இறைஞானம் பெற வேண்டுமென்ற துடிப்பும், பௌதீக உலகத்துக்கப்பால் , வேறொரு பரிமாணத்தின் அனுபவம் பெற்றிட விழையும் உள்ளுணர்வும், ஆன்மீகப் பேருண்மையை அறிந்து, அதன்பால் மீளவேண்டுமென்ற உந்துதலும், சமயங்களைக் கடந்து, ஒவ்வொரு நபரிடத்திலும் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளது.
இயல்பாகவே, ஒவ்வொரு தனிமனிதனும், வெவ்வேறுபட்ட அளவுகளில், மேற்குறிப்பிட்ட மனோபாவத்தின் தாக்கத்திற்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றான். சிலருக்கு குறிப்பிடத்தக்க அளவாகவும், சிலருக்கு மிகக்குறைந்த அளவிலும், இத்தன்மைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சிலர், இச்சிறப்புத் தன்மைகளை மென்மேலும் மேம்படுத்தி, அதனை அன்றாட வாழ்வியலில் பயன்படுத்தும் அரிய சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றவர்களாக பவனி வரும் அதே சமயத்தில், சிலர் அதனைப் பயன்படுத்தாமலேயே இருந்து விடுகின்றனர். ஆயினும், இம்மனோபாவம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குடி கொண்டிருக்கிறது.
சூஃபிகளின் ஆன்மீக ஞான நெறியை, இறைவனை அறியும் ஞானமென்பதாகவும்,சத்தியத்தை அறிவித்துத் தரும் பாதையெனவும் வரையறுக்கும் பட்சத்தில், அது தரும் செய்தியானது, ஒரு குறிப்பிட்ட சமயத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமின்றி, முழு மனித சமுதாயத்துக்கும் அறைகூவல் விடுப்பதாய் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு சமூகத்திலும், ஒவ்வொரு காலகட்டங்களில்,மனிதர்களில் ஒரு சிலரிடத்தில் ஆன்மீக நாட்டமென்பது ஆழமாக வேறூன்றிக் காணப்பட்டது. தங்களிடத்தில் இறைநினைவு மேலோங்கச் செய்வதற்காக, சூஃபிகளைப் போன்ற ஆன்மீகப் பயிற்சிகளை வேறுபட்ட பெயர்களில் மேற்கொண்டு வந்தனர். வெவ்வேறுபட்ட கலாச்சாரம் மற்றும் சமயத்தைப் பின்பற்றியவர்களாயிருந்த போதிலும், அவர்களுக்குள்ளும் சூஃபிகளைப் போன்ற இயல்பான குணாதிசயங்கள் காணப்பட்டன.
மனித இனத்தின் அமைப்பு, வெறும் தசையுடன் கூடிய உடல் மட்டுமின்றி, “நான்” அல்லது “சுயம்” எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் மற்றுமொரு அம்சத்தையும் உள்ளடக்கிய அற்புத வடிவமாகும். (சூஃபிகளின் சொல்லகராதியில் அது “நஃப்ஸ்” என்று வர்ணிக்கப்படுகிறது.) ஆன்மீகப் பயிற்சிகளாலும், அனுபவங்களாலும், மனிதனுக்குள் மறைந்திருக்கும் , “சுயம்” என்பது தூண்டப்படுகிறது. அது மின்சாரத்தைப் போல, தனி மனிதனுக்குள் ஊடுருவிப் பாய்ந்து, அவன் அதுவரைப் பார்க்காத, பயன்படுத்திறாத ஆற்றல் வளங்களை எல்லாம் அவன் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. மேலும், “சுயம்” தூண்டப்படுவதன் விளைவாக, அகமிய உள்ளுணர்வும், விழிப்பு நிலையும் ஒரு குறிப்பிட்ட அளவில் கிடைக்கப்பெறுகிறது. இந்நிலையில் அந்நபர், தனக்குள் பின்னிப் பிணைந்திருக்கும் “நான்” என்பது, மற்றுமொரு “நான்” அதாவது இறைவனுடைய “நான்” என்பதின் பிரதிபலிப்பே என்பதை உணரத் தலைப்படுகிறார். தனக்குள்ளும், படைப்பினம் அனைத்திலும், இறைவனின் ஆட்சி நடந்து கொண்டிருப்பதை நிதர்சனமாக உணரும், இறை விழிப்புணர்வுடையவராக அவர் ஆகி விடுகிறார்.
மக்களில் பலருக்கு, தங்கள் வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் இத்தகு விழிப்புணர்வு வாய்க்கப் பெறுகிறது. தாங்களாகவே அத்தகைய நிலைக்குச் செல்வதைக் காட்டிலும், வாழ்க்கை நீரோட்டத்தில் ஏற்படும், எதிர்பாராத் திருப்பம், முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் அல்லது ‘மெய்யுணர்வு’ போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கு உண்மை யதார்த்த நிலையைத் திறந்து கொடுக்கும் வாயில்களாகின்றன. பெரும்பகுதி மக்கள் இந்த அளவு விழிப்புணர்வையே போதுமாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், மற்றும் சிலரோ, அதற்கு மேலும் சென்று, இறைவனிடம் தொடர்பு கொள்ளவும், அவனைத் தரிசிக்கவும், பேருண்மையை அனுபவிக்கவும் ஆசிக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு இந்தச் சிறிய அளவு போதுமானதன்று. அவர்கள் என்றும் நித்திய ஜீவனான அந்த இறைவனிடத்தில் முழுமையாகக் கலந்து தங்களையே இல்லாமலாக்குவதற்கு ஏங்குகிறார்கள். இறை விசுவாசமும், அவனைப்பற்றிய அசைக்கமுடியா நம்பிக்கையும், தானாகவேத் தொடர்ந்து பொங்கி வழியும் நீரூற்றைப்போல் தங்களுக்குள்ளாகி விட வேண்டுமென்பதே அவர்களின் அவா. “இறைவன் உங்களின் பிடரி நரம்புகளை விடச் சமீபித்து இருக்கிறான்” என்பதைத் தனிப்பட்ட முறையில் உணர்ந்து புரிந்து கொள்ள ஏங்குகிறார்கள். இத்தகைய ஏக்கத்தை எங்கனம் நிறைவேற்றுவது? இறைவனோ மாட்சிமை பொருந்திய மகத்தானவன். மனிதனோ மிகத்தாழ்வினும் தாழ்வான தன்மைகளுக்குச் சொந்தக்காரன். மனிதன், உலகியல் சார்ந்த பொருட்களைக் கேட்டல், தொடுதல்,பார்த்தல், சுவைத்தல், மற்றும் நுகர்தல் போன்ற பண்புகளைப் பெற்றிருக்கிறான். ஆனால் அகிலத்தின் அதிபதியான இறைவனோ இவை அனைத்தினாலும் அறிந்து கொள்ள முடியாத தனித் தன்மைகளைக் கொண்டு உயர்ந்து விளங்குகிறான். எவ்வாறு ஒரு சின்னஞ்சிறு துகளால், மிகப்பெரும் சூரியனைத் தொடர்பு கொள்ள இயலும்? எவ்வாறு ஒரு சிறு பகுதி முழுமையாய் மாற முடியும்? மனித இனம், தொன்றுதொட்டே இச்சிக்கலுக்குத் தீர்வு காணும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.