எவ்வளவுக்கெவ்வளவு ஞாபகம் இருக்கிறதோ, அப்போதிருந்தே எனக்கு ஆன்மீக ஈடுபாடுகளில் ஆர்வமிருந்து வந்தது. ஐரோப்பாவின் கத்தோலிக்க தேசத்தில் பிறந்ததால், சமயப் பற்றுடன் வாழ்வதற்கான தொடர்புகள் யாவும் தவிர்க்க முடியாததாக ,இயல்பாகவே, அமைந்து விட்டிருந்தன. இளம் வயதிலேயே கத்தோலிக்க கோட்பாடுகளின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட என்னில் , இந்தத் தோற்றமுடைய கிறிஸ்துவம் தான் வெளிப்பட்டது. முன்னரே கத்தோலிக்கத் துறவிகளின் வாழ்க்கை முறைகளின் பால் ஈர்க்கப்பட்டதுடன், தொடக்கப்பள்ளியில் பயிலும் காலத்தில், தேவாலய வழிபாடுகளுக்கு உதவிடும் சிறுவனாக ஆகியிருந்தேன். சமய வகுப்புகளை வழி நடத்தும் மத குருமார்கள் என் வழிகாட்டிகளாய் வலம் வந்த போதிலும், குறிப்பாக என்னைப் பொறுத்தவரை, அவர்களெல்லாம், ஒரு சிறந்த இறை விசுவாசம் பெற்றவர்களாகவோ அல்லது அறிவு ஞானம் உடையவர்களாகவோ என் மனதில் இடம் பெறவில்லை. அவர்கள் குறித்து என்னைக் கவர்ந்ததெல்லாம், அவர்களின் மிகச் சிறந்த சமூகத் தொண்டூழியம் என்றே சொல்ல வேண்டும்.
துள்ளிக் குதிக்கும் இளமைப் பருவத்திற்குள், புரட்சி சிந்தனைகளும் உருவெடுக்கவே, கத்தோலிக்கத்திலிருந்து என்னை நானே விடுவித்துக்கொண்டது ஒரு வகையில் நல்லதாகவே அமைந்தது. பல்லாண்டு காலமாக, தத்துவம், சமயம் ஆகியவைகளை ஆய்வு செய்வதிலும், மேலும் வாழ்க்கையை ஈடுபாட்டோடு வாழ்ந்து பார்ப்பதிலும், என்னை நானே பரிசோதித்துப் பார்ப்பதிலும், நான் யார் எனப் புரிந்து கொள்ளும் முயற்சியிலும் என் ஆர்வம் அலை மோதிக் கொண்டிருந்தது. 1970 களில், இறையியல் போதனைகளோடும், அத்துறைக்கு ரூடால்ஃப் ஸ்டெய்னர் மற்றும் அலைஸ் பெய்லி போன்றவர்கள் வழங்கிய பங்களிப்புகளோடும் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது. என் நாட்டில் அந்தக் கால கட்டத்தில், ஆன்மீக இலக்கியம் என்பதே முற்றிலும் இல்லாமலிருந்தது. கிறிஸ்துவத்தைப் பற்றி மட்டுமே ஒருவரால் படிக்க முடியும் என்ற சூழ்நிலையே நிலவி வந்தது. வேண்டுமானால் பௌத்தம்,ஜென் மற்றும் யோகா போன்றவற்றை ஓரளவு அறியலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆட்சி பீடத்திலிருந்த கம்யூனிசம், மாற்று இலக்கியங்கள் உருவாகும் வழிவகைகளையோ, இலக்கிய சிந்தனையாளர்களின் பொதுக் கூட்டங்களையோ அனுமதிக்கவில்லை. வாய்மொழி வாயிலாக, எப்போதேனும் ஒரு சில வாசக வட்டங்களையோ, அல்லது தனியார் நூலகத்தையோ அல்லது ஏதேனும் ஒரு சில வழிகளில் மேற்கத்திய நாடுகளிலிருந்து மறைமுகமாகக் கொண்டு வரப்படும் நூல்களையோ காண இயலும். அக்கால கட்டத்தில் போலந்து நாட்டில் ஆன்மீகம் என்ற பெயரில், எவையெல்லாம் கிடைத்ததோ, அவைகளின் தாக்கத்தைச் சுமந்தவனாய், மறைஞானங்கள் மீதான ஆர்வமேலீட்டில், அவ்வகைத் தலைப்புகளில் எவ்வளவு கிடைத்ததோ, அவ்வளவையும் படித்துத் தெளிந்தேன்.
