ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்) அவர்கள், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், உதய்ப்பூருக்கு அருகில் காங்குருலி எனும் நகரில் கி.பி.1920 ஆம் ஆண்டு பிறந்தார்கள். சிறு வயதிலிருந்தே ஆன்மீக ஈடுபாடுகளில் வலுவான ஆர்வமுடையவர்களாகக் காணப்பட்டார்கள். அன்னாரின் வளரும் மனம், விரைவிலேயே, எளிதில் புரியவைக்க இயலாத கேள்விகளால் சூழ்ந்து கொண்டது. “மனித உடல் மற்றும் மன ரீதியான அனுபவங்களுக்கப்பால், வேறேனும் சக்தி இருந்து கொண்டிருக்கிறதா ? இறைவன் இருக்கின்றானா ? இறைவன் ஒருவனென்றால் ஏன் மதங்கள் வேறுபடுகின்றன ?” மேலும், பிரார்த்தனை புரியும் மனிதர்களைப் பார்த்து வியந்தவர்களாய்,”பிரார்த்தனைகளுக்கு உண்மையிலேயே பதிலளிக்கப்படுகிறதா ? அல்லது அவை வெறுமனே உளவியல் சார்ந்த விளைவுகளா ?” இவ்வாறான கேள்விகள், ஹஜ்ரத் அவர்களை இளமைக் காலம் முதலே பிழிந்தெடுத்தன.

ஹஜ்ரத் அவர்களின் இளமைக் காலம் எந்நகரில் கழிந்து கொண்டிருந்ததோ, ‘காங்குருலி’ எனும் அந்நகரானது, நீண்டகாலமாக, ஹிந்துக்களின் புனித நகராக இருந்தது. அந்நகரின் மிகப்பெரிய ஹிந்துக் கோவில், இந்தியா முழுவதும் உள்ள யாத்ரீகர்களை ஈர்த்ததால், வேதங்களைக் கற்றவர்களையும், பக்திமான்களையும், அவ்வப்போது சந்தித்து அளவளாவும் சந்தர்ப்பம், இள வயதினராய் இருந்த ஆஸாத் ரசூல் அவர்களுக்குக் கிடைத்தது. கல்வி கற்பதற்காக வேறொரு நகருக்குக் குடிபெயர்ந்த போதிலும், தங்களின் கோடைக்கால விடுமுறையைக் கழிக்க ‘காங்குருலி’க்கே திரும்பிவிடுவார்கள். இளைஞனாக இருக்கும் நிலையில், தங்களின் கேள்விகளையும், சந்தேகங்களையும், ஆன்மீகவாதிகளின் முன்னிலையில் வைத்துக் கலந்துரையாடுவார்கள்.
ஹஜ்ரத் அவர்கள், ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடக்க நிலையில் தொடங்கி, இளங்கலைப் பட்டப்படிப்பு வரை தொடர்ந்து அங்கேயே கல்வி கற்றார்கள். கல்லூரிக்கல்வியின் உழைப்பும், ஆன்மீக ஆர்வமும் ஒன்று சேர்ந்து, அவர்களுக்கு இளங்கலை கலையியல் (Bachelor of Arts) பட்டத்தை ஈட்டித் தந்தது. பிறகு அவர்கள், மற்றோர் இளங்கலைப் பட்டத்தைப் பெறுவதற்காக, அல்லாஹாபாத் பல்கலைக்கழகம் சென்றார்கள். அது இளங்கலை கல்வியியல் (Bachelor of Education) பட்டமாகும்.
