சூஃபித்துவத்தின் இலட்சியம், மனிதனுக்குள் சில உயர் குணப் பண்புகளை வளர்ந்தோங்கச் செய்வதாகும். அவை, சுய பரிசுத்தம், இதயப் பரிசுத்தம், அறநெறிப் பண்பாடுகள், செயல்களில் அழகிய நடைமுறைகளைக் கடைப்பிடித்தல்(இஹ்சான்), இறை நெருக்கம், உள்ளார்ந்த ஞானம்(மஃரிஃபா), சுயத்தின் அழிவு(ஃபனா), நிரந்தர இருப்பு(பகா) ஆகியனவாகும். சுருங்கக் கூறுமிடத்து, சூஃபித்துவத்தின் உண்மையான நோக்கம் யாதெனில், தேட்டவானுக்கு ஆன்மீகப் பயிற்சியளிப்பதின் மூலம், அவனை மிக உன்னத உயர் குணப் பண்புகளுடைய சிறந்த மனிதனாக உருவாக்குவதாகும்.
இன்றைய பரபரப்பான, பொருள்சார்ந்த வாழ்க்கைச் சூழலானது, ஆன்மீகத் தேடலுக்கும், அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் இடையே ஒரு சமநிலையான நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு ஒரு சவாலாக இருக்கிறது. ஆன்மீக அறிவுத்தேடலுக்கு பல வாய்ப்புகளும், வழிகளும் உள்ளன. அவ்வாறான வாய்ப்புகளுள் ஒன்றுதான், அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக ஆசான்களின் சங்கிலித் தொடர் மூலம், செலுத்தப் பெறும் சூஃபிகளின் ஆன்மீக போதனா முறையாகும். அதன் மூலம் ஒரு விரிவான ஆன்மீகத் தத்துவ சூழலில், இயல்பான வாழ்க்கையை வழி நடத்த இம்முறை வகை செய்கிறது.
“நக்ஷ்பந்தி-முஜத்திதி” எனப்படும் ஆன்மீகக் கிளையின் ஆசான்கள், வேலைச் சூழல், குடும்பவியல் மற்றும் சமூகப் பொறுப்புகள் போன்ற வாழ்வியல் காரணிகளுடன் ஒன்றிணைக்கப்பட்ட ‘ஆன்மீகப் பயிற்சி உத்திகள்’ அவசியம் எனக் கருதினர். அவர்களின் போதனை முறைகள், தலைமுறை தலைமுறையாக இப்பாதையில் செல்லும் ஆர்வலர்களின் தகுதியினை உயர்த்தியது போன்று, இன்று பல தரப்பட்ட திறமைகளும், சுபாவங்களும் கொண்ட ஆர்வலர்கள் அனைவருக்கும் பலனளிக்கும் விதமாகத் திகழ்கிறது.
கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த மரியாதைக்குரிய சூஃபி ஆசான்களின் அருள்பார்வையால்தான், இந்த போதனைகள் யாவும் நீடித்து நிலைத்திருக்கின்றன.