1980 களில் முதன்மையாக இங்கிலாந்துக்கும், பின்னர் ஆஸ்திரேலியாவுக்கும் நான் மேற்கொண்ட மேற்கத்திய பயணங்கள், என் ஆன்மீகத் தேடுதலுக்கு, நிறைய வாய்ப்புகளை திறந்து கொடுத்தன. என்னிடத்தில் முன்பே இருந்து கொண்டிருந்த ஆர்வங்களுக்கு மேலாக, நவீன யுகத்தை வியாபித்துள்ள கருத்துகளுக்குள் மிக ஆழமாக ஈடுபடலானேன். அனைத்து விதமான அறிவார்ந்த ஆய்வுகளைத் தொடர்ந்த போதிலும், உள்ளமோ திருப்தியடையாமலேயே இருந்து வந்தது. சூஃபித்துவத்தைப் பற்றித் தெரிய வரும் வரைக்கும், இறையியல் மற்றும் நவீனயுகம் பற்றிய கல்வியானது ஒரு பாசாங்குக்காகவே தொடர்ந்து கொண்டிருந்தது.
1980 களின் மத்திய கால கட்டத்தில், அறிமுகமான ஒருவர், எனக்கு அனுப்பித் தந்த ஒரு நூல், என்னை வெகுவாகக் கவர்ந்தது. அது, இத்ரீஸ் ஷா என்பவர் எழுதிய ” ஆன்மீக ஆசானுடன் ஓர் பயணம்” எனும் நூலாகும். நான் ஷாவின் நூற்களை மென்மேலும் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். அவை எனக்காகவே எழுதப்பட்டிருப்பது போன்ற உணர்வு பிறக்கலாயிற்று. எவ்வளவு அதிகம் அவ்வகையான நூற்களைப் படித்தேனோ, அவ்வளவு அதிகம் அது என் மனோநிலையை எதிரொளித்தது என்றே சொல்ல வேண்டும்.
என்றாலும் ஒரே ஓர் சிரமம் இருந்தது. நான் படித்த எல்லா சூஃபித்துவ நூற்களும், இப்பாதையில் நடப்பதற்கு ஒரு ஆன்மீக வழிகாட்டி அவசியம் என்பதை ஒரு சேர வலியுறுத்தின. இக்கருத்தானது, வெளிரங்க உதவி ஏதுமின்றி ஒருவர் தானாகவே எல்லாவற்றையும் நிறைவாகச் செய்ய முடியும் என்ற புது யுகச் சிந்தனையிலிருந்து விலகி நின்றது. ஆனால் எங்கு போய் ஆசிரியரைத் தேடுவது ? நூற்கள் யாவும் ஆசிரியரோடு வருவதில்லையே !. ஆகையால் ஒரு விஷயம் உறுதியாயிற்று. ஒன்று ஆசிரியரைத் தேடியாக வேண்டும் அல்லது அப்படிப்பட்ட ஒருவர் கிடைக்கும் வரை பொறுமை காத்து இருக்க வேண்டும். இயல்பாகவே எளிதில் பொறுமை இழக்கும் நான், ஆசிரியரைத் தேடும் முயற்சியில் இறங்கிவிட்டேன்.