ஹஜ்ரத் அவர்கள் வாழ்வில், ஜாமியா மில்லியாவின் இரு பேராசிரியர்கள் சிறப்புக்குரிய பங்காற்றினர். ஓருவர், ஹஜ்ரத் அவர்களின் வரலாற்றுப் பாட ஆசிரியரான, பேராசிரியர் முஜீப். இவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவராகவும், ‘இந்திய முஸ்லிம்’ எனும் புகழ்பெற்ற நூல் உட்பட எண்ணற்ற நூற்கலுக்கு ஆசிரியராகவும் இருந்தார்கள். ஹஜ்ரத் அவர்கள், பேராசிரியர் முஜீப் அவர்களை, ‘அன்பான நபர்’ என்றும் வெளிப்படையில் முறையான சூஃபியாக இல்லாவிட்டாலும், ‘நடத்தையிலும்,இயல்பிலும் சூஃபியின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பவர்’ என விவரிக்கிறார்கள். பேராசிரியர் முஜீப், அடிக்கடி ஹஜ்ரத் அவர்களை நோக்கிக் கூறுவதாது, “எல்லோரும் எதையாகிலும் ‘எடுத்துச்’ செல்வதற்கே முயற்சிக்கிறார்கள். ஆனால் நீங்கள் ‘கொடுக்கக்’கூடியவராக ஆக வேண்டும்”. பேராசிரியரின் இச்சொற்கள், அவ்விளம் வாலிபருக்குள்ளே ஆழமாக ஊடுருவியதுடன், பின்னர் அவரின் தொழிலுக்கான வாய்ப்புகளை வடிவமைக்கவும் உதவியது. ஹஜ்ரத் அவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய அந்த இரண்டாமவர், பேராசிரியர் டாக்டர் E.J. கேலாட் என்பவர். அவர் மிகவும் கனிவானவர். கிறிஸ்துவத்தைக் கற்றறிந்தவர். டாக்டர் E.J. கேலாட் அவர்கள், ஆங்கிலப் பாடம் போதித்ததோடு, விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு மேற்பார்வையாளராகவும், மேலும் ஹாக்கி அணிக்குப் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி வந்தார். ஹாக்கி அணிக்குத் தலைமை வகித்த ஹஜ்ரத் அவர்களுக்கு, டாக்டர் கேலாட் அவர்களோடு நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிட்டியது. “அவர் எங்களுக்கு மிக முக்கியமான பாடம் புகட்டினார்” என ஹஜ்ரத் அவர்கள் நினைவு கூர்வார்கள். அப்பேராசிரியர் கூறுவார்,” உன்னை மனிதனாக்கிக் கொள். முதலில் தகுதியை உண்டாக்கு. பிறகு ஆசைப்படு. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எதையும் அடைவதற்கு முன்னர், அதற்கான தகுதியுடையவனாக ஆகு”. டாக்டர் கேலாட், ஒரு முஸ்லிமாக இல்லாதிருந்தும், மாணவர்களிடம் கூறுவதாவது,” ஒரு சிறந்த, மாற்றம் பெற்ற முஸ்லிமாக இருப்பதற்கு முயற்சி செய்”. டாக்டர் கேலாட் அவர்கள், ஹஜ்ரத் அவர்களை அவ்வப்போது தங்கள் இல்லம் அழைத்து அளவலாவுவது வழக்கம். அங்கே அவர்கள் பைபிளின் கருத்துக்களையும், கிறிஸ்துவ ஆன்மீகத்தையும் மற்றும் இன்ன பிற பாடங்களையும் கலந்துரையாடுவர்.
டாக்டர் கேலாட் அவர்களின், அனைத்து சமய நெறிகளின் மீதான மரியாதையான போக்கு, மாணவர்களிடையே அனைத்து மதங்களின் மீதான ஆர்வத்தை ஆழமாக்கியது. ஹஜ்ரத் அவர்கள் விளக்குவது போல, “நான் பிறப்பால் ஓர் முஸ்லிம். ஆனால், எப்போதும் நான் சார்ந்திருக்கும் மதத்தின் கட்டுக்குள் என்னை உள்ளடக்கிக் கொண்டவனாக இல்லை. எப்போது என்னை நான், அத்தகைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டேனோ, அப்போதுதான், திறந்த உள்ளத்துடனும், திறந்த சிந்தனையுடனும் ஆராய்ச்சிப் பாதையில் பயணிக்க முடிந்தது. பாரம்பரிய அதிகாரத்துவமுடையோரின் பிடியிலிருந்து என்னை நான் முற்றிலும் விடுவித்துக் கொண்டு, எல்லா வகையான தாக்கங்களும் என் சிந்தனையை ஆட்கொள்ளுமாறு அதனைத் திறந்து வைத்துள்ளேன்.”
