நான் வளர்ந்து வரும் கால கட்டத்தில், என்னைக் காட்டிலும் அபார ஆற்றலுடைய ஏதோ ஒன்று இருந்து கொண்டிருக்கிறது என்ற விழிப்புணர்வு எனக்கு ஏற்பட்டது. அது தான் கடவுள் என்றும் எனக்குப் புரிய முடிந்தது. ஆனால், அந்தக் கருத்து நவீன காலக் கோட்பாடுகளில் தெளிவில்லாத வகையில் வேரூன்றி நின்றதோடு, அந்த உன்னத உண்மையின் முன்னிலையைத் தேடக்கூடியதாக இல்லை. தீவிர நோக்குடன் கூடிய ஒலிப்பிழம்பான கண்களையுடைய, என் தந்தையோடிருக்கும் போதுதான் அது ஒரு வகையான இறையருள் என்பது எனக்குப் புரிந்தது. அதுவே இறைவனின் உறுதியான இருப்பைப் பற்றிய உணர்தலை எனக்குத் தந்தது.
தியானம் என்பது எனக்கு விருப்பமான ஒன்றாக இருந்த போதிலும், தொடர்ந்து வெறுமனே அமர்ந்திருப்பதென்பது ஒரு போதும் எளிதான காரியமன்று. எனக்கு பத்தொன்பது வயதிருக்கும் போது, டாய் சீ எனப்படும் சீன உடற்பயிற்சிக் கலையின் பால் ஈர்க்கப்பட்டேன். அது என் வாழ்வில் ஒரு சமநிலையான உணர்வையும், செயல் திறனையும் தந்தது. மேலும், ஆற்றல் சம்பந்தமான பணி, முன்னேற்பாடற்ற நடனக் கலை, நாடகம் மேலும் நடன உத்திகளை உள்ளடக்கிய உடற்கூறு ஆய்வுகள் போன்றவைகளின் பக்கம் பயணம் தொடங்கியது.
நான் கல்லூரியில் நடிப்புத் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருந்தேன். அத்துறை, “முன்னேற்பாடற்ற நடனக் கலை”யின் பாரம்பரியத்திற்குள், சமயோசிதம் மற்றும் செயல் திறன் முதலிய அம்சங்களை முன்னோக்கி அமைந்திருந்தது. பெருமளவில், “முன்னேற்பாடற்ற நடனக்கலை”யின் விரிவான அர்த்தம் யாதெனில், நடனக் கலை மற்றும் நாடகத் தொகுப்பு சம்பந்தமாக எவ்வித முன் கூட்டிய தயாரிப்புமின்றி நிகழ்ச்சியைப் படைத்தலாகும். அதன் நோக்கம், உங்களின் புலனுணர்வுத் திறனை மெருகூட்டி, அதன் காரணமாக, அந்தந்த தருணத்திற்குட்பட்டு சமநிலையும், இணக்கமும் இணைந்து அங்கீகரிக்கத் தக்க படைப்பை உருவாக்கவும், மேலும் உடலுக்கு போதுமான அளவு கலைநயத்தை மேம்படுத்தச் செய்வதுமாகும். அத்தகைய முன்னேற்பாடற்ற நடனக் கலையின் பயிற்சியாளர்களிடத்தில், “தருணத்துடன் ஒன்றியிருத்தல்” என்ற நிகழ்வு பற்றிய பேச்சு இருந்து வந்தது. நான் இளங்கலை ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டிருந்த போது, இது பற்றி நடனக் கலைஞர்கள் என்ன புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை நேர்முகப் பேட்டி எடுப்பதற்காக நியூயார்க் சென்றிருந்தேன். நான் செய்து வந்த சொந்தப் பயிற்சிகள், “பிரசன்னம்” பற்றிய புரிதலுக்கான ஆர்வத்தை எனக்குள் விதைத்தன. நான் எதைச் செய்து கொண்டிருந்தேனோ அதுவும், “தருணத்துடன் ஒன்றியிருத்தல்” எனும் நிலையும் கொண்டிருந்த ஒருமைப்பாட்டு உணர்வு, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும், இம்மாதிரியான வழிகளில் எனக்குள் உண்டாகும் விழிப்புணர்வின் நேரத்தை அதிகமாக்கிக் கொள்ளத் தேவையான உத்திகளைத் தேடத் தொடங்கினேன். இந்நிலைக்குள் சஞ்சரிக்கும்போது, நடனம் எவ்விதச் சிரமமுமின்றி வருவதோடு, ஒன்றுக்கொன்று எல்லாவற்றுடன் தொடர்புடைய என் புலனுணர்வுத் திறனும் சக்தி பெற்றுக் கொள்கிறது. மேலும் கட்டுப்பாடு மிகுந்த சுய உணர்விலிருந்து சுதந்திரம் மற்றும் தற்போது நிகழ்த்தும் படைப்பைப் பற்றிய தெளிவு ஆகிய இரண்டுக்குமிடையேயான சமநிலையைக் காண முடிந்தது.