எனினும் என் தேடல் முயற்சியோ, மென்மேலும் ஏமாற்றத்தையே அதிகப்படுத்தியது. உண்மையான சூஃபியைத் தேடிக்கொண்டிருக்கும் தருணத்தில், சூஃபிகள் என அழைக்கப்படும் பல வகையானக் குழுக்களைக் காண நேர்ந்தது. ஆனால் அவர்களை உற்று நோக்குங்கால் அவர்கள் ஒரு வகையான வழிதவறிய சமய நெறியைப் பின்பற்றுபவர்களாக இருந்தார்கள். அப்போதனைகள் யாவும் வீணாகவும், தெளிவற்றதாகவும் இருந்தன. அவர்கள் பெயரளவில் “உலகளாவிய சமயம்” என்றும், “ஆன்மீகம்” என்றும் எல்லா நேரங்களும் சொல்லிக்கொண்டும், ஆன்மீக நெறி, பூர்வ ஜென்மம் மற்றும் சைவம் போன்ற பெயர்களை வெறுமனே பயன்படுத்தி வந்த போதிலும், அவர்கள் குறிக்கோள் யாவும் தங்கள் இயக்கத்தின் தலைமையை புகழாரம் சூடுவதிலேயே இருந்து வந்தது. ஆரம்பக்கட்டத்தில் சூஃபிகள் எனும் பெயரில் தோற்றமளித்த அக்குழுக்கள் பால், நான் ஈர்க்கப்பட்டிருந்தாலும், அவர்கள் எந்த ஒரு சமய நெறியின் வழிகாட்டுதலையும், கொள்கைக் கோட்பாடுகளையும் முறையாகப் பின்பற்றி ஒழுகாமையின் காரணமாக, அவ்வகை குழுக்களை விட்டு விலகிச் செல்ல நேர்ந்தது. அவை யாவும் அரை குறை அமைப்புகளாகவும், உண்மையான சூஃபித்துவத்துடன் தொடர்பற்றவைகள் என்பதையும் விரைவில் உணர்ந்தேன்.
பத்தாண்டு காலமாக, என் முன்னோக்குதல் யாவும், எங்கோ தொலைதூரத்து மலைகளில் வசிக்கும், பிரம்மஞானியை அல்ல, மாறாக ஓர் வாழும் ஆன்மீக வழிகாட்டியைத் தேடுவதிலேயே இருந்தது. உண்மையாகவே அத்தகைய தேடுதல் மிகச் சிரமமாக இருந்தது. 1990 களில் ஆஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகருக்கு ஒரு ஆன்மீக ஆசான் வருகை தருகிறார் எனும் அரிய தகவல், அந்நாட்களில் அந்நகரில் இருந்த என்னை இயல்பாகவே உற்சாகத்திற்குள்ளாக்கியது. ஆஸ்திரேலிய மாணவர்களைச் சந்திப்பதற்காக, மெல்போர்ன் புறநகர்ப் பகுதியில் தங்கியிருந்த ஹஜ்ரத் ஆசாத் ரசூல் அவர்களை நானும் சென்று சந்தித்தேன். அக்கால கட்டத்தில் சூஃபித்துவம் குறித்து ஓரளவு படித்துத் தெளிந்திருப்பதாக எனக்குள்ளாகவே எண்ணிக்கொண்டேன். சூஃபித்துவத் தலைப்புகளில் பிரபலமான எழுத்தாளர்களால் படைக்கப்பட்ட, புத்தக அறிவே என்னில் இருந்தது. அது வெறுமனே ஏட்டுக்கல்வி எனவும் மேலோட்டமான அறிவு என்பதும் விரைவில் புரியலாயிற்று. அந்நேரங்களில் என்னில் ஒருவித அகந்தையும், பிடிவாதமும், ஆன்மீக நெறியென்பது இவ்வாறுதான் அமைந்திருக்க வேண்டுமென்ற அகங்கார எண்ணமும் மிகைத்திருந்தது. அதனையொட்டி சூஃபி ஆசான் அல்லது ஷேக் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும், இவ்வாறு இருக்கக்கூடாது எனும் அளவுக்கு எனக்குள்ளே என் விருப்பத்துக்கு சிந்தனைகள் வளர்ந்திருந்தன.
