டார்கள். அவர்களை சிறு பிராயத்திலிருந்து வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு முழுவதுமாக தாயாரை வந்தடைந்தது. கணவரின் விருப்பத்துக்கிணங்க, ‘பால்காடி’ எனும் ஊரிலிருந்து கல்கத்தா அருகிலிருக்கும் ‘ஹூக்லி’ எனும் நகருக்கு இடம் பெயர்ந்து, பஞ்சு நூல் சுற்றி தங்கள் பிழைப்பை நடத்தி வந்தார்கள். பொறுமைக்கும், நன்றியறிதலுக்கும் அவ்வம்மையாரின் வாழ்வு ஒர் சிறந்த முன்மாதிரியாக இருந்தது. சிறுவயதாக இருந்த போதிலும், ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்கள் மிகப் பொறுப்புள்ளவர்களாக, அன்னைக்கு உதவி ஒத்தாசையாக சிறு சிறு வேலைகளை மனமுவந்து செய்து, குடும்ப வருமானத்துக்கு உறுதுணையாக இருந்து வந்தார்கள். சிறிதுகாலம் கடந்த பின்னர், உறவினரின் வேண்டுகோளுக்கிணங்க அக்குடும்பம் ஹூக்ளியிலிருந்து ‘நால்டங்கா’ எனும் ஊருக்குக் குடியேறியது.
ஒருமுறை ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ்(ரஹ்) அவர்கள் சிறு பிராயத்திலிருந்த போது, ஒரு சில சிறார்கள் அவர்களிடம் வந்து, தேங்காய்த் திருடுவதற்கு அவர்களுக்குத் துணையாக வரும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆரம்பத்தில் அவர்களோடு செல்வதற்கு மறுப்புத் தெரிவித்த போதிலும், வந்தவர்களின் வற்புறுத்தலின் பேரில், அவர்களோடு சேர்ந்து கொள்ள ஆமோதித்தார்கள். தென்னை மரத்தைக் கண்டதும், அச்சிறுவர்கள் அனைவருமாகச் சேர்ந்து தேங்காய்களைப் பறிக்கத் தொடங்கினார்கள். ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்களை, யாரேனும் வருகிறார்களா என்பதை அருகாமையில் நின்று கண்காணித்துக் கொண்டிருக்குமாறு பணித்தார்கள். தென்னை மரங்கள் யாவும் ஒரு மயானத்திற்கருகில் இருந்தன. திடீரென, ஒரு இறந்த மனிதர், தன்னை நோக்கி நடந்து வருவதை ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்கள் கண்டார்கள். அந்த மனிதர் கூறினார்: “நல்ல குழந்தாய்!, நீ இந்த நோக்கத்திற்காகப் பிறக்கவில்லையே.” இதைக் கேட்ட மாத்திரத்திலேயே, ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்கள் தன்னுடன் வந்தவர்களைப் பிரிந்து, வீடு நோக்கித் திரும்பிவிட்டார்கள்.
ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்கள், முறையான கல்வி பெறவில்லை. அவர்கள் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்கள். ஆனால், இவ்வகையான கல்வி அமைப்பை விரும்பாததால், பள்ளியிலிருந்து வெளியேறி, பல்வேறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள். இறுதியாக நல்ல ஊதியத்தில் ரயில்வேத் துறையில் ஒரு பதவி வாய்த்தது. அதன்மூலம் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையும், நண்பர்களின் குழாமிலிருத்தலும் கிடைத்திருக்கும்.
ஓரிரவு, ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்கள் தங்கள் தந்தையாரைக் கனவில் தரிசித்தார்கள். அவர்கள் சொன்னார்கள் : “ரயில்வேத் துறையில் பணிபுரிவதை என்னால் அனுமதிக்க இயலாது, ஏனெனில் அவ்வேலையிடத்தில் ஊழல் மலிந்து கிடக்கின்றன”. அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், உள்ளத்தால் இப்பணியிலிருந்து நீங்கிட வேண்டுமென்று எண்ணி, காலையில் எழுந்ததுமே, அப்பணியிலிருந்து விலகிக்கொள்ள முடிவு செய்தார்கள். அவர்களின் அரபி ஆசிரியரும், ஒரு சில நண்பர்களும் சேர்ந்து அவர்களின் ராஜினாமாவைத் தடுக்க முயற்சித்தனர். மேலும், இம்மாதிரியான வேலையை மீண்டும் பெறுவதென்பது கடின காரியம் என எச்சரித்தனர். அவர்களின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாது, ரயில்வேத் துறையிலிருந்து விலகினார்கள்.
