சூஃபித்துவம் என்பது இஸ்லாமிய ஆன்மீகப் பரிமாணத்துடன் எப்போதும் தொடர்புடையதாக இருந்த போதிலும், ‘சூஃபித்துவம்’ என்ற சொல், இஸ்லாம் தோன்றியதிலிருந்து பல்லாண்டுகள் வரையிலும் பயன்பாட்டில் இல்லாததாகவே தெரிகிறது. அவ்வாறெனில், சூஃபித்துவத்தின் வரலாறுதான் என்ன?, அது எங்கிருந்து தோன்றிற்று?
எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும், ஒரு சில நபர்களிடத்தில் இருந்த ஆழ்ந்த ஆவலும், உள்ரங்க அமைதியின்மையும், அவர்களைத் தனித்திருந்து வணக்க வழிபாடுகளிலும், தியானத்திலும் மற்றும் தவத்திலும் ஈடுபடவைத்தது.
அப்படிப்பட்ட ஒரு நபராகத்தான் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள், தூதுத்துவ வெளிப்பாடுகளைப் பெறும் முன்னரே, மக்கா நகருக்கு வெளியில் அமைந்திருக்கும் மலைக் குகையில் அவ்வப்போது தனித்திருந்து வணக்கங்களில் ஈடுபட்டு வந்தார்கள்.
பின்னர், தொடக்க கால முஸ்லிம்களின் சமுதாயம் உருவான கால கட்டத்தில், முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலரும், இறை நேசத்தை அடைந்து கொள்ளும் ஆழமான ஆவல் மேலீட்டை வெளிப்படுத்தினார்கள். அதைக் குர் ஆன் இவ்வாறு கூறுகிறது, “ நீரும் (முஹம்மது), உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்” (குர்ஆன் 73-20).
சூஃபி பயிற்சிகளின் உருவாக்கதிற்கு அடிப்படையான வழிகாட்டுதல், புனித குர்ஆனிலும், முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகளிலும் காணக் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு, ‘மௌனமாக’ இறைவனை நினைவுகூரச்செய்யும் (Dhikr Khafi ) தியானப் பயிற்சியானது, முஹம்மது (ஸல்) அவர்களால், அன்னாரின் தோழர் அபூபக்கர் (ரலி) (d.634 C.E.)அவர்களுக்கு, மக்கா நகரிலிருந்து மதீனா நகருக்கு, இருவரும் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டிருக்கும் போது, ஒரு குகையினுள் தஞ்சமடைந்திருக்கும் தருணத்தில் கற்றுக் கொடுக்கப்பட்டதாகும்.
மேலும், சூஃபி பயிற்சிகளில் காணப்படும் ‘சப்தமிட்டு’ இறைவனை அழைக்கும் முறையானது (Dhikr Jali), பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களால், அன்னாரின் அன்புக்குரிய மருமகனும், இஸ்லாத்தை முதன்முதலில் தழுவியவருமான அலி (ரலி) (d 661 C.E.) அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான அடையாளச் சுவடுகள் தெரிகின்றன.
‘மிஹ்ராஜ்’ என்றழைக்கப்படும் பெருமானாரின் விண்ணுலகப் பயணம், ஆன்மீகப் பாதைக்குப் புத்துணர்ச்சி தரும் உருவகமாக விளங்குகிறது. இறைவனால் தங்களின் பூத உடலுடன், பயணிக்க வைக்கப்பட்ட அப்புனிதப் பயணத்தில், பெருமானார் (ஸல்) அவர்கள், மக்காவிலிருந்து ஜெருசலத்திற்கும், பின்னர் அங்கிருந்து ஏழு வானங்களைக் கடந்து, இறுதியில் ‘வில்லின் இரு முனையளவு’ நெருக்கத்தில் இறைவனை தரிசித்தார்கள். அதைப்போலவே, ஒரு சூஃபி ஆர்வலரும், பௌதீக எல்லை வரையறைகளான இடம், காலம் ஆகிய வரம்புகளைத் தாண்டி, இறை நெருக்கம் அடையும் முயற்சிகளை மேற்கொள்கிறார்.