பல்வேறு சமயங்களின் ஏற்புடைமைக் கொள்கைகளை, ஹஜ்ரத் அவர்கள் ஆய்வு செய்வார்கள். தங்களின் கேள்விகளுக்கான விடைகளை, அந்தந்த சமயங்களின் புனித நூற்களில் தேடிப்பார்ப்பார்கள். மேலும் மத அறிஞர்களிடத்திலும், நாத்திகர்களிடத்திலும் கலந்துரையாடி, நவீன தத்துவ இயல் மற்றும் அறிவியல் முறைகள் பற்றி அணுக்கமாக அறிந்து கொள்வார்கள். பகவத் கீதையிடம் எந்த அளவு நேசம் கொண்டுவிட்டார்களெனில், அதனைத் திரும்பத் திரும்பப் படித்ததன் மூலம், அதன் ஒரு சில பகுதிகளும், அவர்களுக்கு மனனமாகி விட்டிருந்தது.
‘வாழ்வு’ என அழைக்கப்படும் இந்நிகழ்வுக்குள், வேறு சில நிரந்தர உண்மைகள் புதையுண்டு கிடக்கலாம் என்ற நம்பிக்கையில், பல்வேறுபட்ட ஆன்மீகப் பயிற்சிகளிலும் அதன் ஆய்வுகளிலும் ஹஜ்ரத் அவர்கள் ஈடுபட்டவர்களாக இருந்தார்கள். யோகாவையும், வேதாந்தத்தையும் ஆராய்ச்சி செய்தவர்களாய், கங்கையின் புனித நீரிலும் நீராடி, பிரம்மச்சாரியத்தையும் மேற்கொண்டு, பல்வேறுபட்ட யோகப் பயிற்சிகளையும் செய்து வந்தனர். ஹிந்து சமயக் கல்வியையும், அதன் அடித்தள ஆழம் வரை சென்று ஆராய்ச்சி செய்தனர். அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் அன்னார் பெற்றிருந்த தத்துவ இயல் முதுகலைப் பட்டம், ஹிந்து மற்றும் இஸ்லாமிய சிந்தனை பற்றிய சிறப்புப் பாடங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.
ஆயினும், உள்ளுக்குள்ளிருந்த ஆழ்ந்த ஆவல் மேலீடு, இன்னும் திருப்தி காணாமலேயே இருந்து வந்தது. ஹஜ்ரத் அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் பாதை, அதுவரை காணக்கிடைக்கவில்லை. முதுகலைப் பட்டம் பெற்றதும், அமெரிக்காவில் முனைவர் பட்டப் படிப்பத் தொடர வாய்ப்புக் கிட்டியது. ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். பேராசிரியர் முஜீப் அவர்களின், ‘எடுப்பவனாய் இருப்பதைவிட கொடுப்பவனாய் இரு’ என்ற வழிகாட்டுதலின்படி வாழ்வதற்குத் தீர்மானித்தவர்களாய், அதிக ஊதியமும், புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரியும், தகுதியும், திறமையும் இருந்தும், தனக்குக் கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கிய, ஜாமியா மில்லியாவிலேயே இணைந்து பணியாற்றத் தொடங்கினர். அவர்களின் சகாக்களில் பலரும், உயர் அந்தஸ்தையும், பொருளாதார மேம்பாட்டையும் அடையப் பெற்றனர். ஆனால் ஹஜ்ரத் அவர்களோ, ‘இலட்சியவாதி’ என இகழப்படுவதையும் பொருட்படுத்தாது, மாணவர்களுக்குப் பணிபுரிய வேண்டுமென்ற தீர்மானத்துடன், தத்தளித்துத் தடுமாறும் அப்புதிய பல்கலைக்கழகத்திலேயே இருந்து விட்டார்கள்.
குழந்தைகளுக்குப் போதித்து, அவர்களை நல்லொழுக்க சீலர்களாக உருவாக்குவதை விட வேறு சிறந்த பணி எதுவும் இருக்க முடியாது என்ற ஹஜ்ரத் அவர்களின் நன்னம்பிக்கை, ஜாமியா மில்லியாவில் அவர்கள் கொண்டிருந்த கடப்பாட்டிலும், பொறுப்புணர்விலும் பிரதிபலித்தது. இளைஞர்களை சிறந்த குடிமக்களாகவும், நாட்டுப்பற்று மிக்கவர்களாகவும் மற்றும் உண்மை முஸ்லிம்களாகவும் தயார் செய்வதும், சுதந்திரத்திற்கு முன் இந்தியாவை ஆதிக்கம் செய்து வந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கருவிகளாக அவர்கள் ஆகிவிடாது காப்பதும்தான் ஜாமியா மில்லியாவின் நோக்கமாக இருந்தது. இந்த இலக்கை முன்னோக்கியே, ஜாமியா மில்லியாவின் அனைத்து ஆசிரியர்களும், ஒரு வகை உந்துதலுடன் உழைத்து வந்தனர்.