அதன்பிறகு குறுகிய காலத்திலேயே, அன்னார் வயிற்றுக்கடுப்பால் அவதியுற்றார்கள். அக்கடுமையான பாதிப்பைப் பார்த்தவர்கள் அவர்களால் உயிர் பிழைக்கமுடியாது என்றே கருதினர். இந்நிலையில் மீண்டும் தங்கள் தந்தையாரைக் கனவில் கண்டார்கள். அவர்கள் ஏதோ ஒரு பொருளை, உண்பதற்காக அவர்களுக்கு வழங்கவே, அதனை வயிறு நிரம்ப உண்டார்கள். விழித்துப் பார்த்த போது, அவர்கள் சுகமடைந்திருப்பதை உணர்ந்தார்கள். மேலும் சில தினங்களிலேயே முழுவதுமாக பரிபூரண உடல் நலம் பெற்றுவிட்டார்கள். இப்போது, அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள் முற்றிலுமாக மாறிவிட்ட ஒரு நபராக, அதிமான நேரத்தை ஆன்மீக வழிபாடுகளில் கழிப்பவர்களாக ஆகிவிட்டார்கள். மேலும், அவ்வழியில் வழிகாட்டக்கூடிய ஆன்மீக ஆசானையும் தேடத் தலைப்பட்டு விட்டார்கள்.
ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் ஆலவி (ரஹ்) அவர்களின் தந்தையாரும், சிஷ்தியா தரீக்காவின் மாபெரும் மஹானுமாகிய, ஹஜ்ரத் கரீம் பக்ஷ் அவர்கள் தற்செயலாக பால்காடி எனும் ஊரைக் கடந்து செல்லும் சந்தர்ப்பத்தில், அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள் முதன்முறையாக பைஅத் எனும் தீட்சை பெற்றுக்கொண்டார்கள். அன்னாரின் அறிவுரையின்படி ‘ஃபாஸ் அன் ஃபாஸ்’ எனும் ‘மூச்சு விழிப்புணர்வுப் பயிற்சியை’ மேற்கொள்ளும்போது, அவர்களின் இதயம் திறக்கலானது. அவர்கள் இவ்வனுபவம் பெற்றதால், மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளானதோடு, அதிக ஆர்வமெடுத்து, தங்களைத் தாங்களே உற்சாகத்தோடு இப்பயிற்சிகளில் ஈடுபடுத்திக் கொள்ளலானார்கள். ஆனால் அவர்களின் வருத்தமென்னவெனில் அவர்களால் மீண்டும் அந்த ஷேகைக் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை.
ஒரு நாள் இவர்கள் திக்ரில் ஈடுபட்டிருக்கும் போது, சிஷ்தியா தரீக்காவின் நிறுவனரான, ஹஜ்ரத் காஜா மொயினுத்தீன் சிஷ்தி அவர்கள் தோற்றமளித்து, ‘இச்சூஃபித்தொடரின் வரிசையில் ஏதும் தவறில்லாதிருப்பினும்’, எதிர்வரும் காலங்களில் அவர்களே வந்து ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்களுக்குப் பயிற்சியினை வழங்கப் போவதாகக் கூறினார்கள். அந்நிகழ்ச்சியிலிருந்து, ஹஜ்ரத் மொயினுத்தீன் சிஷ்தி அவர்களே வந்து, ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்களுக்கு ‘தவஜ்ஜுஹ்’ வழங்கி வந்தார்கள். ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்கள் நம்முடைய ‘பெரிய ஷேக்’ ஹாமித் ஹஸன் ஆலவி (ரஹ்) அவர்களிடம், “இது ஒரு காட்சிதான் என சாதாரணமாக எண்ணி விட வேண்டாம். நீங்கள் எவ்வாறு என் முன்னால் அமர்ந்துள்ளீர்களோ, அதைப்போலவே அவர்களும் வந்தமர்ந்து கொள்வார்கள்” என இதுபற்றிக் கூறுவார்கள். ஹஜ்ரத் காஜா மொயினுத்தீன் சிஷ்தி (ரஹ்) அவரகள், இப்பாதையின் தலங்களைக் கடந்து செல்வதற்கு உதவியாக இருந்தார்கள். இதுகுறித்து, ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது : “எப்போதெல்லாம் கடினமான தடைகளை எதிர்கொள்ள நேர்ந்ததோ, மேலும் அத்தடைகளைக் கடந்து உயர்நிலையை அடையும் ஆற்றல் என்னில் குறைவாக இருப்பதை உணர்வேனோ, அப்போதெல்லாம் ஹஜ்ரத் காஜா மொயினுத்தீன் சிஷ்தி (ரஹ்), தங்களின் சிறப்புத் தன்மையால், என்னை மேலே தூக்கி விடுவார்கள்”. நான் கேட்பேன்: “ஹஜ்ரத்! இத்தலம் தானா இப்பயணத்தின் இலக்கு என்று”. அவர்கள் எப்போதும் இப்பதிலையே கூறுவார்கள் : “இல்லை, இலக்கு இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது.” இறுதியாக ஒருநாள் வரும் வரைக்கும், அன்றைய தினம் சொன்னார்கள், ” இப்போது நீங்கள் வந்து சேரவேண்டிய இடத்தை அடைந்து விட்டீர்கள்.”
