ஷேக் அபூ இஸ்ஹாக் (இறப்பு.940 அல்லது 966) என்ற ஆன்மீக அறிஞரால் சிஷ்தி சூஃபித்தொடர் நிறுவப்பட்டது. சிரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷேக் அபூ இஸ்ஹாக் அவர்கள், தங்களின் ஆன்மீக வழிகாட்டியின் மூலம் சிஷ்த் (Near Herat, Afghanistan) எனும் நகருக்கு ஆன்மீக போதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
அன்னாரால் உருவாக்கப்பட்ட இச்சூஃபித்தொடரானது, பிரபல ஷேக் காஜா முயினுத்தீன் சிஷ்தி (இறப்பு 1236) அவர்களால் பின்னர் செம்மைப் படுத்தப்பட்டு பிரசித்தி பெற்றுத் திகழ்ந்தது. மத்திய ஆசியா, ஈராக், அரேபியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில், கற்றலிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டிருந்த அன்னாரின் பூர்வீகதேசம் ஈரானாகும்.
பெருந்தன்மைக்கும், அரவணைப்புக்கும், இரக்க குணத்திற்கும் பெயர்பெற்ற காஜா முயினுத்தீன் சிஷ்தி அவர்கள் அன்பையும் சமாதானத்தையும் அகிலமெங்கும் பரப்பினார்கள். அர்ப்பணிப்புடன் அன்னார் ஆற்றிவந்த சேவையின் காரணமாக,”ஏழைகள் மீது இரக்கம் காட்டும் ஏந்தல்” எனும் பட்டத்தைப் பெற்றுச் சிறப்புற்றார்கள். அவர்களின் பிந்தைய காலத்தின் பெரும்பகுதி, இந்தியாவின் அஜ்மீர் நகரிலேயே கழிந்தது. எனவே, இன்றளவும் அந்நகரே சிஷ்தியாவின் போதனைகளை வழங்கும் மாபெரும் மையமாகத் திகழ்கிறது.