அக்கால கட்டத்தில் அரசு மானியங்கள் எதுவும் ஜாமியாவுக்குக் கிடைக்கவில்லை. அதன் வருமானம் யாவும், உதவித் தொகை, நன்கொடைகள், சமூக ஆதரவு மற்றும் பயிற்சிக் கட்டணம் ஆகிய வழிகளில் மட்டுமே வந்து கொண்டிருந்தன. ஊழியர்களின் சம்பளம் மிகக் குறைவாகவே இருந்தது. ஹஜ்ரத் அவர்கள் மாதச் சம்பளமாக ரூபாய் நாற்பது மட்டுமே பெற்று வந்தார்கள். ஜாமியா மில்லியாவின் துணை வேந்தரும், பின்னால் இந்தியக் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்த, டாக்டர்.ஜாகிர் ஹுஸைன் அவர்கள், ரூபாய் எண்பது மட்டுமே மாதச் சம்பளமாகப் பெற்றார்கள். இருப்பினும், அவ்வாசிரியப் பெருந்தகைகளோ, தங்களின் அப்பணியையே மிகப் பெரும் வெகுமதியாகக் கருதி வந்தனர். அப்பெருமக்கள், தங்கள் பணியை ஒரு வழிபாடாகவே செய்து வந்ததுடன், அப்பணி சிறப்புறுவதற்காகவே பாடுபட்டும் வந்தனர்.
வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஹஜ்ரத் அவர்களின் ஆவலுக்கு, குழந்தைகளுக்குப் பணிபுரியும் சேவையானது ஒரு வடிகாலாக அமைந்தது. அன்னார் தொடர்ந்து இயற்கையின் இருப்புத்தன்மை குறித்த ஆராய்ச்சியில், தத்துவார்த்த அமைப்பிலும், ஆன்மீக ரீதியிலும் ஈடுபட்ட வண்ணமாகவே இருந்தார்கள். ஹஜ்ரத் அவர்களை, பேராசியர் முஜீப் அவர்களின் துறையில், இணைப் பேராசிரியராக, கல்வித்துறை நியமனம் செய்ததால், அவர்களிருவரும் அவ்வப்போது சந்தித்து தங்கள் பணி குறித்து கலந்துரையாடி வந்தனர். பெரும்பாலும் தங்களின் வேலைகளை சுமார் இருபது நிமிடங்களுக்குள்ளாகவே முடித்து விடுவர். பின்னர் ஒரு மணிநேரத்தை, நவீன சிந்தனை மற்றும் அறிவியல் வெளிச்சத்தில் சூஃபித்துவம் குறித்து விவாதிக்கச் செலவிடுவர்.
ஆனால் வருடக்கணக்கில் முயன்றும், தேடியும் எதுவும் கைவரப்பெறாததால் ஹஜ்ரத் அவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியிருந்தது. சத்தியத்தைத் தேடித் தான் களமிறங்கியிருப்பாதானது முடியாத ஒன்றாக இல்லாதபோதும், அது மிகக்கஷ்டமான ஒன்று என அன்னாரின் உள்ளம் முடிவு செய்தது. இவ்வாறாக நம்பிக்கையின்மையின் அருகாமைக்கு வந்துவிட்ட ஹஜ்ரத் அவர்களுக்கு, ‘ஹஜ்ரத் ஸய்யித் அஹ்மது கான் (ரஹ்) எனும் ஞான குரு அப்பகுதிக்கு பயணம் மேற்கொள்கிறார்கள்’ எனும் தகவல், அவர்களின் நண்பர் வாஹிதி மூலம் கிடைத்தது. அவ்வான்மீக ஆசான், உ.பி.மாகாணத்தில் ஆசம்கார் எனும் ஊரிலுள்ள பள்ளியில் அரபி மொழி பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றி வந்தார்கள். மேலும் அன்னார் சிறப்புப் பயிற்சிக்காக டில்லிக்கு அருகாமையிலுள்ள மதுரா எனும் நகருக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்கள். ஹஜ்ரத் அவர்கள், ஷேக் ஸயீத் கான் (ரஹ்) அவர்களைச் சந்திக்க வேண்டுமென வாஹிதி அவர்கள் ஆலோசனை வழங்கவே, ஹஜ்ரத் அவர்களும் ஆமோதித்து விட்டார்கள். காலச்சக்கரம் உருண்டோடி ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில், அன்னார் அச்சந்தர்ப்பத்தை நினைவு கூறும் போது, “சென்றுதான் பார்ப்போம். ஒருவேளை அம்மனிதரிடமிருந்து ஏதேனும் வழிகாட்டுதலைப் பெறலாம் என நினைத்தேன்” என நெஞ்சம் நெகிழ்கிறார்கள்.