ஒருமுறை புனித ரமளான் மாதமும், மழைக்காலமும், ஒரு சேர வந்த போது, ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்கள், தங்களிடம் ஒரே ஒரு பைஸா நாணயம் மட்டுமே மீதமிருக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். அந்த ஒரு பைஸாவில் அவர்கள் வாங்கிய கொஞ்சம் தானியம், அவர்களுக்கும் அவர்கள் மனைவிக்கும் மேலும் இரு தினங்களை சமாளிக்கப் போதுமானதாக இருந்தது. இறுதியாக அவர்களின் பொருளாதார நிலை எந்த அளவு மோசமாகிவிட்டதெனில், வீட்டில் அந்த ஒரு பைஸா கூட இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில், இந்தக்கால கட்டத்தை நினைவு கூர்ந்தவர்களாக, ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள், ” நான் சோதனைக்குள்ளாக்கப்படுவதைப் பற்றி பயப்படவில்லை. என் கவலையெல்லாம் என் துணைவியாரைப் பற்றித்தான் இருந்தது. எங்கே அவள் இக்கஷ்டங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள இயலாது, பொறுமை இழந்து விடுவாளோ என்பதுதான் என் சிந்தனையாக இருந்தது. “உயர்ந்த ஆன்மாக்களின் சகவாசத்திலிருக்கும் காரணத்தால் இதர ஆன்மாக்களும் கூட அத்தகு உயர்நிலையை வெளிக்காட்டுகின்றன” என்பதற்குச் சான்றாக, அன்னார் தம் துணைவியாரின் மனோபக்குவம் எப்படி ஆகிவிட்டதெனில், அண்டை அயலார்கள் எவரும் இவர்கள் பட்டினிகிடக்கிறார்கள் என சந்தேகப்படலாகாது என்பதற்காகவே, வெற்றுப்பானையில் வெறும் நீரை நிரப்பி அடுப்பிலிட்டு சூடேற்றிக்கொண்டிருப்பார்கள்.
இதே நிலையில் இரு தினங்கள் உருண்டோடியது. தண்ணீரைக் கொண்டு மட்டுமே அவர்களால் நோன்பைத் திறக்க முடிந்தது. இவ்வாறான சூழலில், பெரிய மனிதர்களும் கூட, பொறுமை இழந்து இப்பாதையிலிருந்து சறுகி விடுவர். ஆயினும், ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள் முழு மூச்சோடு எல்லாப் பயிற்சிகளையும் ஒன்று விடாது நிறைவேற்றி வந்தனர். மரணம் மிக அருகாமையில் வந்துகொண்டிருக்கலாம் என்ற எண்ண மேலீட்டால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறந்த முறையில் ஆன்மீக அனுஷ்டனங்களை செய்து வந்தார்கள். அந்நேரம் மழை பொழிந்து கொண்டிருந்தது. வீட்டின் மேற்கூரை மிகப் பழமையானதால், மழை நீர் எல்லாப் பக்கமும் வழிந்தோடத் துவங்கியது. ஆனால், அவர்கள் ஈடுபாட்டோடும், ஆர்வத்தோடும் செய்து வரும் திக்ருகளை விட்டு விடவில்லை. ஏதேனும் ஒரு பானையையோ அல்லது பாத்திரத்தையோ தங்கள் தலை மீது சுமந்தவர்களாக, மழை நீரைத் தடுத்துக்கொள்வார்கள். மழை நின்ற பின்னர், பானையில் நிரம்பியிருக்கும் நீரை வெளியேற்றிவிட்டு, தொடர்ந்து தியானத்தில் மூழ்கிவிடுவார்கள்.
