“இந்திராஜுன் நிஹாயத் ஃபில் பிதாயத்” பொருள்-“எங்கே மற்றவர்களுடைய முடிவு உள்ளதோ, அங்கேதான் நம் தொடக்கம் உள்ளது” என்பது நக்ஷ்பந்தி முஜத்திதி தொடரின் தனித்துவமிக்க வரிசைமுறையைக் கொண்ட ஆன்மீகப் பயிற்சிகளை விவரித்துச் சொல்லப் பயன்படுத்தப்படுகிறது. இறைநெருக்கம் பெறுவதில், மனிதர்கள் எதிர்கொள்ளும் தடைகளை வெல்வதற்கு உதவியாக வடிவமைக்கப்பட்ட, சிறப்பான இப்பயிற்சி உத்தியை 14 ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்த பெருமை ஷேக் பஹாவுத்தீன் நக்ஷ்பந்த் அவர்களையே சாரும்.
மனிதர்கள் இரண்டு காரணங்களுக்காக படைத்தவனை மறந்து விடுகிறார்கள். முதலாவது, வெளிப்புற உலகத்தின்பால் மனிதர்கள் விரைவில் ஈர்க்கப்படுகிறார்கள். மற்றொன்று மனிதனுக்குள்ளே காணப்படும் “தான்” என்ற தன்மையுடைய சுயம் சம்பந்தப்பட்டது. இறைவனது நெருக்கம் (மஃயியத்) எனும் உன்னத நிலையை எய்தப் பெறுவதற்கு மனிதன் இரு அடிமைத் தளத்திலிருந்து வெளியாகியே தீரவேண்டும். ஒன்று, புற உலகின் அடிமைத்தனம் மற்றொன்று ‘நான்’ என்ற தன்மையின் அடிமைத்தனம். பெரும்பாலான சூஃபி ஆசான்களெனும் ஷேகுமார்கள், தேட்டவான் எனும் இப்பாதையில் பயணிக்கும் ஆர்வலரை, புற உலக அடிமைத்தனத்திலிருந்து விடுதலைபெற வைக்கும் முயற்சிகளிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.
படைப்புலகின் உணர்வு நுட்ப மையங்களான சுயம், மற்றும் மனித உடலின் தொகுப்புகளாகத் திகழும் ஏனைய நான்கு மூலப் பொருட்களான, நீர், நிலம், நெருப்பு மற்றும் காற்று ஆகியவைகளைப் பரிசுத்தப்படுத்துவதில் அவர்கள் அதிக முன்னுரிமை வழங்குகின்றனர். இந்த வகையில், இவ்வான்மீகப் பயணம் கடுமையான பயிற்சிகளினாலும், நீண்ட கால அவகாசத்தாலும் நிறைவேற்றப்படுகிறது. ஒரு வேளை யாரேனும் ஒருவர் இப்பாதையைப் பின்பற்ற முற்பட்டு, அதன் நீண்டகாலப் பயணத்தில் எங்கேனும் ஒரு தவறு ஏற்படின், அந்த ஆர்வலரால் இலக்கை அடைந்துகொள்வது இயலாத ஒன்றாகிவிடும்.
ஆன்மீக மாமேதை ஹஜ்ரத் ஹாஜா பஹாவுத்தீன் நக்ஷ்பந்த்(ரஹ்) அவர்கள், இப்பயணத்தில் தேட்டவான் ஒருவர் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க இடர்களை அறிந்திருந்தார்கள். நபித்துவ காலத்திற்கும் தற்காலத்திற்குமிடையேயான இடைவெளியின் அதிகரிப்பால், இப்பாதையில் பயணிக்கும் தேட்டவான்களின் திறமையும், தகுதியும் மென்மேலும் மோசமடைந்திருப்பதை அன்னார் உணர்ந்திருந்தார்கள். தேட்டவான்களிடத்தில், அக்கால மக்களிடம் காணப்பட்ட அதே அர்ப்பணிப்பு, அதே ஆர்வம் மற்றும் அதே தைரியம் ஆகியன இல்லாமலிருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, ஹஜ்ரத் பஹாவுத்தீன் நக்ஷ்பந்த் (ரஹ்) அவர்கள், ஒரு சுருக்கமான மற்றும் எளியதோர் பயிற்சி உத்தியை, இறைவன் உதவியால் கண்டுபிடித்தார்கள். அப்பயிற்சி முறை அக்காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த பயிற்சி முறைகளுக்கு நேர் எதிர்மாறாக அமைந்திருந்தது.