நல்வாய்ப்பும், நம்பிக்கையும் ஒருசேரக் கலந்த உணர்வுடன் ஹஜ்ரத் அவர்கள் மதுரா நகர் நோக்கிப் பயணமானார்கள். பள்ளிவாயிலுக்கு வந்து சேர்ந்த ஹஜ்ரத் அவர்களுக்கு, ஹஜ்ரத் ஸயீத் கான் (ரஹ்) அவர்கள் வீற்றிருக்கும் அறை காட்டப்பட்டது. அறையின் அருகாமையை அண்மித்தவர்கள், அங்கே எளிய உடையும், வட்டமான தொப்பியும் அணிந்து அமர்ந்திருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். அம்மனிதர் ஹஜ்ரத் அவர்களைக் கண்டதும் உள்ளே வருமாறு அழைத்தார்கள். ஷேகிடம் தாங்கள் கொண்டு வந்திருந்த அறிமுகக் கடிதத்தைச் சமர்ப்பித்ததும், அதனைப் படித்துப் பார்த்து விட்டு ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.
தான் வந்த நோக்கத்தை ஷேகிடம் ஹஜ்ரத் அவர்கள் தெரிவித்தார்கள். ஆண்டாண்டு காலாமாக தான் தேடி வந்ததையும், பல்வேறுபட்ட ஆன்மீகப் பாதைகளை ஆய்வு செய்ததையும் ஹஜ்ரத் அவர்கள் விளக்கினார்கள். “தங்களின் போதனைகளில் ஏதேனும் உண்மை இருக்குமானால், அதனை அடியேனுக்குக் கற்றுத் தாருங்கள். அன்றி, இப்போதனைகள் மக்களைக் கவரும் வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்குமென்றிருந்தால், தங்களின் நேரத்தையும், என்னுடைய நேரத்தையும் நான் வீணடிக்க விரும்பவில்லை” என முடிவாகக் கூறிவிட்டார்கள்.
எல்லாவற்றையும் அமைதியோடு கேட்டு முடித்த ஷேக் அவர்கள், “இப்பாதை முற்றிலும் அனுபவம் நிறைந்த ஒன்றாகும். ஆரம்பித்து விடுங்கள். பின்னர் என்ன நடக்கிறது எனப் பாருங்கள்” என மறுமொழி பகன்றார்கள். அவ்வளவுதான்! ரத்தினச் சுருக்கமான அப்பதில் ஹஜ்ரத் அவர்களுக்கு உடனடி தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. ஹஜ்ரத் அவர்கள் கூறினார்கள், “அத்தருணத்தில் நான் முற்றிலுமாக உலகியல் தொடர்புகளிலிருந்து துண்டித்துக் கொண்டு விட்டதைப் போல் உணர்ந்தேன். மேலும் என் உள்ளமோ, ஹஜ்ரத் அவர்களின் பக்கம் வலுவாக ஈர்க்கப்பட்டிருந்தது. என் உள்ளத்தில் இனம் புரியாத அன்பு நிறைந்திருப்பதை உணர்ந்தேன்”. அப்போதே ஹஜ்ரத் ஸயீத் அஹ்மது கான் (ரஹ்) அவர்களிடம் போதனைகளைத் துவக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.