ஒரு நாள், ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள் இத்தகு பரிதாப நிலையில் தங்களின் பயிற்சிகளை ஈடுபாட்டோடு செய்து கொண்டிருக்கும் போது, ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களும், ஹஜ்ரத் ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களும், பிரகாசிக்கும் உடையணிந்து, உறையிலிருந்து உருவிய வாளுடன் அன்னார் முன் தோற்றமளித்தார்கள். அவர்கள் பலமுறை இவர்களிடம் வருகை புரிந்திருந்தாலும், இம்முறை அளித்த விஜயம் மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாக இருந்தது. ஒருவர் இவர்களது வலக் கரத்தைப் பிடித்துக்கொள்ள, மற்றவர் இடக் கரத்தைப் பிடித்துக் கொண்டு, இருவருமாகச் சேர்ந்து அன்னாரை ஒரு உயர்ந்த மேடையின் மீது நிற்க வைத்தார்கள். அவர்கள் இருவரும் கூறினார்கள் : “ஒ அப்துல் பாரி, இன்று முதல் நீங்கள் ஒரு ‘வலீ’யாகி விட்டீர்கள்”. ( வலீ என்பதன் நேரடிப்பொருள், இறைநேசர் அல்லது மஹான் என்பதாகும்)
இந்நிலையிலிருந்து மீண்ட பின்னர், ஆனாலும் தியானத்திலேயே இருக்கும்போது அன்னாரின் அறைக்குள்ளாக ஒருவர் வந்து சொன்னார்: “ஒ, ஹஜ்ரத் ஸய்யித், இக்குடிசையின் மேற்கூரை பயனற்று விட்டது. தயவு கூர்ந்து அதைச் சரி செய்ய என்னை அனுமதியுங்கள்”. இன்னொருவர் வந்து அன்னாருக்கு இரண்டு ரூபாய் அன்பளிப்பு வழங்கியதோடு, மரியாதையும் சங்கையும் அளித்துச் சென்றார். சுருங்கக் கூறுமிடத்து, பாதகமான காலங்கள் முடிவு பெற்றன. ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ்(ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: ‘இப்படிப்பட்ட காலத்திற்குப் பிறகு, ஒரு மாதத்தில் மூன்றோ அல்லது நான்கு தினங்களோ சில சமயங்களில் பசித்திருந்த போதிலும், பட்டினி கிடக்கும் ஒரு நிலையை மீண்டும் எதிர்கொள்ளவில்லை’. ஆன்மீகப் பாடங்கள் அனைத்தையும் நிறைவு செய்த பின்னர், ஹஜ்ரத் காஜா மொய்னுத்தீன் சிஷ்தி (ரஹ்) அவர்கள், அன்னாரைத் தங்களின் கலீஃபாவாக( பிரதிநிதியாக) நியமித்ததோடு, மற்றவர்களுக்கும் சிஷ்தியா தரீக்காவின் போதனைகளைக் கற்றுக்கொடுக்க அனுமதியளித்து விட்டார்கள்.
சிறிது காலம் சென்றபின்னர், அக்காலத்தின் மாபெரும் முஜத்திதாகத் திகழ்ந்த ஹஜ்ரத் மௌலானா குலாம் ஸல்மானி (ரஹ்) அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களுக்கு ஏற்பட்டது. ‘லாதாயிஃபே அஷ்ரா’வின் (பத்து உணர்வு நுட்ப மையங்கள் )பயிற்சிகளை நிறைவு செய்த பின், ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்கள், ஷேக் ஸல்மானி அவர்களிடம், தங்களின் மாணவராக்கிக் கொள்ளுமாறு வேண்டினார்கள். ஆனால், அந்த ஷேக், இவர்களின் வேண்டுகோளை ஏற்கவில்லை. அதனால் படு ஏமாற்றத்துக்குள்ளானார்கள். அவர்கள் தியானத்தில் இருக்கும் நிலையில் ஷேக் அஹ்மது ஃபாரூகி சர்ஹிந்தி (ரஹ்) அவர்கள் தோன்றி, அவர்களின் கவலைக்குக் காரணம் யாது? என வினவினர். நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டபின், ஷேக் அஹ்மது ஃபாரூகி சர்ஹிந்தி அவர்கள், “இப்போது ஷேக் ஸல்மானி அவர்களிடம் செல்லுங்கள். இம்முறை அவர்கள் உங்களைத் தம் மாணவராக்கிக் கொள்வர்” எனக் கூறினார்கள். அவர்களின் அறிவுரைப்படி மீண்டும் ஷேக் ஸல்மானி அவர்களைச் சந்தித்து, ஷேக் அஹ்மது ஃபாரூகி சர்ஹிந்தி (ரஹ்) அவர்களோடு நடந்த உரையாடலை விவரித்தார்கள். அதனைக் கேட்டபின்னர், ஷேக் ஸல்மானி அவர்கள், ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களுக்கு முஜத்திதி தரீக்காவின் ‘பைஅத்’ எனும் தீட்சையை வழங்கினார்கள்.
