ஷேக் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கி.பி.1077 ஈரானில் உள்ள ஜீலான் எனும் நகரில் பிறந்தார்கள். ஆன்மீகக் கல்வியைக் கற்றுக்கொள்ளும் முன்னரே, இளம் பருவத்திலேயே இஸ்லாத்தின் அனைத்துத் துறைகளையும் கற்றுத் தேர்ந்தார்கள். இறுதியாக அன்னார் பாக்தாத் நகருக்கு குடிபெயர்ந்தனர். அன்னாரின் அற்புத சொற்பொழிவுகளைச் செவிமடுக்க, அன்றைய முஸ்லிம் உலகின் தலைநகராம் பாக்தாத்தில், ஆயிரக்கணக்கில் மக்கள் திரளுவர்.
அன்னார் அறநிறுவனங்களை மேற்பார்வையிடவும், நீதிமன்ற முடிவுகளை வெளியிடவும், அரசு உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கவும் மேலும் பார்வையாளர்களைச் சந்திக்கவும் போன்ற மிக முக்கிய பொறுப்புகள் வகிக்கும் சிறப்புக்குரிய பொதுநபராகத் திகழ்ந்தார்கள். நற்குணம், நன்னெறி மற்றும் சுய ஒழுக்கம் போன்ற பண்புகளை வலியுறுத்துவதே அவர்கள் கொள்கையின் கருப்பொருளாக இருந்தது. அன்னாரின் புகழ்மிக்க போதனைகளின் தாக்கம் கி.பி.1166ல் அவர்கள் மறைவுக்குப் பின்னும் அவர்களைப் பின்பற்றி ஒழுகியவர்களிடத்திலும், அடுத்த தலைமுறைச் சீடர்பெருமக்களிலும் ஒரு எழுச்சியை உருவாக்கி ‘காதிரி தரீக்கா’ அமைவதற்கு வழிவகுத்தது.