கீழ்த்திசை மொழிப் புலமையாளர்கள் (Orientalists), சூஃபித்துவத்தின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். சில ஆசிரியர்கள், அதில் கிரேக்க தத்துவத்தின் தாக்கம் மேலோங்கியுள்ளது என வாதிடுகின்றனர். உத்தேசமான இக்கருத்துக்கு ஆதரவாக, கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர் R.A. நிக்கல்சன் (Professor R.A. Nicholson), சூஃபிகளின் படைப்புகளுக்கும், கிரேக்கத் தத்துவங்களுக்கும் இடையேயான ஒற்றுமைகளை மேற்கோள் காட்டுகிறார். சில ஆசிரியர்களோ, அது ‘வேதாந்தம், அல்லது புத்த மதக் கொள்கையிலிருந்து பெறப்பட்ட சித்தாந்தம்’ என்று வலியுறுத்துகின்றனர். நமது பார்வையில் இவை அனைத்துமே தவறான கோட்பாடுகளாகும். சில இயக்கங்களுக் கிடையேயான அடிப்படைக் கொள்கைகளில், சில வேளைகளில் காணப்படும் ஒற்றுமையான அம்சங்களால், ஒரு இயக்கம் மற்றொன்றிலிருந்து உருவானது என்பதனை நிரூபிக்க இயலாது.
இஸ்லாமிய ஆன்மீகத்துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த, முன்னணி பிரெஞ்சு அறிஞர், பேராசிரியர் லூயிஸ் மாஸிகன் (Professor Louis Massignon), தன்னுடைய விரிவான ஆய்வின் முடிவில், சூஃபித்துவத்தின் மூலத் தோற்றம், புனித குர்ஆன் மற்றும் பெருமானார் முஹம்மது (ஸல்) (சாந்தியும் சமாதானமும் அன்னார் மீது பொழியட்டுமாக) அவர்களின் பொன்மொழிகளிலிருந்து பெறப்பட்டதே என்று தெரிவிக்கிறார். அது வெளியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஒன்றல்ல. மாறாக இஸ்லாத்தின் உள்ளுக்குள்ளிருந்து உருவானதாகும்.
கி.பி.1762 களில் வாழ்ந்து மறைந்த இந்திய மாமேதை ஷாஹ் வலிய்யுல்லாஹ் அவர்களின் கருத்துப்படி, பல்வேறுபட்ட தரீகாக்கள் எனும் சூஃபித்தொடர்கள் தங்களிடத்தே கொண்டிருக்கும் வழிமுறைகளை உற்று நோக்குங்கால், அந்தந்த சூஃபித் தொடர்கள் எப்பகுதியில் தோன்றியதோ, அப்பகுதி மக்களுக்கு உகந்த மனோபாவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகிறது.
குறிப்பாக, மக்களின் சில வழக்கங்கள், அவர்களிடையே பிரித்தெடுக்க முடியாத அளவில், வெகு ஆழமாக வேரூன்றிப்போயிருக்கும் சூழலில், சூஃபி ஆசான்கள், பிற சமயங்கள் மற்றும் அமைப்பினரின் குறிப்பிட்ட அம்சங்களிலிருந்து ஒரு சிலவற்றை, தங்களின் வழிமுறைகளுக்கொப்ப அமைத்திருக்கலாம். ஆனால், அத்தகைய மேலோட்டமான ஒரு சில ஒற்றுமைகளைக் கூர்ந்து நோக்கத் தேவையில்லை. ஒரு சூஃபி மாணவர் தியானத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, அதிகபட்சம் தியானத்தில் அமர்ந்திருக்கும் ஒரு யோகியை ஒத்ததாகவே தெரிகிறது. ஆனால், நோக்கங்களிலும், வழிமுறைகளிலும் இருவரும் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடுகிறார்கள்.
மெஞ்ஞான உத்வேகம் என்பது ஒவ்வொரு மனித ஆன்மாவிலும் இயல்பாகவே இருந்துகொண்டிருக்கிறது. சில குறிப்பிட்ட மெஞ்ஞானக் கொள்கைகளின் வெளிப்பாடு, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு மதம் மற்றும் கலாச்சாரத்திலும் பரவலாகக் காணக் கிடைக்கிறதென்பதால், ஒரு சமூகம் மற்றொன்றிலிருந்து அவற்றை இரவல் பெற்றதாக ஆகாது. ஏனெனில், இறைவனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலை, நம் பிறவிப் பண்பாகவே இறைவன் படைத்திருக்கின்றான். ஆன்மீக முன்னேற்றம் மற்றும் ஆன்மீகப் பயிற்சியின்பால் திரும்புதல் என்பது இயல்பிலேயே மனிதனில் ஊறிப்போன ஒரு உணர்வாகும்..
சூஃபித்துவத்தில் காணப்படும் கோட்பாடுகளும், பயிற்சி முறைகளும், கிறிஸ்துவ, யூத, ஹிந்து, புத்த மற்றும் ஏனைய பிற சமயங்களில் காணப்படுவதால், இவை யாவும் இஸ்லாத்திற்கு மாற்றமானவைகள் என அர்த்தம் கொள்ளலாகாது. அவை, மனிதனின் இயல்பான நிலைமைகளைப் பிரதிபலிப்பதால் பிற சமயத்தார்களினாலும் உரிமை கொண்டாடப்படுகிறது. யார் இக்கூற்றைத் தவற விடுகிறார்களோ, மேலும் சூஃபித்துவம் மற்றும் ஏனைய ஆன்மீக அமைப்புகளுக்கு வெளிப்புறக் காரண காரியங்களை ஏற்படுத்த முனைகிறார்களோ, அவர்கள், தனித்தன்மை வாய்ந்த மனிதக் கண்டுபிடிப்பின் ஒவ்வொரு நினைவுச் சின்னத்தையும், எல்லா படைப்பினத்திற்குள்ளும் மறைந்திருக்கும் அடிப்படை ஒருமைப்பாட்டையும் தவற விட்டுவிட்டவர்கள்.