வெளிப்படையாக ஷேக் ஸல்மானி அவர்கள், ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களின் ஆன்மீக ஆசானாக இருந்த போதிலும், அந்தரங்கத்தில் ஷேக் அஹ்மது ஃபாரூகி சர்ஹிந்தி (ரஹ்) அவர்களே தொடர்ந்து இவர்களுக்கு, ‘தவஜ்ஜுஹ்’ செலுத்துபவர்களாக இருந்து வந்தார்கள். ஏனைய பெரும் சூஃபித்தொடர்களின் நிறுவனர்களான ஹஜ்ரத் ஷேக் அப்துல் காதிர் ஜீலானி,ஷேக் அபுல் ஹஸன் ஷாதிலி மற்றும் ஷேக் பஹாவுத்தீன் நக்ஷ்பந்தி போன்ற மஹான்கள் உட்பட அனைவரும், உவைஸி எனும் வழிமுறை மூலம் இவர்களைத் தங்களின் பிரதிநிதியாக்கியதோடு, அந்தந்த சூஃபித்தொடர்களைப் போதிப்பதற்கும் அனுமதி வழங்கிவிட்டார்கள். அதே உவைஸி வழிமுறையிலேயே, ஹஜ்ரத் உவைஸுல் கர்னீ (ரலி) அவர்களும் அவர்களின் சூஃபித்தொடரினை போதிக்க அனுமதி வழங்கியதோடு, அவர்களின் பிரதிநிதியாகவும் நியமித்து விட்டார்கள்.
சுருங்கக்கூறுமிடத்து, ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், சிஷ்தி,காதிரி,முஜத்திதி,நக்ஷ்பந்தி மற்றும் ஷாதிலி ஆகிய தரீக்காக்களில் மாணவர்களுக்கு பைஅத் செய்யவும், பயிற்சிகளைப் போதிக்கவும் அனுமதி பெற்றுக்கொண்டார்கள். அதே நேரத்தில், அல்லாஹ்வின் பேரருளால், ஆன்ம உலகில், அன்னார் பல்வேறுபட்ட ஆன்மீகப் படித்தரங்களையும், பதவிகளையும் மற்றும் உயர்ந்த நிலைகளையும் பெற்றுச் சிறந்தார்கள்.
கல்கத்தாவில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவர் நாற்பது அப்தால்களில் ஒருவராக இருந்தார். ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரிஷாஹ் (ரஹ்) அவர்கள், சில சமயங்களில் அவரைச் சந்திக்கச் செல்வது வழக்கம். அம்மூதாட்டி இறப்பெய்திய பொழுது, இவர்களின் கஷ்ஃப் எனும் ஞானப்பார்வையின் மூலம், அவ்வம்மையார் செய்து வந்த அப்தாலின் பணிகளை நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
அக்கால கட்டத்தில் மக்காவில் வாழ்ந்த ஷேக் அபுல் ஹஸன் (ரஹ்) அவர்கள், ‘குத்புல் மதாராக’ (பிரபஞ்சத்தின் அச்சாணி) செயல்பட்டு வந்தார்கள். அன்னார் தங்கள் கவனத்தை ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்களின் பால் திருப்பி, அவர்களோடு ஒரு ஆன்மீகத் தொடர்பை உருவாக்கிக் கொண்டார்கள். அந்த ஷேக், ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்களை அவ்வப்போது சந்தித்து ‘தவஜ்ஜுஹ்’ செலுத்துவது வழக்கமாக இருந்தது. சில சமயம் ஷேக் அவர்கள் ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்களிடத்தில் வருவார்கள், சில சமயம் ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் அவர்கள் ஷேகைச் சந்திக்க ‘புனித மக்கா’ செல்வார்கள். நம்முடைய ‘பெரிய ஷேக்’ ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் ஆலவி (ரஹ்) அவர்கள் இவ்விஷயத்தைப் பற்றிக் கேள்வியுற்றபோது, இருவரின் தங்குமிடங்களும் வெகு தொலைவில் இருப்பது குறித்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரிஷாஹ் அவர்களோ, “ஆன்மீகப் பயணத்தில் காலமும், இடமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது” என விளக்கினார்கள்.
ஷேக் அபுல் ஹஸன் அவர்களின் இன்னுயிர் பிரிந்த போது, திருமக்கா நகரில், புனித கஅபா ஷரீஃபின் அருகாமையில் ஒரு கூட்டம் குழுமியிருந்தது. ‘குத்புல் மதார்’ எனும் அவ்வுயர் பதவிக்காக மாபெரும் பல இறை நேசர்கள் வருகை தந்திருந்தார்கள். அங்கே ஹஜ்ரத் அவர்களும் ஆஜராகியிருந்தார்கள். ஆனால் அவர்களோ தங்களைத் தாங்களே எல்லோரை விடவும் அந்தஸ்த்தில் குறைவானவர்களாகவும், அவ்வுயர் பதவிக்கு அறவே தகுதியற்றவர்களாகவும் எண்ணிய நிலையில், கடைக் கோடியில் நின்று கொண்டிருந்தார்கள்.