இந்த உதாரணங்களும், இன்னும் பல உதாரணங்களும், பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வில் ஓர் வலுவான ஆன்மீக அம்சம் பொதிந்திருப்பதைக் காட்டுகிறது.
சூஃபிகள் என முதன்முதலாக அடையாளம் காட்டப்பட்ட தனி நபர்களின் தோற்றம், பொதுவாக கி.பி. 6 ம் மற்றும் ஏழாம் நூற்றாண்டின் வரலாற்று வளர்ச்சியோடு தொடர்புடையதாகும். கி.பி.622 மற்றும் 632க்கும் இடைப்பட்ட கால கட்டத்தில், பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள், இஸ்லாமிய அடிப்படைக்கொள்கைகளான சமஉரிமை, கருத்தொற்றுமை, நீதி, இறைபக்தி மற்றும் உணர்வுநுட்ப தலைமைத்துவம் முதலான தன்மைகளைப் பிரதிபலிக்கக்கூடிய ஒரு அற்புத சமூகத்தை நிறுவினார்கள். அன்னாரின் வாழ்நாளுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற கலீஃபாக்கள் என்றழைக்கப்படும் பிரதிநிதிகளில், முதல் நால்வரும், அவர்களின் வழிகாட்டுதலை மிக அணுக்கமாகப் பின்பற்றி வந்தார்கள்.
அதிவேகமாக விரிவடைந்து கொண்டிருந்த முஸ்லிம்களின் பிரதேசங்கள் அனைத்திலும், புனித குர்ஆனின் போதனைப்படியும், பெருமானாரின் சுன்னா (அன்னாரின் முன்மாதிரி செயல் வடிவமும்,பொன்மொழிகளும்) வின்படியும், அழகிய முறையில் ஆட்சி புரிந்து வந்தார்கள்.
ஹிஜ்ரா எனும் நிகழ்வுக்குப் பின் நூறாண்டுகளுக்குள்ளாகவே, கணிசமான அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டு, இஸ்லாமியத் தலைமைத்துவம், ஆழ்ந்த மார்க்கப் பற்றுள்ளவர்களின் கைகளிலிருந்து வெளியேறியது. பல்வேறு துணைக் குழுக்களும், தங்களின் ஆட்சியாளர்கள் உலக ஆசாபாசங்களிலும், சுய நலத்திலும் மூழ்கிப்போய்க் கொண்டிருப்பதை அவதானித்தார்கள். இதன் விளைவாக, பிரசித்தியும்,மரியாதையும் மதிப்புமிக்க முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே அரசாங்கத் தொடர்பிலிருந்து ஒட்டுமொத்தமாகத் துண்டித்துக் கொண்டனர். பெருமானாரின் மறைவுக்குப் பின் இரு நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே, சமயச்சார்பற்ற அரசாங்கத்தை நிராகரித்தவர்களில் ஒரு சிலர் ‘சூஃபிகள்’ என்றழைக்கப்பட்டனர். பாரசீகப் பெரியார் ஷேக் அபூ ஹாஷிம் குஃபி (ரலி) (இறப்பு. கி.பி.776) என்பவர்கள்தான் இந்தப் பெயரில் முதன் முதலாக அழைக்கப்பட்டவர்கள். கி.பி. 660 க்கும் கி.பி.850 க்கும் இடைப்பட்ட கால கட்டத்தில்தான் ஆரம்பகால சூஃபி வட்டங்கள் தோன்றத் தொடங்கியது.