இவ்வாரம்பக் கட்ட சந்திப்பிலிருந்தே ஹஜ்ரத் ஸயீத் கான் (ரஹ்) அவர்களின் ஞான குரு, ஷேக் ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் ஆலவி அவர்களைச் சந்திக்கும் முனைப்பில் ஹஜ்ரத் அவர்கள் இருந்தார்கள். ஹஜ்ரத் அவர்களின் குளிர்கால விடுமுறை, அச்சந்திப்புக்கு வாய்ப்பளித்தது. ஹஜ்ரத் ஆலவி (ரஹ்) அவர்களுடன் சகவாசத்திலிருந்த பின்னர், இறைவன் தன்னுடைய பிரார்த்தனைகளை அங்கீகரித்துவிட்டான் எனும் முடிவுக்கு வந்து விட்டார்கள். தன் ஆன்மீகத் தாகத்தை தணிக்கவும், தன் உள்ரங்க உந்துதலைத் திருப்திப்படுத்தவும், தகுதி படைத்த மிகச் சரியான மனிதரிடம், மிகச்சரியான பாதைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என முழு மன நிறைவு கொண்டார்கள். இவ்வாறாக ஹஜ்ரத் அவர்களின் ஆன்மீகப் பயணம் ஆரம்பமானது.
தன்னை விட்டு நீண்ட நெடுங்காலாமாக நழுவிப் போய்க்கொண்டிருந்த ‘மன நிறைவை’ ஹஜ்ரத் அவர்கள் சூஃபித்துவத்துக்குள் கிடைக்கப் பெற்றார்கள். தான் பிறந்த மார்க்கத்தின் ஆழ்ந்த அர்த்தத்தையும் கண்டு கொண்டார்கள். பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஹஜ்ரத் அவர்கள், இவ்வாறு அவதானித்தார்கள், “இப்போது நான் ஒரு முஸ்லிம். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததன் காரணத்தால் அல்ல. மாறாக, என் சொந்த ஆவல் மேலீட்டாலும், ஆய்வினாலும் மற்றும் அனுபவத்தாலும் நான் இஸ்லாத்தைக் கண்டறிந்தேன்”.
30 ஆண்டுகாலமாக ஷேக் ஸயீத் அஹமத் கான் (ரஹ்) அவர்களுடன் பயணத்திலும், ஆசம்காரிலுள்ள வீட்டிலும் ஹஜ்ரத் அவர்களின் நேரங்கள் ஆன்மீகக் கல்வி பயிலும் நிலையிலேயே கழிந்தன. ஷேகின் வழிகாட்டுதல்களையும், ஆன்மீகப் போதனைகளையும் அக்கறையோடு ஏற்று நடக்கும் முயற்சியில் ஹஜ்ரத் அவர்களும், அவர்களின் ஆவலுக்கு ஏற்ப பெருந்தன்மையுடன் பதிலளிக்கும் நிலையில் ஷேக் அவர்களும் இருந்து வந்தார்கள். இறுதியாக, இப்பாதையில் பயணிக்கும் ஆர்வலர்களுக்கு, சூஃபித்துவத்தின் புனிதமான, ஆழ்ந்த அறிவுஞானப் போதனைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும், ஐந்து பிரதான தொடர்களிலும் பயிற்சிகளை வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றுச் சிறப்புற்றார்கள். அவை, நக்ஷ்பந்தி, முஜத்திதி, சிஷ்தி, காதிரி மற்றும் ஷாதிலி ஆகியனவாகும். இறுதியாக ஒரு நாள் வந்தது. ஷேக் ஸயீத் அஹ்மத் கான் (ரஹ்) அவர்கள், ஹஜ்ரத் அவர்களை நோக்கி, ” என் ஆன்மீக ஞான குருவிடமிருந்து, எதனையெல்லாம் நான் பெற்றேனோ, அவை அனைத்தையும் தங்களுக்குத் தந்து விட்டேன். இப்போது இறைவனின் அருளுக்காகக் காத்திருங்கள். ஏனெனில், வெற்றி என்பது தாங்கள் எடுத்து வைக்கும் முயற்சியைக் கொண்டு அமைவதில்லை, அவனது கருணையும், இரக்கத்தையும் பொறுத்தே அமைகின்றது” என மொழிந்தார்கள். பின்னர், குர்ஆனிலிருந்து இறைவசனமொன்றை கோடிட்டுக் காட்டினார்கள். அது “அல்லாஹ் யாருக்கு நாடுகின்றானோ, அவருக்கு அவனது அருள்மாரியைப் பொழிகின்றான்” என்பதாகும்.