அக்கூட்டத்தினிடையே, முத்துக்களும் வைர வைடூரியங்களும் பதித்த கிரீடத்தை கரங்களில் ஏந்தியவாறு, ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நுழைந்து, ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களின் பெயர் கூவி அழைக்க, அன்னார் அவர்களின் முன்னால் போய் நின்று கொண்டார்கள். ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலை), அந்த மணி மகுடத்தை ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களின் தலையில் அணிவித்து கௌரவித்தார்கள். மேலும் புனித கஅபாவைச் சுட்டிக்காட்டி, “நீரே இன்று முதல் இம்மாளிகையின் பாதுகாவலர்” என அறிவிப்புச் செய்தார்கள். அதன் பிறகு, ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள் ‘குத்புல் மதார்’ எனும் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி வந்தார்கள்.
ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், குறிப்பாகத் தாங்கள் அனுமதி பெற்ற சூஃபித் தொடர்களிலும், மற்றும் ‘தஸவ்வுஃப்’ எனப்படும் ஆன்மீக ஞான நெறிப்பாதையிலும் செய்த பங்களிப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஹஜ்ரத் ஷேக் அஹ்மது ஃபாரூகி ஸர்ஹிந்தி (ரஹ்) அவர்கள், முன்பே ‘இந்திராஜுன் நிஹாயத் ஃபில் பிதாயத்’ எனும் கோட்பாட்டை இணைத்ததன் மூலம் நக்ஷ்பந்தி தரீக்காவை முழுமையடையச் செய்து விட்டார்கள். ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், ‘இந்திராஜுன் நிஹாயத் ஃபில் பிதாயத்’ எனும் முறையை ஏனைய தரீக்காக்களிலும், அந்தந்த தரீக்காக்களின் நிறுவனர்களின் அனுமதியோடு அறிமுகம் செய்து விட்டார்கள்.
ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், சீடர்களை உருவாக்கும் அமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தார்கள். சூஃபி பயிற்சிகளைத் தொடங்கும் முன்னர், தனி நபரொருவர் ‘முரீத்’ அல்லது ‘முரீதா’ ஆக வேண்டுமென்ற ‘வழக்கத்திலுள்ள நிர்ப்பந்தம்’ பற்றி அன்னார் மன நிறைவு கொள்ளவில்லை. ‘முரீத்’ அல்லது ‘முரீதா’ ஆகாமலேயே, தேட்டவான் ஒருவர், ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியதன் மூலம், மேற்கூறப்பட்ட சம்பிராதய மரபுக்கு ஓர் முற்றுப் புள்ளி வைத்து விட்டார்கள். ஆயினும், பத்து அகமிய நுட்பங்களின் பயிற்சியினை நிறைவு செய்த பின்னர், ‘முரீத்’ ஆகாமல் பயணத்தைத் தொடர்வதென்பது மாணவர்களுக்குக் கடினம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று, நமது சூஃபித்தொடரின் தனிப்பட்ட சிறப்பம்சம் யாதெனில், பயிற்சிகளை மேற்கொள்வதற்கு முன்னர், மாணவர் யாரும் முரீதாக வேண்டுமென்ற அவசியமில்லை. பத்து லதாயிஃப்களின் பயிற்சிகளை நிறைவு செய்த பின்னரே, மாணவர்கள் இத்தகைய கடப்பாட்டை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனைய சூஃபித் தொடர்களில், பயிற்சிகளைத் தொடங்குவதற்கே ஒருவர் ‘முரீத்’ ஆகி இருக்க வேண்டுமென்பது கட்டாயமாக இருக்கிறது.
ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களுக்கு ‘முஹாஃபிஸே உலும்’ எனும் ஷரீயத்தையும், தரீக்கத்தையும் திறம்பட பாதுகாக்கும் உயர் பணியும் வழங்கப்பட்டிருந்தது. ஆகையினால், ஷரீயத்துக்கும் தரீக்கத்துக்கும் இடையேயான கருத்து வேற்றுமைகள் களையப்பட்டு, ஒரு நல்லிணக்கச் சூழல் நிலவும் என நாம் நம்பிக்கை வைக்கிறோம்.
ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், அக்காலத்தின் ‘குத்புல் மதார்’ (பிரபஞ்சத்தின் அச்சாணி) ஆக மட்டுமின்றி, ‘குத்புல் இர்ஷாத்’ (ஆன்மீக வழிகாட்டுதலின் அச்சாணி) எனும் தகுதியினையும் பெற்றுத் திகழ்ந்தார்கள். முன்னர் வாழ்ந்த மெஞ்ஞானிகளில், மிகச் சிலரே இத்தகைய இரு பதவிகளையும் ஒரு சேரப் பெற்றிருக்கும் தனிச் சிறப்புரிமையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். உலகம் ஒரு போதும் ‘குத்புல் மதார்’ இன்றி இருந்ததில்லை. ஒருவர் மறைந்த அடுத்த கணமே, மற்றொருவர் அப்பதவிக்கு அமர்த்தப்படுவர். ஆனால் ‘குத்புல் இர்ஷாத்’ எனப்படுபவர் எப்போதும் உயிருடனே இருக்க வேண்டுமென அவசியமில்லை. ஏனெனில், அத்தகையவர்களின் ஆன்மா உடலை விட்டுச் சென்ற பிறகும், அப்பணிகளை செவ்வனே நிறைவேற்றி வந்து கொண்டிருக்கும்.
பெருமானார் (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அலி(ரலி) மற்றும் ஏனைய இமாம்கள் மட்டுமே ‘குத்புல் இர்ஷாத்’ எனும் உயர் பதவிக்குரியவர்களாக, தேட்டவான்களுக்கு ‘விலாயத்’ எனும் வலீத்தன்மையை வழங்கும் தகுதியுள்ளவர்களாக இருந்ததைப் போலவே, ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களும் அத்தகைய தனிச்சிறப்புரிமை பெற்றுத் திகழ்ந்தார்கள். ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் முதல் ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள் வரைக்கும் எந்த ஷைகும் இத்தகு உயர் பதவியை வகித்திருக்கவில்லை.
ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனித ஆன்மா, உடலை விட்டு பிரிந்த பின்னரும், இப்பணிகளைச் செய்து வந்து கொண்டிருக்கிறது. ஷேக் அஹ்மது ஃபாரூகி ஸர்ஹிந்த் (ரஹ்) அவர்கள், இப்பணிகளை நிறைவேற்றி வந்த போதும், தங்களைத் தாங்களே ஷேக் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பிரதிநிதியாகவே கருதிக் கொள்வார்கள். அன்னார் இது குறித்து எழுதும்போது, இப்பொறுப்பானது ஷேக் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் ஆன்மாவோடு சம்பந்தப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இப்பொறுப்பானது, அன்னாரின் கலீஃபா எனும் பிரதிநிதி அந்தஸ்தில் வழங்கப்பட்டதென மொழிகிறார்கள். மாறாக, ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களோ, இவ்விஷயத்தில் தனிப்பட்ட அங்கீகாரம் பெற்றிருக்கிறார்கள். எனவேதான், அன்னார் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சுமார் நூறாண்டுகளுக்கு மேலாகியும், அவர்கள் தம் புனித ஆன்மா, இன்னும் ஆன்மீக வழிகாட்டுதலை வழங்கிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள் தங்கள் மாணவர்களிடத்தில்,”நீங்கள் வேறெங்கும் செல்லத் தேவையில்லை. நான் இதனைத் தற்பெருமையினால் பேசுகிறேன் என எண்ணி விட வேண்டாம். நானோ தன்னலமற்றவன். மேலும், இதனை உங்கள் நலன் கருதியே சொல்லுகின்றேன்” எனக் கூறுவார்கள். தங்களை அவ்வபோது ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களோடு ஒப்பிட்டுக் கூறுவார்கள். அன்னார் தங்களின் இருவிரல்களை ஒன்றோடொன்று இணைத்தவர்களாக, “நானும்,அவர்களும் இவ்விரு விரல்களைப் போல இணைந்திருக்கிறோம். எங்கெல்லாம் அவர்கள் பிரசன்னமாயிருப்பார்களோ, அங்கெல்லாம் என்னையும் வந்து இணைந்து கொள்ளுமாறு பணிப்பார்கள்” எனக் கூறுவார்கள்.
ஒரு முறை ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களுக்கு, ஓர் கப்ருக்கருகில் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது. இறந்தவர்களுக்கு, வெளிப்படையாகச் செய்யும் மரியாதை நிமித்தம், அன்னார் அக்கப்ருக்கருகில், சிறிது நேரம் நின்றார்கள். மக்களெல்லாம், அக்கப்ரில் உள்ளவர்கள் ‘வலீ’ தானா என வினவத் தொடங்கினர். அதற்கு ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், “அவர் முன்னர் வலீயாக இருக்கவில்லை. ஆனால் இப்போது வலீயாகி விட்டார்” என்றனர்.
ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், மாணவர்களிடத்தில் கபடமற்றவர்களாகவும், திறந்த மனம் படைத்தவர்களாகவும் இருந்ததுடன், தனக்கென எந்த ஒரு தனித்துவமான சிறப்புகளை விரும்பாதவர்களாகவும் இருந்து வந்தார்கள். எப்போதெல்லாம் நமது ‘பெரிய ஷேக்’ அவர்களின் இல்லத்தில் தங்கும் சந்தர்ப்பம் ஏற்படுமோ, அப்போதெல்லாம் அவர்களைப் பற்றி யாரும் கேட்கும் பட்சத்தில், ஒரு விருந்தாளி தங்கியிருக்கிறார் என்று மட்டும் சாதாரணமாகச் சொல்லி விடும்படிக் கூறுவார்கள். மாணவர்களிடத்தில் மிக அரிதாகவே கண்டிப்புக் காட்டுவார்கள். கண்டிக்க வேண்டும் என அன்னார் நினைக்கும் சந்தர்ப்பத்தில், “உம்மிடம் ஒழுக்கம் குறைந்து விட்டது” என்ற வார்த்தைகளை மட்டுமே உபயோகிப்பார்கள். எந்த அளவு இரக்கமும், கனிவும் உடையவர்களெனில், அவ்வாறு கண்டித்த அடுத்த கணமே, “உங்களின் தவறான செயலுக்கு நானே பொறுப்பாளன்” என சேர்த்துக் கூறுவார்கள்.
அன்னார் தங்களின் பெரும்பகுதி நேரத்தை தியானத்திலேயே கழிப்பார்கள். ஓரே அமர்வில் தொடர்ந்து மூன்று மணி நேரம் இருந்து விடுவார்கள். அவ்வப்போது முழு இரவும் தியானத்திலேயே கழிந்து விடும். ஆனாலும், காலையில் புதுப் பொலிவுடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவார்கள். மாணவர்களைத் தங்களின் சொந்த மகனைப் போன்றும், மகளைப் போன்றும் அன்பு பாராட்டுவார்கள். மாணவர்களும் அன்னாரை அளவு கடந்து நேசிப்பதுடன், மற்ற ஷேகுமார்கள் எவ்வளவு பெரிய அந்தஸ்துக்குரியவர்களாக் இருந்த போதும், அவர்களின் பக்கம் கவனம் திசை திரும்பாதவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்கு, ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வரும் பணியாளர், ஒரு முறை தண்ணீர் கொண்டு வர நதிக்கரைக்குச் சென்றார். தொலைவில் கிழ்ர் (அலை) அவர்களைப் போலொருவர் இவரை அழைப்பதைச் செவியுற்றார். அவரை நோக்கி இப்பணியாளர், “நான் ஏன் உம்மிடத்தில் வர வேண்டும்? யாருடைய அருகாமையின் காரணத்தால் நீர் அழைக்கிறீரோ, அந்த என் ஆசிரியரிடத்திலல்லவா நான் போக வேண்டும்?” என பதிலுரைத்தார்.
ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள் முறையான கல்வி பெற இயாலாமல் இருந்தார்கள். ஆனால் ‘இல்மெ லதுன்னி’ எனப்படும் கற்றுக்கொள்ளாமல், அறியாப்புறத்திலிருந்து வழங்கப்படும் ஞானத்தின் உதவியால், எத்தகைய வினாக்களுக்கும், கிதாபுகளின் பெயர், குறிப்பிட்ட பக்கம் மற்றும் வரி எண் உட்பட அனைத்து விவரங்களுடன் பதிலளிப்பவர்களாக இருந்தார்கள். அது பார்ப்பதற்கு, அனைத்து ஞானங்களும், அறிவியல்களும் அன்னாரின் முன்பாகத் திறந்து கிடப்பது போன்று தோற்றமளிக்கும்.
ஒரு நாள் ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ்(ரஹ்) அவர்கள், தங்கள் வீட்டின் ஓர் மூலையில் ‘ஒழு’ (நீரால் பரிசுத்தப்படுத்திக் கொள்ளுதல்) செய்து கொண்டிருந்தார்கள். அவ்வறான நிலையில் அவர்களின் மனதை ஓர் சிந்தனை ஆட்கொண்டது. அதாவது: “நானோ தன்னந்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் ஏழை. இந்த ஆன்மீகத்தொடர் என்னோடு மட்டும் முடிந்து விடுமோ!”. இந்த சிந்தனை அவர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கி விட்டது. ஆனால், மறுகணமே இறைவனின் புறத்திலிருந்து வெளிப்பட்ட ஓர் அடையாளம் அவர்களை மகிழ்ச்சியிலாழ்த்தியது. இறைவன் இவ்வான்மீகத் தொடரை, கிழக்கிலிருந்து மேற்கிற்கும், தரையிலிருந்து கடலுக்கு அப்பாலும் பரவச் செய்வான் என்பதைத் தெரிந்து கொண்டார்கள். இறைவனின் பேரருளால், இன்று நாம் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அடையாளச் சின்னங்களைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.