நான் நடனமாடும் போது, “தருணத்துடன் ஒன்றியிருத்தல்” எனும் நிலை எல்லா நேரமும் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்தேன். என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ அதனுடன் சரணாகதி அடைவதின் முக்கியத்துவத்தை நான் கண்டு கொண்டதுடன், மேடையின் இயக்கத்தை நிரப்புவதற்கு, என் சுயத்தைத் தவிர வேறொரு விஷயம் மேலோங்கி நிற்பதற்கு நான் வழிவிடுவதையும் அறிந்தேன். ஆனாலும், அத்தகைய விடுவித்த நிலை வருவது எப்போதும் போதுமான அளவில் இருப்பதில்லை. கல்லூரிப் படிப்புக்குப் பின்பும் தொடர்ந்து நடனம் மற்றும் நாடகக் கலையைக் கற்றுக்கொண்டிருந்தேன். ஆனால், இந்த தியான அனுபவங்களுக்குள் ஆழமாகச் செல்வதற்கான விருப்பத்தையும், நடிப்புத்துறையின் கட்டமைப்பு எதிர்பார்க்கும் தேவையையும் ஒரு சேர இணங்க வைப்பதில் சற்று சிரமம் தென்பட்டது. சில நேரங்களில், “தருணத்துடன் ஒன்றியிருத்தல்” எனும் நிலை என்னை விட்டு விலகாது, தொடர்ச்சியாக என்னை நிற்க வைத்துவிடும். சுய மேம்பாட்டை முன்னோக்கும் விதமாக, உடல் இயக்கம் பற்றிக் கற்பிக்கப்படும் வகுப்புகளில் சேரத் தொடங்கினேன். அப்போதுதான், பக்திப் பயிற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. எனினும், எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தை நோக்கியும் ஈர்க்கப்படவில்லை. என் சுயத்தை மேம்படுத்துவதற்காக, என் முன்னோக்குதல் யாவும் உடல் இயக்கம் சம்பந்தமான பயிற்சிகளின் பக்கமாகவே இருந்தது. நிகழ்கால வாழ்க்கைக்குள் இருப்பதற்கான திறன்களை முட்டுக்கட்டை போடக்கூடிய கட்டுப்பாடுகளின் படுகைககளை, உடல் சம்பந்தமான விழிப்புணர்வு நிலை போக்கி விடலாம் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.