ஷைகின் முதல் சந்திப்பு, பார்த்ததுமே நேசம் பிறந்தது என்று சொல்வதற்கோ அல்லது பயம் கலந்த அனுபவம் போன்றோ அமையவில்லை. மேலும் ஷேக் அவர்கள் ஒரு வகை வசீகரிக்கும் அமைப்பில் என்னை நோக்கவோ, சூழ்ச்சிக் கண் கொண்டு நோட்டமிடவோ, அல்லது எனக்கு மட்டும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடந்து கொள்ளவும் இல்லை. ஷேக் அவர்கள் மர்மங்கள் பற்றிப் பேசும் கிழக்கத்திய நபராவோ, புதிர்களை அள்ளி விடும் ஒருவராகவோ காணப்படவில்லை. மாறாக, அன்னார் சாதாரணமான, கனிவு நிறைந்த முதியவராக நான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அமைதியாக பதிலளித்துக் கொண்டிருந்தார்கள். பார்ப்பதற்குச் சாதாரணமாக, இன்னும் சொல்லப்போனால் மிக எளிமையோடு தோற்றமளித்தார்கள். அன்னார் அது வரைக்கும் என் ஆன்மீக ஆசானாக இல்லாதபோதிலும், ஷேக் அவர்களை ‘ஒரு உண்மையான சூஃபி இவர் தான்’ என என் உள்ளம் தெளிவாகத் தீர்மானித்தது.
அக்கால கட்டத்தில் வட அமெரிக்காவுக்குப் பயணம் செய்து அங்கேயுள்ள வேறு சில சூஃபி ஆசான்களைச் சந்திக்க வேண்டுமென ஏற்கனவே ஆயத்தங்கள் செய்திருந்தேன். அப்பயணத்தைத் தொடங்கும் முன்னர் மீண்டும் ஒரு முறை ஷேக் அவர்களைச் சந்தித்துக் கொண்டேன். அன்னார், எனக்கு முதற்பாடமான இதயத்தை முன்னோக்கிச் செய்யும் தியானத்தைக் கற்றுக் கொடுத்ததோடு, முதல் தவஜ்ஜுஹும் செய்தார்கள். அது பற்றி நான் அவர்களைக் கேட்டுக்கொள்ளாமலே, அவர்களாகவே எனக்கு இப்பாடத்தைத் தந்தது பற்றி நான் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
1994 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் என் பயணம் தொடங்கியது. பிரபல சூஃபி இலக்கியங்களைப் படித்துக் கொண்டிருந்ததன் மூலம், சூஃபிகளுக்கும் இஸ்லாத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதை மட்டும் உணர முடிந்தது. ஆனால் அது எவ்வகையான தொடர்பு என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதிலும் நான் தேடும் சூஃபித்துவம் எந்த ஒரு மதத்துடனும் (குறிப்பாக இஸ்லாத்துடன்) சம்பந்தப்படாததாக, ஒரு பொதுவான சூஃபித்துவமாக இருக்க வேண்டுமென எண்ணம் கொண்டிருந்தேன்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் மேற்கொண்ட அமெரிக்க சூஃபிகளின் சந்திப்பு எனக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. பெரும்பாலான சூஃபி அமைப்புகளில், சொற்பொழிவுகளும் சிறிதளவு தியானப் பயிற்சியும், உளவியல் பாடத்தின் ஒரு பகுதியும், கிழக்கத்திய வழக்கில் உள்ள சூஃபி பரிபாஷைகளும் பெயரளவில் கலந்து காணப்பட்டன. அவர்களின் கொள்கை எல்லா மதத்தினரையும் புகழ்வதாக இருந்ததே தவிர எந்த ஒரு சமயத்தையும் பின்பற்றுவதாக இல்லை.
