நக்ஷ்பந்தி தரீக்காவின் ஆசானும், இந்தியத் துணைக்கண்டத்தின் ஆன்மீக மாமேதையுமான, ஷேக் அஹ்மது ஃபாரூகி ஸர்ஹிந்தி (இறப்பு-1624) அவர்கள் பதினாறாம் நூற்றாண்டின் இறுதிகளில், இந்திய முஸ்லிம்களிடத்திலும், சூஃபி வட்டங்களிலும் பரவிவந்த இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்பாடுகளைத் தடுக்கும் முயற்சியாக, ஷரீயத்தின் முக்கியத்துவத்தை, உறுதியோடு மறுநிர்மாணம் செய்தார்கள். இச்சீரிய முயற்சியின் காரணமாக அன்னார், “முஜத்திதே அல்ஃபஸானி” (இரண்டாயிரமாண்டில் இஸ்லாத்தைப் புதுப்பித்தவர்) என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
நக்ஷ்பந்தி போதனைகளில் அன்னார் ஏற்படுத்திய முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தங்களினால், அவர்களின் ஆன்மீக வழித்தோன்றல்கள் ‘முஜத்திதி’ எனும் புதிய சூஃபித்தொடராக அறியப்பட்டனர். அவர்களின் போதனைகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் பிரபலமானதோடு, இறுதியாக கவ்காஸஸ் (Caucasus), மத்திய கிழக்கு (Middle East), சிற்றாசியா (Asia Minor) மற்றும் அதற்கப்பாலும் பரவலானது.