2001 ஆம் ஆண்டில் கிரீன்விச் கலை மற்றும் கலாச்சார அலுவலகத்தில் பணிபுரியத் தொடங்கினேன். அங்கு பணியாற்றி வரும் என் வயதையொத்த பெண்மணியிடம் காணப்பட்ட அபாரமான அரவணைப்பும், பணிவன்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. சக பணியாளர்கள் யாவரிடமும் அவர் பொறுமையோடு, மென்மையாக நடந்து கொண்ட விதமும், அவரிடம் இருந்த தனித்தன்மை வாய்ந்த தரமான குணாதிசயமும் என்னை அவரிடம் நேரம் கொடுத்து பழகும்படி செய்தது. அவர் ஹிஜாப் என்றழைக்கப்படும் முக்காடு அணிந்திருந்ததைப் பார்த்த மாத்திரம், ஓர் இளம், வெள்ளைக்கார ஆங்கிலப் பெண் எவ்வாறு இஸ்லாமிய சமயத்திற்கு மாறியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் என்னிடம் மேலிட்டது. அவரின் ஆன்மீகப் பயிற்சிகளைப் பற்றி நான் விசாரித்த போது, அது பற்றி பெருந்தன்மையோடு ஆனாலும் சற்று எச்சரிக்கையோடு என்னிடம் பேசினார். அவர் பேசிய விதம், ஏதோ ஒரு அரிதான, மதிப்பு வாய்ந்த ஒரு விஷத்தைப் பாதுகாப்பது போன்றிருந்தது. அவர் சூஃபித்துவத்தைப் பற்றி அதிகமாக ஒன்றும் என்னிடம் பேசவில்லை. மேலும், தியான அமர்வுகளில் பங்கெடுக்கவும் என்னை வற்புறுத்தவில்லை.
கிரீன்விச்சில் இருந்த இறுதி கால கட்டதில் யோகா பயிற்சி முகாமில் பங்கெடுக்க எகிப்து நாட்டுக்குச் சென்றேன். அது முஸ்லிம்கள் நோன்பிருக்கும் ரமலான் மாதமாக இருந்தது. ஷர்ம் அல் ஷேக் ( ஷேக் விரிகுடா) எனும் நகரில் வந்திறங்கியதும், அம்மண்ணின் சக்தி உடனடியாக வெளிப்பட்டது. புனித பூமியின் அர்த்தம் இது தான் என்பது சட்டெனப் புரிந்தது. நான் இயற்கையின் வலிமையை எளிதாக உணரக்கூடியவளாக இருந்து வந்தேன். அதனால், மலைப்பாங்கான மற்றும் சக்தி வாய்ந்த பகுதிகள் இருக்குமிடத்திற்கு இயல்பாகவே ஈர்க்கப்படுவேன். ஆனால் இப்பகுதியோ ஒரு குறிப்பிட்ட தனித்தன்மையுடன் திகழ்ந்தது. இங்குதான் என் வாழ்நாளில் முதன் முறையாக, என் இதயத்தையே துளைத்துவிடும் ஒரு இனிமையான ஓசையைச் செவியுற்றேன். அவ்வாசகங்களின் அர்த்தம் பற்றி என்னிடம் எந்த ஒரு யூகமும் இல்லை; அது தான் “அதான்” எனப்படும் பாங்கின் ஓசை. தொழுகைக்காக அழைக்கப்படும் அழைப்பொலி. பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டு மலைகளில் எதிரொலித்த அவ்வொலி, என்னிடம் தெளிவாக வந்து சேர்ந்தது.