மொத்தத்தில் மேற்கத்திய சூஃபிகள் எனப்படும் அத்தகைய ஆன்மீகப் பேர்வளிகளிடம் உண்மையான சூஃபித்துவத்தைக் காண இயலாதவனாய், ஓர் ஆண்டுகளுக்குப்ப் பிறகு, ஏமாற்றம் மட்டுமே மிஞ்சிய நிலையில் மெல்போர்ன் நகரை நோக்கித் திரும்பினேன். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, மெல்போர்ன் நகரின் சூஃபி போதனைப் பள்ளிப் பொறுப்பாளர், என்னை வாரந்திர தியான அமர்வுகளில் பங்கெடுத்துக் கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். அதோடு, ஷேக் அவர்கள் மீண்டும் மெல்போர்ன் நகருக்கு வரும் தகவலையும் சொன்னதோடு, ஷேக் அவர்களின் கேள்வி பதில் வடிவத்தில் தொகுக்கப்பட்ட புத்தகங்களையும் என்னிடம் வழங்கினார். அந்த புத்தகங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. மேலும் ஷேக் அவர்களின் போதனைகளை ஓரளவு மதிப்பீடு செய்யவும் உதவின. அவை இயல்பறிவுடன் எளிய நடையில் புரியும் விதத்தில் அமைந்தது என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியதுடன், ஷேக் அவர்களை மறுபடியும் சந்திக்கும் ஆவலையும் அதிகரித்தது.
ஷேக் அவர்களை மீண்டும் சந்திக்கச் சென்றேன். வழக்கம் போல் பரிவுடன் என்னை வரவேற்று என் அனுபவங்களைக் கேட்டறிந்தார்கள். இம்முறை அன்னாருக்கருகில் பணிவுடனும், திறந்த மனதுடனும் அமர்ந்து அதிகப்படியான பாடங்களைப் பயிற்சி செய்யும் நோக்குடன் பெற்றுக் கொண்டேன்.
அன்னாருடன் அமர்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வுகள் என்னுள் ஆச்சரியமான மாற்றத்தை ஏற்படுத்தியதை உணர்ந்தேன். அன்னாரின் தவஜ்ஜுஹ் எனும் உள்ளார்ந்த அருள் நோக்கு என்னில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இவ்வனுபவம் என்னை அன்னாரின் மாணவர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளும் வேண்டுகோளை அவர்களின் முன் வைத்தது. உடனே, அவர்களின் கரம் பற்றியவனாய் இப்பாதையில் பயணிக்கத் தொடங்கினேன்.
நாற்பதாண்டுகளாக மன இச்சையைப் பின்பற்றி, தடம் மாறிச் சென்று கொண்டிருந்த என்னை, இறைவனின் விருப்பத்திற்கொப்ப, வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்வதற்கு இப்பாதை வழிவகுத்துக் கொடுத்தது. இப்பாதையின் அனுபவங்கள் எண்ணிலடங்கா மாற்றத்தை என்னில் ஏற்படுத்தியது. அவைகளை எளிதில் விளக்கிச் சொல்வது இயலாத ஒன்றாகும். நிதர்சனமான அனுபவங்களின் தன்மைகள் ஒவ்வொன்றும், உலக மனிதர்கள் ஒவ்வொருவரும் வேறுபடுவதைப் போலவே, பல விதங்களில் வேறுபட்டவை. சூஃபித்துவ மாணவர் ஒருவர், தான் பெறும் அந்தரங்க அனுபவங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முன் வருவதில்லை. ஏனெனில், அது நபருக்கு நபர் வித்தியாசப்படும் ஒரு விநோதமான அமைப்பாகும்.