சூஃபி போதனைகளின் இரண்டம் கட்ட விரிவாக்கம், கி.பி.850 முதல் பத்தாம் நூற்றாண்டு வரைக்கும் இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மற்றொரு முக்கிய அம்சத்தோடு தற்செயலாக ஒன்றுபடுகிறது. கிரேக்கத் தத்துவமும், அறிவியலும் முஸ்லிம்களிடத்தில் ஊடுருவியதோடு, சூறாவளியெனச் சுழன்று கொண்டிருந்த பகுத்தறிவு வாதத்தை இஸ்லாமிய சமுதாயம் எதிர் நோக்கியது. பொதுமக்கள் தங்களின் அடிப்படை நம்பிக்கைகள் ஆட்டம் காணுவதைக் கண்டனர். சந்தேகங்களின் தாக்குதலுக்கு இலக்காயினர். இத்தகைய சூழலின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள, சூஃபி ஆசான்கள், மக்களிடையே, ‘இஷ்க்’ எனும் இறைக்காதல் மற்றும் இதயத்தின் ஆன்மீகப் படித்தரங்களை அடைந்து கொள்ளும் அனுபவங்களின் கொள்கைக் கோட்பாடுகளை வகுத்தமைத்தனர்.
கி.பி.10ஆம் நூற்றாண்டில் சூஃபித்துவத்தின் மூன்றாம் கட்ட வளர்ச்சி ஏற்பட்டது. இக்கால கட்டத்தில் வாழ்ந்த ஞானிகள், இஸ்லாமிய உணர்வை மீண்டும் விழிப்புறச்செய்து, மக்களின் அன்றாட வாழ்வில் அது ஊடுருவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மனித உள்ளங்கள் எதுவரை உலகக் கவலைகளில் மூழ்கிப்போய் இருக்குமோ, அதுவரை மனிதனின் நடத்தைகளில் முன்னேற்றம் உண்டாகாது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
மேலும், சுய பரிசுத்தம் உண்டாக்கவும், மக்களுக்கு உலகியல் நாட்டம் மற்றும் பகுத்தறிவு சிந்தனை முதலானவற்றை சமாளிக்க உதவும் வழிகாட்டுதல்களையும் அவர்கள் வலியுறுத்தினர். மக்களின் வெளிரங்க வாழ்வு அறநெறிமிக்கதாகவும், ஒழுக்கமுள்ளதாகவும் அமைவதற்கான வரைமுறைகளையும், கட்டுப்பாட்டையும் வடிவமைத்துக் கொடுத்ததன் மூலம், அவர்களின் அந்தரங்க வாழ்வு புத்துயிர் பெறவும் அவர்கள் உதவினர்.
கி.பி.பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளுக்கு இடையில், சூஃபித்துவம் பரவலாக மதிக்கப்படும் ஒரு ஒழுக்க நெறியாக மாறியது. மாபெரும் பல அறிஞர்களும், ஆன்மீக ஆசான்களும் இக்கால கட்டத்தில் போதிக்கத் துவங்கியதோடு, சூஃபி பயிற்சிகளையும் மற்றும் கலைச்சொல்லியலையும் தோற்றுவித்தார்கள். தரீக்காக்கள் எனும் சூஃபித்தொடர்கள் உண்டாக்கப்பட்டது.
பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில், சூஃபித்துவம் தெளிவாக வரையறுக்கப்பட்ட ஆன்மீக விழிப்புணர்வு உண்டாக்கும் அறிவியல் துறையாக ஆனது. செய்முறைகள் மற்றும் ஆய்வுகளின் மூலம் சூஃபி ஆசான்கள், ‘சுய மெருகூட்டல்’(Self Refinement) உண்டாக்குவதற்கான மாற்றத் தகுந்த பயிற்சி உத்திகளை மேம்படுத்தினர். அதன் பலாபலன்கள் யாவும் எண்ணிலடங்கா ஆர்வலர்கள் மூலம் உறுதி செய்யப்படுகின்றது. பரந்து விரிந்த இந்த ஆன்மீகப் பேரியக்கத்திற்கு ‘சூஃபித் தொடர்கள்’ எனும் தரீக்காக்கள் அடிப்படையாகத் திகழ்வதோடு, மனித இனத்தின் நீண்டகால ஆன்மீக வேட்கைக்குப் புத்துயிரினை வழங்கிக்கொண்டிருக்கிறது.