நான் இங்கிலாந்து திரும்பியதும், அந்த இஸ்லாமிய ஆங்கிலத் தோழியிடம், தங்களுடைய இல்லத்தில் தங்களோடு தியானப் பயிற்சியில் கலந்து கொள்ளலாமா என்று வினவினேன். தியானம் எவ்வகையிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லாவிடினும், அதனை மீண்டும் செய்யவேண்டும் மற்றும் தோழியின் குழுவினரையும் பார்த்து விட வேண்டுமென விரும்பினேன். அந்தக் குழு மேலாளர், என் வருகைக்கான காரணம் கேட்ட மாத்திரத்தில், என் சிந்தையில் உதித்த பதில், ” எது சத்தியம் என்பதை அறிவதற்காக” என்பதுதான். உறுதிப்பாடு மற்றும் சத்தியம் ஆகிய இரண்டும் சூஃபித்துவத்தின் அதி முக்கியமான சொற்கூறுகள்; அது போன்ற சில விஷயங்களை முந்தைய நாள் இரவு கொஞ்சம் தெரிந்து கொண்டேன். அந்த உள்ளுணர்வின் தெளிவு வியப்பானது. அதுவரை என் தேடல் எதுவாக இருந்தது என்றே நான் உணரவில்லை. அந்த உள்ளுணர்வின் அனைத்து அம்சங்களையும் ஒளியூட்டுவது போல அக்கேள்வி அமைந்தது மட்டுமின்றி அதற்கான பதிலும் என்னுள் தொழுகைக்கு அழைக்கும் அழைப்பொலியைப் போன்று தெள்ளத் தெளிவாக எதிரொளித்தது. அன்றைய இரவில் நான் செய்த ஒரு மணி நேர தியானம் மிக இலகுவாக, முழுமையாக செய்து முடிக்கும்படியும், ஒரு வித அரவணைப்பான மனநிறைவைத் தருவதாகவும் இருந்தது ஒரு வகை ஆச்சரியமான நிகழ்வு என்றே சொல்ல வேண்டும். அன்றாடப் பயிற்சிகளைச் சிறிய முயற்சியிலேயே நல்ல முறையில் தொடர்ந்து செய்யத் தொடங்கினேன்.
நமது ஞானப் பரம்பரையின் ஆசானாகிய ஷேக் அவர்களைச் சந்தித்து ஒரு வருடமிருக்கும். அன்னார் லண்டன் குழுவினரின் மேலாளரின் குடும்பத்தார் வசிக்கும் வீட்டில் தங்குவார்கள். ஹஜ்ரத் அவர்களின் முரீதுகளுக்காக அவ்வீடு திறக்கப்பட்டிருக்கும். ஹஜ்ரத் அவர்கள் அவ்விடத்தில் தங்கும் காலமெல்லாம், ஓர் அழகிய இனிமையான அமைதியும், ஆத்ம சாந்தியும் தவழ்ந்து வருவதைக் காண இயலும். ஹஜ்ரத் அவர்கள் அங்கிருக்கும் காலமெல்லாம் முடிந்த வரை அடிக்கடி என்னை நான் அங்கே இருக்கும்படி அமைத்துக் கொண்டேன். அத்தகைய வருடாந்திர வருகை, ஒவ்வொருவரும் ஹஜ்ரத் அவர்களின் சந்திப்பின் தேவையாக இருப்பதால், படு சுறுசுறுப்பை உருவாக்கும் விதமாக இருக்கும். ஹஜ்ரத் அவர்களின் மாணவர்கள் அன்னாருக்காக தேனீர் தயாரிக்கும் பணியில் மிகுந்த அக்கறையோடு காணப்பட்டதை நான் அவதானித்தேன். அத்தகைய பணிவன்பு மிக்க ஒழுங்கு முறைகள் எனக்கு அந்நியமாகத் தோன்றிய போதிலும், அல்லாஹ்வை நெருங்க வைக்கும் அத்தகைய ஆசிரிய மாணவத் தொடர்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கும் போதுதான், அந்த ஒழுங்கு முறையின் மதிப்பு எப்படிப்பட்டது என்பது தெரிந்தது.