இப்பாதையில் பயணிக்கும் மாணவர், தனக்கேற்படும் உள்ரங்க நிலைகள், காட்சிகள், கனவுகள் யாவையும் சூஃபி ஆசிரியரிடமே தெரிவித்து, விளக்கங்கள் பெற்றுக் கொள்வது அவசியமாகும். ஏனெனில், ஆசிரியரால் மட்டுமே அதற்கான சிறந்த பொருள் விளக்கத்தை வழங்க இயலும்.
என்னில் ஏற்பட்ட உடனடி நிலைமாற்றம் எதுவெனில், சூஃபித்துவத்துக்கும், இஸ்லாத்துக்கும் இடையேயான உறவைப் பற்றிப் புரிதலை ஏற்படுத்தியதாகும். இர்ஃபான் எனப்படும் இஸ்லாமிய மறையியல் ஞானம் எனக்கு முன்பாகத் திறந்திருப்பது போல உள்ளூர உணரத் தொடங்கினேன். குர் ஆனின் அர்த்தங்களும், சூஃபி இலக்கியங்களும் தெள்ளத் தெளிவாகப் புரியத் தொடங்கின.
அடுத்ததாக என்னில் ஏற்பட்ட மாற்றம் யாதெனில், என் சொந்த வரம்புகள், என்னுடைய குறைபாடுகள் மற்றும் தவறுகள் யாவும் மிகச் சிறந்த முறையில் புரியத் தொடங்கியது. இறுதியாக, இப்பாதையில் செல்வதற்குத் தகுதியான வழிகாட்டி மிக மிக அவசியம் என்பதையும் விளங்கிக் கொண்டேன்.
சுதந்திர விரும்பியான மேற்கத்திய மனிதனுக்கு, கடுமையான விதிமுறைகளுக்குள் கட்டுப்பட்டுக் கிடப்பது போல தோற்றமளித்தாலும், ஷேகின் மென்மையான அணுகுமுறையும், புன்னகை பூக்கும் பொலிவும், இரக்க குணமும், பொறுமையும் இப்பாதையில் பயணிப்பதற்கு இலகுவாக இருந்தது. ஷேக் அவர்களை ஒரு போதும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விமர்சிக்க நான் பார்த்ததேயில்லை. சூஃபிகளின் வழி மென்மையாக இருந்த போதிலும், வலிமை மிக்கதாகும்.
அடுத்தடுத்த இந்தியப் பயணங்கள் மூலம் ஷேகின் சந்திப்பினால், உண்மையான சூஃபித்துவம் குறித்த ஆழ்ந்த அறிவும், கூடுதல் பரிமாணமும் விளங்களாயிற்று. இந்திய சூஃபிகள் யாவரும், முஸ்லிம்களால் மட்டுமன்றி, பிற சமயத்தவர்களாலும் மதிக்கப்பட்டு போற்றப்படுகிறார்கள். தர்ஹாக்கள் எனப்படும் சூஃபி வலிமார்களின் அடக்கஸ்தலத்தில், ஆயிரக்கணக்கில் மக்கள் வருகை தருவதைப் பார்க்க முடிகிறது. முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் ஒரு சில மேற்கத்தியர்களும் கூட, மத இனப் பாகுபாடின்றி, அம்மஹான்களின் திருத்தலங்களுக்கு வருகை புரிவதைக் காணலாம்.
இந்தியாவிலுள்ள கான்காஹ் எனப்படும் சூஃபி மையத்திற்கு வருகை தரும்போதெல்லாம், அன்னாரின் பரிவு மிக்க கவனிப்பு, ஒரு பாசமுள்ள தந்தை தன் பிள்ளைகளை அக்கறையோடு கவனிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். உபசரிப்பு ஒரு புறமிருந்தாலும், ஆன்மீக ரீதியான பாதுகாப்பும் அரவணைப்பும் அன்னாரிடமிருந்து கிடைத்துக்கொண்டே இருந்தன.
