பல்லாண்டுகளுக்கு முன்னர், ஆன்மீகத் துறையில் முன்னேற்றம் வேண்டியும், அதன் வெளிச்சத்தை நாடியும், பலர் இந்திய மண்ணிற்கு வருகை தருவதையும், அதே நேரத்தில் அவ்வாறு வருபவர்கள், ஆன்மீகப் பாதையின் நுட்பங்களையும், நுணுக்கங்களையும் கற்றுத் தரும் நம்பிக்கைக்குரிய, தகுதிபடைத்த ஆசிரியர்களைச் சந்திக்க இயலாமல் சிரமப்படுவதையும் அல்லது பாதை மாறிப்போய்க் கொண்டிருப்பதையும் இவ்வான்மீகத் தொடரின் ஆசிரியர், ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்) அவர்கள் கண்ணுற்றார்கள்.
இச்சிக்கலுக்குத் தீர்வு காணும் நன்னோக்கில், தங்களின் ஆன்மீக ஆசான் மவ்லானா முஹம்மது ஸயீத் கான் (ரஹ்) அவர்களின் அனுமதியோடு, ஹஜ்ரத் ஆசாத் ரஸூல் (ரஹ்),அவர்கள் இந்தியத் தலைநகர் புது டில்லியில், 1975 ஆம் ஆண்டு, “சத்திய வேட்கையின் மையம்” (The Institute of Search for Truth) என்ற ஆன்மீகக்கல்வி நிலையத்தை நிறுவினார்கள்.
எல்லையற்ற திறன்களையும், ஆற்றல்களையும் தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் அணுக்களைப் போல, அதிகப் பரிணாம வளர்ச்சிபெற்ற வடிவமாகத் திகழும் மனித உடலானது, ஆற்றல் வளங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கிய ஒரு தடாகம்தான் எனும் உறுதியான முடிவின் அடிப்படையிலேயே இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. அத்தகைய அற்புதமான புதையலைத் தேடிக் கண்டெடுப்பதே நமது நிறுவனத்தின் குறிக்கோளாகும். மனிதனுக்குள் புதையுண்டு கிடக்கும் அந்தரங்க ஆற்றல் என்பது ஒரு கட்டுக்கதையோ கற்பனையோ அல்ல. நவீன உளவியல், குறிப்பாக ஆழ்நிலை பற்றிய உளவியல், மனிதனின் சுயத்திற்குள் காணப்படும் பல மறைக்கப்பட்ட உண்மைகளையும், ரகசியங்களையும் வெளிப்படுத்தகூடிய அப்படிப்பட்ட மனித இயல்பின் நிகழ்ச்சித் தொடர்களைக் குறிப்பிடுகிறது. உளவியல் நிபுணர் C.G.ஜுன்ங் என்பவரது கண்டுபிடிப்புகள் குறித்து, எடுத்துக்காட்டு வழியாக விளக்கமளிக்க முற்படுகையில், மனித இயல்பின் பல அம்சங்களை வெளிக்கொணர்ந்த அவரின் ஆய்வுகள், அவரது உளவியலை ஆன்மீகத்துக்கு மிக அண்மையில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
இவரது ஆய்வுகள், மூளை மற்றும் மனம் பற்றிய நவீன ஆய்வாளர்களான ராபர்ட் ஆன்ஸ்டீன் (Robert Ornstein) மற்றும் ஆர்தர் டெக்மேன்(Arthur Deikman) போன்றவர்களுக்கு மேலும் இத்துறையில் முன்னேற வழிவகுத்தது.
ஹஜ்ரத் ஆசாத் ரசூல்(ரஹ்) அவர்கள், கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 7ஆம் தேதி இப் பூவுலகை விட்டும் பிரிந்தார்கள். இவ்வான்மீகக் கல்வி, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும், குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கும் சென்றடைய வேண்டுமென்ற உன்னதமான குறிக்கோளுடன், 55 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு அயராது உழைத்தார்கள். இப்புனிதப் பணிக்காக அன்னாரின் பயணங்கள், இந்தியா முழுதும் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, கிழக்காசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முதலிய நாடுகளுக்கும் தொடர்ந்தன. அதன் காரணமாக உலகின் பல பகுதிகளிலும் உள்ள ஆன்மீக ஆர்வலர்கள், இன்று இப்பாதையைப் பின்பற்றுவதைக் காண முடிகிறது.
இந்நிறுவனம், ‘தி ஸ்கூல் ஆஃப் சூஃபி டீச்சிங்’ என்ற பெயருடன், தற்போது, உலகின் எல்லாத் திசைகளிலும் தன் கிளைகளைப் பரப்பிய வண்ணம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, கனடா, பிரேசில், ரஷ்யா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்களாதேஷ், பாகிஸ்தான், துருக்கி, போலந்து, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, சுவீடன், எகிப்து, தூனிசியா, எத்தியோப்பியா, மலேசியா, சிங்கப்பூர், மற்றும் ஓமான் முதலான உலக நாடுகளிலுள்ளோர் பலர், இதன் மாணவர்களாகத் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அன்னாரின் போதனா முறைகளின் மூலம் பயனடைந்த ஆர்வலர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும், அன்னாரின் பணி, “சத்திய வேட்கையின் மையம்”,(The Institute of Search for Truth) மற்றும் “ஆன்மீகப் போதனைப் பள்ளி” (The School of Sufi Teaching) எனும் நிறுவனங்களின் மூலம் நடைபெற்று வருகிறது.
எல்லா சூஃபித்தொடர்களின் பாரம்பரிய அமைப்புகளைப் போலவே, இப் பணியும் தொய்வின்றித் தொடர்கின்றது. ஹஜ்ரத் அவர்களின் புதல்வரும், கலீஃபாவெனும் பிரதிநிதியுமான ‘ஷைக் ஹாமித்ஹஸன்’ அவர்கள், இவ்வான்மீகப் பாதையில் அடியெடுத்து வைக்கும் ஆர்வலர்களுக்கு, ‘பைஅத்’ எனும் தீட்சையையும், சிறந்த வழிகாட்டுதலையும் வழங்கி, இப்பள்ளியை சீரிய முறையில் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆன்மீகப் போதனைப் பள்ளி, ஐந்து பிரதான ஞான வழிப் பரம்பரைகளான, நக்ஷ்பந்தி, முஜத்திதி, சிஷ்த்தி, காதரி மற்றும் ஷாதலி ஆகிய பயிற்சி முறைகளை தன்னகத்தே கொண்டுள்ளதோடு ‘முஜத்திதி’ பயிற்சிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்குகிறது.