பெரும்பாலும் ஒன்றுமே இல்லாத வெற்றிடத்தை மட்டும் உள்ளடக்கிய ஒரு அறையில், மெல்லிய மெத்தையின் மீது அமர்ந்திருக்கும் நிலையில் ஷேக் அவர்களை முதன் முறையாகச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்ப்பட்டது. அறிமுகத்திற்கு முன்னதாகவே, சில கேள்விகளை தயாராக வைத்துக்கொண்டேன், அதற்கான பதில்களை நான் எதிர்பார்க்கலாம் எனவும் சொல்லப்பட்டிருந்தேன். ஆயினும், ஹஜ்ரத் பெருந்தகையுடனான சந்திப்பு நான் எதிர்பார்த்த வகையில் ஒரு போதும் அமையவில்லை. மிக முக்கியமான கேள்விகள் என நாள் கணக்கில் தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால், அன்னாரின் முன்னிலையில் வார்த்தைகல் தட்டுத் தடுமாறி நிலை குலைந்தது போலாகி விட்டது. மேலும், சிந்தனையிலிருந்த அவற்றின் அர்த்தங்களும் நினைவிலிருந்து நழுவத் தொடங்கின. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை எதிர்பார்த்துக் காத்திருந்த ஹஜ்ரத் அவர்கள், “உங்களுக்கு கேள்வி என்ன என்று தெரியவில்லையென்றால், உங்களால் பதிலைப் பெற்றுக்கொள்ள இயலாது” எனக் கூறி விட்டார்கள்.
ஹஜ்ரத் அவர்களின் பேரொளியில், என் உள்ளத்திலிருந்து வெளி வராத அத்தனையும் கூனிக் குறுகிப் போய் ஒன்றுமில்லாமல் போனது. மேலும், என் கேள்விகள் யாவும் அவ்வளவு தூரம் உண்மையானதல்ல என்பதும் தெள்ளத் தெளிவாகத் தோன்றியது. இதயத்தை முன்னோக்குதலிலும், சத்தியத்தைத் தெளிவாகப் புரிய முயற்சிப்பதிலும், எனக்குத் தொடர்ந்து பயிற்சிகளை ஹஜ்ரத் வழங்கினார்கள். பின்னர், ஹஜ்ரத் அவர்களிடம் நான் வரைந்த கவிதை ஒன்றைக் காண்பித்த போது, இதைத் தான் உனக்கு விளங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்களே பார்க்கலாம். இந்த பதில் என்னை ஒரு கணம் நிலை குலைய வைத்து விட்டது. எனது கவிதை வரிகள் தெளிவாக இருப்பதாக நான் நம்பிக் கொண்டிருந்தேன், ஆனால் ஹஜ்ரத் அவர்களோ, என் வார்த்தைகளின் அர்த்தங்கள் ஆங்காங்கே திரையிட்டு மூடிக்கொண்டுள்ளதை சுட்டிக் காட்டினார்கள். ஹஜ்ரத் அவர்கள் என்னைத் தொடர்ந்து கவிதை எழுதும்படி ஆர்வப்படுத்தினார்கள். அதுவே, ஒரு வகையில் அவர்கள் மீது கவனம் ஏற்பட வழிவகை செய்தது. ஒரு கவிதையை முழுமையாக எவ்வாறு அமைப்பது, மற்றும் அதன் இறுதி இலக்கை எட்டும் வரை அதன் மீது கவனம் கொள்வது, சொல்ல வரும் வார்த்தைகளைத் தெளிவாக, நேர்மையாக மற்றும் நேரடியாக எவ்வாறு சொல்வது என்பது போன்ற அற்புதமான விஷயங்களை, கவிதை மரபுகளின் வரையறைக்குள் ஹஜ்ரத் அவர்கள் அழகிய முறையில் கற்றுத் தந்தார்கள். இவை அனைத்திலும், ஒரு ஆன்மீக உள்ளர்த்தம் இருப்பதை பின்னர் நான் உணர்ந்து கொண்டேன்.