ஷேக் அவர்களின் சகவாசத்தில் இருக்கும் காலகட்டத்தில் ஒரு போதும் பொருளாதரம் பற்றிய பேச்சுக்கே இடமிருக்காது. இங்கே போதனைகளுக்கும், வழிகாட்டுதலுக்கும் பண வசூல் செய்யப்படுவதில்லை. அன்னார் யாரிடமும் பணமோ அல்லது வேறேதேனும் பொருளோ ஒரு போதும் கேட்டதில்லை. அவர்கள் தங்களுக்குத் தேவையானதை தங்கள் உழைப்பின் மூலமல்லாது அடுத்தவர் உழைப்பிலிருந்து பெற்றதில்லை.
ஒரு முறை அன்னாரை அணுகி இந்த கான்காஹ் எவ்வளவு சீக்கிரம் கட்டிமுடிக்கப்பட்டது என வினவினேன். புன்முறுவலோடு என்னைப் பார்த்தவர்களாக, “இது கட்டி முடிக்க 25 ஆண்டுகளாயிற்று என்றவர்கள் , எந்த ஆதரவாளரின் துணையுமின்றி இறைவனிடம் மட்டுமே உதவி கோரப்பட்டது, அப்பிரார்த்தனைக்குப் பதில் தாமதமான போதிலும் நிச்சயமாக நிறைவேறி விட்டது “ என மறு மொழி பகர்ந்தார்கள்.
மற்றுமோர் அம்சம் அன்னாரிடம் நான் நோட்டமிட்டதில், அவர்கள் புதுமுகங்களையோ அல்லது புதிய மாணவர்களின் வருகையையோ தேடித் திரிவதில்லை. சூஃபித்துவத்தின் பிரதான நோக்கமான ‘இறை நெருக்க உணர்வு’, தன்னிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் வந்து விட வேண்டுமென்பதிலேயே அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். சூஃபித்துவமென்பது ஒரு இயக்கம் அல்ல. ஒரு சிலரே இத்துறையின் பால் ஈர்க்கப்படுகிறார்கள். அதிலும் மிகச் சிலரே இப்பயணத்தின் இறுதி இலக்கை எட்டிப் பிடிக்கிறார்கள்.
வளர்ந்து வரும் மேற்கத்திய மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, ஷேக் அவர்கள், தங்களின் ஆன்மீக ஆசானின் அனுமதியோடு “சத்திய வேட்கை மையம்” என்ற அமைப்பை நிறுவினார்கள். அது பாரம்பரிய சூஃபி தரீக்காவின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டதில் சூஃபிகளின் பங்களிப்பைப் பற்றிப் பேசும்போது, ” சூஃபிகள் என்பவர்கள், மடத்திற்குள் பூட்டப்பட்டுக் கிடக்கும் துறவிகள் அல்ல” என வலியுறுத்துவார்கள். சூஃபிகள் எப்போதும் உலகில் பிரசன்னமாயிருப்பவர்கள். மேலும் சொல்லப்போனால், சூஃபிகள் தங்களின் உள்ரங்க நிலைகளின் மூலம் வெளிரங்க உலகைச் சரி செய்ய முனைபவர்கள். ஒவ்வொரு மனிதனுடையை நோக்கமும், தான் முழு மனிதனாக, இன்ஸானே காமில், சரியான மனிதாக ஆகி விட வேண்டுமென்பதே.
