முதன்முதலாக துருக்கிஸ்தானில் வளர்ச்சி பெற்றிருந்த ‘சில்சிலா காஜகான்’ எனும் சூஃபித்தொடரிலிருந்து உருவானதுதான் ‘நக்ஷ்பந்தி’ சூஃபித்தொடராகும். இன்றைய சீனாவின் சின்ஜியான்ங் மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட காஜா அஹ்மது யஸவி என்பவர்களும் (இறப்பு கி.பி.1167), மற்றும் இன்றைய உஸ்பெகிஸ்தானின் பிரபல நகரான புகாராவைச் சேர்ந்த காஜா அப்துல் காலிக் குஜ்தவானி (இறப்பு கி.பி.1179) ஆகிய இரு மாமேதைகளும் காஜகானின் மிகப்பிரசித்தி பெற்ற ஷைகுமார்களாவர். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவர்கள், நக்ஷ்பந்தி சூஃபித்தொடரில் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கும் தொழில்நுட்ப சொல்லாக்கம் மற்றும் ஆன்மீக அர்த்தங்களுக்கு வித்திட்டவர்களாவர். அன்னார், தங்கள் காலத்து மக்களுக்கு இசைந்ததாக, எளிதில் அணுகக் கூடிய அமைப்பில் தரீக்காவின் போதனைகளை வடிவமைத்திருந்தார்கள்.
மிகப் பிரபல சூஃபி ஷைக் காஜா பஹாவுத்தீன் நக்ஷ்பந்த் புகாரி (இறப்பு கி.பி.1389) என்பவர்களிடமிருந்து ‘நக்ஷ்பந்தி தரீக்கா’ தனது பெயரைப் பெற்றுக்கொண்டது. அன்னார், ஆன்மீக போதனைகளையும் பயிற்சிகளையும் மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப மிகப் பொருத்தமிக்கதாக அமைக்கும் மரபைத் தொடர்ந்தார்கள். காஜா பஹாவுத்தீன் நக்ஷ்பந்த் அவர்கள், அமீர் குலல் என்வர்களின் மாணவராகவும், பின்னர் அன்னாரின் பிரதிநிதியாகவும் ஆனார்கள். ஆயினும், ‘ரூஹானியா’ எனும் ஆன்மீக அடிப்படையில் காஜா அப்துல் காலிக் குஜ்தவானி அவர்களிடமிருந்தே, ஆன்மீக அறிவுறுத்தல்களையும், ‘நிசப்தமாக செய்யும் திக்ரை’யும் கற்றுக்கொண்டார்கள்.
சூஃபித் தொடர்களிலேயே, முதல் கலீஃபாவெனும், பிரதிநிதியான அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் மூலமாகப் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் வரைச் சென்றடையும் ஷைகுமார்களின் மரபுவழியைப் பெற்றிருக்கும் ஒரே ஒரு தரீகா, “நக்ஷ்பந்தி தரீகா” என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய தரீக்காக்களின் மரபுவழி யாவும் நான்காம் கலீஃபாவான அலீ (ரலி) அவர்கள் மூலம் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களைச் சென்றடைகின்றன.