ஹஜ்ரத் எவ்வாறு எனக்குப் போதிக்கிறார்கள் என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்தது என்று சொல்லலாம். அக்கால கட்டத்தில் எனது ‘நான்” எனும் அகந்தை, அன்னாருடனான சந்திப்புகளை பெரிய முக்கியத்துவம் இல்லாததாகத் தோன்றச் செய்து என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. பெரும்பாலும், மிகச் சுருக்கமாக அமையும் அவ்வாறான சந்திப்புகள் எவ்வாறு என்னை யார் என்று தெரியாத ஒருவரால் எனக்குப் போதனைகளை வழங்க இயலும் என்பதைப் புரிவது கடினமாக இருந்தது. எது வரைக்கும் உள்ளம் முறையான இணைப்பைப் பெற்றிருக்குமோ, அதுவரைக்கும் வெளிரங்க ஆசிரிய மாணவத் தொடர்பைப் பற்றிய பாசாங்குகள் எதுவும் அவசியமன்று என்பதை ஹஜ்ரத் அவர்கள் எனக்குப் புரிய வைக்க முயற்சித்தார்கள். ஆனால் அதைப் புரிந்து கொள்வது எனக்குக் கடினமாகத் தோன்றியது. ஆனால், எனக்குப் புரியாமல் திரைமறைவில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. நாளும் பொழுதும் என்னில் மாற்றங்கள் நிகழுவதை நான் அவதானிக்க முடிந்தது. அறவே மாற முடியாதிருந்த கடின சூழ்நிலைகள் யாவும், குறைந்த கால அவகாசத்திற்குள்ளாகவே என் வாழ்கையை புரட்டிப் போட்டன. ஹஜ்ரத் அவர்களின் போதனைகளின் தாக்கம் இவ்வாறுதான் தெரியத் தொடங்கியது. வெகு சீக்கிரமாகவே ஹஜ்ரத் அவர்களின் பேரில் மானசீகமான நம்பிக்கை ஒளிவீசத் தொடங்கியது.
அந்த நன்னம்பிக்கை என்னுள் படிப்படியாகத் துளிர் விட்டு வளரத் தொடங்கியது. மேலும் அதே நேரத்தில் எனது அறிவும் ஹஜ்ரத் அவர்கள் என் வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டது. அன்னார் எங்களுடன் இருக்கும்போது எவ்வளவு அபரிமிதமான நேசம் பொங்கி வழிகிறது என்பதையும், அவர்கள் முன்னிலையில் எவ்வாறு என் நிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது என்பதையும் அடையாளம் கண்டு கொண்டேன். என் வாழ்வில் ஹஜ்ரத் அவர்களின் பிரசன்னம், இறைவனின் பேரருள் என்றுதான் சொல்ல வேண்டும். குறுகிய ஆரம்பக் கட்ட சந்திப்புகளில், இப்பாதையில் நான் எதிர்கொள்ளும் தடைகளை அன்னார் உணர்ந்திருந்தார்கள். அல்லாஹ்விடம் என்னை நான் சமர்ப்பணம் செய்வதற்கு முன், ஆசிரிய மாணவர் தொடர்பு அமைப்பில் என்னை முதலில் சரணடையச் செய்ய வேண்டுமென்பதை குறிப்பிடத்தக்க நுட்பமான வழிகளில் நான் அறியத் தொடங்கினேன். இவை அனைத்துமே உள்ளத்தின் மூலமே நடந்தது முடிந்தது. அன்னார் அதுபற்றி ஒரு போதும் பேசியதே இல்லை, மேலும் என்னை பைஅத் பெற்றுக்கொள்ளும்படி ஊக்குவிக்கவும் இல்லை. பதிலாக, ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய கடமைப்பாட்டை எனக்குச் சுட்டிக் காட்டியதோடு அது விஷயத்தில் முடிவெடுக்கும் பொறுப்பை என்னிடத்திலேயே ஒப்படைத்து விட்டார்கள். அத்தகைய வலியுறுத்தலற்ற அணுகுமுறை, நான் ஏறிப்பயணமாக வேண்டிய பாதை இதுதான் என்பதை என்னுள் இன்னும் அதிகமாக உறுதி செய்து விட்டது.