வரலாற்று ரீதியாக, சூஃபிகள் செய்து வரும் முயற்சிகள் யாதெனில், மனிதனில் ஆன்மீக வளர்ச்சியும், படைத்தவனிடம் மீண்டும் திரும்புதலுக்கு உகந்த நிலைமையை அவனில் உருவாக்குதலுமேயாகும். அவ்வகையில் ஷேக் அவர்கள், தங்களின் முதிர்ந்த வயதிலும், வருடத்திற்கு ஒரு முறையேனும், அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய மாணவ குழுக்களைச் சென்று சந்திக்கச் செல்வது வழக்கம். அவ்வாறான வருகையின் போது, ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் நீண்ட நேரம் கலந்துரையாடுவார்கள். மேலும் புதிய மாணவர்களையும் சந்திப்பார்கள். அவர்கள் ஒரு போதும் விரிவான சொற்பொழிவு நிகழ்த்தவோ, பெரும் கூட்டத்தைக் கூட்டவோ முயற்சிப்பதில்லை. ஆயினும் தம்மைச் சந்திக்க வருபவர்களிடம், அன்னாரின் பிரசன்னம், ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.
ஷேக் அவர்களின் பயிற்சிகள் யாவும் நடைமுறையியலாகவும், அனுபவம் மிக்கதாகவும் இருக்கின்றன. நம்பிக்கை கொள்ளவேண்டுமென்ற எவ்விதக் கோட்பாடும் அவர்களிடம் இல்லை. மேலும் பரிந்துரைக்கப்பட்ட புத்தகப் பட்டியலும் இல்லை. தியானப் பயிற்சிகளைச் செய்வதற்குத் தீர்மானித்த ஒருவரிடம், அது ஒழுங்குடன் கடைபிடிக்கப்படுகிறதா என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில், ஆரம்பக்கட்ட பயிற்சிகள் அவரிடம் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. வணிக வளாகத்துக்குள், ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கிச் சென்று கொண்டிருக்கும் மனிதர்கள் போன்று, பல வகையான ஆன்மீக அமைப்புகளுக்குள் ஏறி இறங்கி, காலத்தை விரயமாக்கும் விநோதமான பல மனிதர்களை நான் அவதானித்திருக்கிறேன். அவர்கள் எந்த ஒன்றிலும் ஆழ்ந்த ஈடுபாடு காட்டாததால், எதனையும் அடைய முடியாமல் இருந்து கொண்டிருக்கின்றனர். சூஃபிகள் வலியுறுத்துவதெல்லாம், நிலத்தின் ஆழத்தில் காணப்படும் தண்ணீரைச் சென்றடைய, ஒரே இடத்தில் மட்டுமே துளையிட்டுத் தோண்ட வேண்டும். அவ்வாறில்லையெனில், ஒருவர் பற்பல இடங்களில் துளையிடும் பணியில் ஈடுபாடுவாரே தவிர, அவரால் ஒரு போதும் தண்ணீரைப் பெற்றுக் கொள்ள இயலாது. சூஃபிகளின் கூற்றுப்படி, ‘ ஒரே சமயத்தில் இரு படகில் ஒருவரால் ஒருபோதும் பயணம் செய்ய இயலாது.’
இப்பதையில் பயணிக்கும் தேட்டவான்கள் யாவருக்கும், நன்னம்பிக்கையுடன் கூடிய மகிழ்ச்சியூட்டும் தகவலைக் கூறி என் சுருக்கமான அனுபவத்தை நிறைவு செய்கிறேன். இன்றைய பரபரப்பான மாறி வரும் உலகத்தில், கவலையும், அமைதியின்மையும், பாதுகாப்பின்மையும் நிறைந்து வழியும் தருணத்திலும், உண்மையான சூஃபி வழிகாட்டுதல் இதற்கு முன்னர் இருந்தது போன்றே இப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆவல் கொண்ட இதயத்தோடு, நேர்மையான முறையில் செய்யும் பிரார்த்தனை மூலம், ஓர் உண்மையான ஆன்மீக வழிகாட்டியை நிச்சயமாக அடையப் பெறலாம். அவர் நம்மை இப்பயணத்தின் இறுதி இலக்கு வரை அழைத்துச் செல்வார் என்று உறுதியுடன் கூறி விடை பெறுகிறேன்.