இப்பாதையைத் தொடங்கிய ஆரம்பக் கால கட்டத்தில், மற்ற மாணவர்களைப் போன்றே, ஹஜ்ரத் அவர்களுக்கும் முழுமூச்சுடன் எல்லா நேரத்தையும் தியானப் பயிற்சியிலும், வணக்க வழிபாடுகளிலும் கழித்து விட வேண்டுமென்ற துடிப்பு இருந்து வந்தது. எனினும், சூஃபித்துவ மாணாக்கர்கள் உலகைத் துறக்க வேண்டுமென்று சொல்லப்படவில்லை. மாறாக, அவர்கள் ” உலகில் தான் வாழ வேண்டும். ஆனால் உலகமே வாழ்வாகி விடக்கூடாது “. நன்கு பழகிப்போன அன்றாட வாழ்வியல் பிரதேசத்திற்குள், ஆர்வலர்களின் பழக்க வழக்கமும், ஒரு பக்க சார்பும், அதற்கேற்ற வடிவமும் ஆழமாக சமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவையனைத்தையும் இவ்வுலகில் இருந்து கொண்டுதான் எதிர் கொண்டு சமாளிக்க வேண்டியுள்ளது. இங்கிருந்து கொண்டுதான் ஒருவர் இறைவனுக்கும் அவனது படைப்பினத்துக்கும் பணிவிடை செய்ய வேண்டியுள்ளது. தங்களின் ஞானாசிரியர் ஷேக் ஸயீத் அஹ்மது கான்(ரஹ்) அவர்களிடம் ஹஜ்ரத் அவர்கள், தங்களின் வேலையை ராஜினாமா செய்து விட்டு, ஆன்மீகப் பயிற்சிகளில் தன்னை முற்றிலுமாக ஈடுபடுத்திக்கொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்த போது, ஷேக் அவர்கள் அனுமதி மறுத்து விட்டார்கள். உலக வேலைகளைக் கவனித்துக் கொள்வது, இப்பாதையின் வெற்றிக்கு அவசியமான ஒன்றென ஷேக் அவர்கள் விளக்கினார்கள். அதன் பிறகு ஹஜ்ரத் அவர்கள் தொடர்ந்து ஆசிரியராகப் பணிபுரிந்ததோடு, பின்னர் ஜாமியா மில்லியா பள்ளியின் தலைமை ஆசிரியராகி, இறுதியில் முப்பத்தாறு ஆண்டுகட்குப் பின்னர் அப்பள்ளியிலிருந்து ஓய்வு பெற்றார்கள்.
தங்களின் ஞானாசிரியர் வாழுங்காலத்திலேயே, சூஃபி போதனைகளை, எல்லோரும் அணுகத்தக்க இலகுவானதாக அமைக்கும் முழு முயற்சியில் ஹஜ்ரத் அவர்கள் ஈடுபட்டனர். சத்தியத்தைத் தேடி உலகெங்கிலும் இருந்து இந்தியத் திருநாட்டிற்கு வருகையளிக்கும் அதிகமான நபர்களில், மிகச் சிலரே சூஃபி போதனைகளின் பலாபலன்களைக் கண்டறிகிறார்கள் என்பது, ஹஜ்ரத் அவர்களை நீண்ட காலமாகவே சஞ்சலத்திற்குள்ளாக்கி விட்டிருந்தது. பெரும்பாலானவர்கள் அதிகம் பிரபலமான வேதாந்தம், யோகா ஆகியன போதிக்கும் பயிற்சிப் பள்ளிகளின் பக்கம் ஈர்க்கப்பட்டு விடுகிறார்கள். அவ்வகையான பயிற்சி உத்திகள், பெற்றுக் கொள்வதற்கு எளிதாக இருக்கலாம். அப்பயிற்சி ஆசான்களும் உலகெங்கும் வலம் வந்து பயிற்சிக் கூடங்களைத் திறந்த வண்ணம் இருக்கின்றனர். ஆயினும், உண்மையான ஆன்மீக முன்னேற்றத்துக்கான அடையாளங்களைக் காண்பதென்பது, குறிப்பாக, வேலைச் சூழலுடன் கூடிய வாழ்கையை மேற்கொண்டிருக்கும், தற்கால சமூகத்தின் தேவைகளைப் பிரதிபலிக்கும் முன்னேற்றத்தைக் காண்பதென்பது அரிதாகவே இருக்கிறது.