அவ்வாண்டு ஹஜ்ரத் அவர்கள் விடை பெற்றுச் சென்றதும், இஸ்லாத்தைப் பற்றியும், ஆசிரியப் பெருந்தகை பற்றியும் என்னுள் இருந்த உறுதிப்பாடு, மிக ஆழமாய் வேரூன்றத் தொடங்கியது. தவஜ்ஜுஹ் எனப்படும் உள்ளார்ந்த அருள் நோக்குகள், இஸ்லாத்தின் சாராம்சத்தை எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. நான் செய்து வரும் பயிற்சிகள் எந்த மார்க்கத்துடன் வேர் பிடித்துள்ளதோ, அந்த மார்க்கத்தைத் தழுவாத வரையில், நான் விரும்பும் தூரத்துக்கு இப்பாதையில் பயணிக்க இயலாது என்பதைத் தெரிந்து கொண்டேன். இஸ்லாம், என் வாழ்வில் நீண்ட காலமாக ஒன்றிப்போன பழக்க வழக்கங்களைக் களையவும், நஃப்ஸ் எனும் சுயத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்த என்னை முழுவதுமாக விடுவிக்க உதவும் சாதனமாகத் திகழ்ந்தது. உள்ளத்திரைகள் ஒவ்வொன்றாக நீக்கப்படும் அனுபவம், நம்பவே முடியாத உணர்வுகளாகும். ஒரு உண்மை முஸ்லிமின் அர்த்ததைக் கண்டறியும் படலம், வெறும் குருட்டு நம்பிக்கை அளவில் இல்லாமல், இறைவனின் பிரசன்னத்தை எல்லா இடத்திலும் பார்க்கக்கூடிய அற்புத அனுபவமாகக் காணப்பட்டது.
எனக்குள் மறு எழுச்சி பிறந்தது. ஒருவகையான எல்லையற்ற உணர்வுகளால் இணைக்கப்பட்டு விட்டேன். அது துன்யாவுக்கு அப்பால் என் வாழ்வின் உறுதிப்பாட்டை வளரச் செய்யத் தொடங்கியது. ஆயினும் பயிற்சிகள், என்னை உலகத்தொடர்பிலிருந்து துண்டித்து விடுவதை விடுத்து, அனுபவங்களை என்னுள் மும்முரமாக்கி, உலகியல் தொடர்புகளை பெருமதிப்பு மிக்கதாகவும், என் செயல்களை உணர்வுபூர்வமானதாகவும் ஆக்கி விட்டன. அதிகப் பிரசங்கித்தனமான பகுப்பாய்வு சிந்தனையிலிருந்தும், ஆதிக்க உணர்வு நிலைகளிலிருந்தும் எனக்கு நிவாரணம் கிடைக்கத் தொடங்கின.
ஹஜ்ரத் அவர்கள், மார்க்கத்தின் அழகையும், மின்னும் தெய்வீக ஒளியின் அழகைத் தரிசிக்கும் பாக்கியத்தையும் எனக்குத் திறந்து காட்டினார்கள். இவையெல்லாம் இறை நெருக்கம் பெற்றோர்கள் மூலமே சாத்தியமாகும். மிக நுட்பமான போதனைகள் மூலம் ஹஜ்ரத் அவர்கள், அல்லாஹ்வுடன் எந்த அளவு வலுவான நம்பிக்கை கொள்ள வேண்டுமென்பதைப் புரிய வைத்து விட்டார்கள். மேலும், பிரிந்து கிடந்த என் நம்பிக்கைகளை மாற்றி , இறை ஒருமைப்பாட்டின் மீது ஒருமுகப்படுத்தி விட்டார்கள். இறை நம்பிக்கையும், இந்த நேரான பாதையின் மீது கொண்டிருக்கும் நிலைத்தன்மையும் வழங்கி அருள் புரிந்த இறைவனுக்கே என் நன்றிகள் யாவும் உரித்தாகட்டும். மேலும், எந்த இறைவனை முழு மனதுடன் தேடிக்கொண்டிருந்தேனோ, இன்ஷா அல்லாஹ், அவனை அடையும் பாதையை சாத்தியமாக்கித் தந்த இத்தகைய அருள் நிறைந்த வழிகாட்டும் ஆசிரியப் பெருந்தகையை அடையப் பெற்றதற்கும் நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.