சூஃபித்துவத்தால், தற்கால ஆர்வலர்களின் ஆன்மீக வேட்கையைப் பூர்த்தி செய்யமுடியும் என்ற நம்பிக்கையில், பிரதான ஐந்து சூஃபித்தொடர்களின் பயிற்சிகளை வழங்கக்கூடிய ஒரு ஆன்மீகப் போதனைப் பள்ளியை உருவாக்கும் உயர்ந்த எண்ணம் ஹஜ்ரத் அவர்களுக்கு உண்டானது. தங்களின் ஆன்மீக ஆசானின் அனுமதியுடனும், வழிகாட்டுதலுடனும் இந்தியத் தலைநகர் புது டில்லியில் “சத்திய வேட்கை மையம்” (Institute of Search for Truth) எனும் ஆன்மீகக் கல்வி நிலையத்தை உருவாக்கினார்கள்.
சமீப காலத்தில், “சூஃபி போதனைப் பள்ளி” (The School of Sufi Teaching) எனும் பெயரில், அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா, நியுசிலாந்து,வங்காள தேசம்,பாகிஸ்தான்,போலந்து,இங்கிலாந்து,இத்தாலி, ஜெர்மனி,மலேசியா, சிங்கப்பூர்,ஓமான் மற்றும் கிரிகிஸ்தான் போன்ற நாடுகளில் அந்நிறுவனத்தின் கிளைகளை நிறுவியுள்ளார்கள்.
சுருக்கமான இவ்வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, ஒரு சூஃபி மாணவரிடத்தில் இருக்க வேண்டிய அடிப்படைக் குணாதிசயங்களையும், தகுதியையும் வெளிப்படுத்துகிறது. ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்) அவர்களின் முக மலர்ச்சியும், நம்பிக்கையும், நாணயமும் மற்றும் நேர்மையும், அவர்களின் வெளிரங்க வெற்றிக்கும், மிக முக்கியமாக அந்தரங்க வெற்றிக்கும் காரணிகளாகத் திகழ்கின்றன. ஒவ்வொரு சவால்களையும் தன் வளர்ச்சிக்கான வாய்ப்பாகவும், வழிபாடாகவும் மாற்றியமைக்கும் அன்னாரின் திறமையே, அவர்களை சூஃபி என அடையாளம் காட்டியது.
வாழ்வின் ஆரம்ப காலம் முதற்கொண்டே, ஹஜ்ரத் அவர்களுக்கு, வாழ்க்கையின் நோக்கத்தையும், அர்த்தத்தையும் கண்டறிய வேண்டுமென்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அதற்கான ஓர் ஆசிரியரைத் தேடும் முயற்சியை மேற்கொண்டிருந்தார்கள். அத்தகைய ஒருவரைக் கண்டு கொண்டதும், தன் இலக்கைச் சென்றடையும் வரை அவ்வழிகாட்டியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடப்பதில் விடாமுயற்சியுடன் இருந்து வந்தனர். அத்தனைக்கிடையிலும், ஒரு சிறந்த கணவராக, தந்தையாக, தாத்தாவாக, பள்ளி ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, சமூகத் தலைவராக மற்றும் மரியாதைக்குரிய பெரியவராக வாழ்ந்து, தங்களின் அத்தனை உலகியல் பொறுப்புகளையும் செவ்வனே நிறைவேற்றி வந்தனர். அன்னாரின் உத்தியோக ஓய்வு, உலகியல் ஓய்வென அர்த்தம் கொள்ளத்தக்கதாக இல்லை. மாறாக, அவர்கள் பணி ஓய்வு பெற்றதும், தங்களின் அதிகமான நேரத்தை ஆன்மீகப் பணிக்காகவும், சேவைக்காகவும் அர்ப்பணித்து வந்தார்கள். அவற்றுள் சூஃபி போதனைப் பள்ளியின் கட்டுமானப் பணி, பள்ளிவாசல் மற்றும் கான்காஹ் எனும் தியான மண்டபத்தின் கட்டிடப்பணி மற்றும் குடும்பப் பொறுப்புகள் ஆகியனவும் அடங்கும். பள்ளிக்கூட மாணவப் பருவம் முதல், இறுதி மூச்சு வரையுள்ள அன்னாரின் ஒட்டு மொத்த வாழ்வில், ஒரு சூஃபிக்கு இருக்க வேண்டிய அத்தனை அம்சங்களும் பொதிந்திருந்தன.