அன்னார் முதன்முதலாக இதயத்தைப் பரிசுத்தப்படுத்துவதில் கவனம் செலுத்திவிட்டு, அதன் பிறகு ஏனைய நான்கு இறை ஆணை உலகின் உணர்வு நுட்ப மையங்களைச் செயல்படுத்த முனைந்தார்கள். இவைகளுக்குப் பிறகே படைப்புலகின் உணர்வு நுட்ப மையங்கள் மீது கவனம் செலுத்தினார்கள். இந்த அடிப்படைதான், “எங்கே மற்றவர்களின் முடிவு உள்ளதோ, அங்கேதான் நமது தொடக்கம் இருக்கிறது” என்றழைக்கக் காரணமாக இருக்கிறது. முன்னர் விவரிக்கப்பட்ட இம்முறையின் மூலம், தேட்டவானுக்கு, இப்பாதையின் இறுதி எல்லையின் சுவையின் ஒரு சிறுபகுதி ஆரம்பத்திலேயே வழங்கப்பட்டு விடுகிறது. ஆனாலும், அதன் முழு எதார்த்தத்தை, பயணத்தின் இறுதியில்தான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். ஹஜ்ரத் பஹாவுத்தீன் நக்ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், “இந்தப் பயிற்சிமுறை மிகச் சீக்கிரம் பலனளிக்க வல்லது, மற்றும் இம்முறையில் மிகப்பெரும் கஷ்டங்களும், நிர்ப்பந்தங்களும் அறவே கிடையாது. அதே நேரத்தில் தேட்டவான்கள் இப்பாதையைப் பற்றி ஓரளவு சுருக்கமாக ஆனால் போதுமான அளவில் மதிப்பீடு செய்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறார்கள்”. இந்த வகையில் இப்பாதையைப் பற்றிய மேலதிக விவரங்கள் பின்னால் விவரிக்கப்பட இருக்கிறது, மேலும், எவ்வளவு விரைவில் இறுதி எல்லயைச் சென்றடைய முடியுமோ, அதற்கான ஒவ்வொரு முயற்சியும் முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
ஹஜ்ரத் ஷேக் அஹ்மது ஃபாரூகி ஸர்ஹிந்தி (ரஹ்) அவரகள் வழிகாட்டும் வான்வெளியின் சூரியனாக வந்துதித்தார்கள். பெரும்பான்மையான மக்களுக்கு மிகப்பெரும் பலனளிக்கும் விதம், இப்பாதையை உயர்தலத்தை அடையும் ஒன்றாக வடிவமைத்தார்கள். உன்னதமான இப்பாதையை உயர் சிகரத்துக்குக் கொண்டு சென்றதன் மூலம், அன்னார் இவ்வுலகையே ஒளிமயமாக்கிவிட்டார்கள். அன்னார் இறைஆணை உலகத்தைப் பற்றி விரிவாக விவரித்ததோடு அதன் போதனைகளைச் செம்மை படுத்திவிட்டார்கள். ஹஜ்ரத் ஷேக் அஹ்மத் ஃபாரூகி ஸர்ஹிந்த் (ரஹ்)கூறினார்கள், “தேட்டவான்கள் இறைவனின் திருப்பெயர்கள் மற்றும் குணப்பண்புகளின் விளக்கங்களில் விரிவான ஈடுபாடு காட்டுவார்களாயின், இறைவனைச் சென்றடையும் பாதைக்கு அதுவே ஒரு தடையாகி விடுகிறது. ஏனெனில், இறைவனின் திருப்பெயர்களுக்கும் அவனது குணப்பண்புகளுக்கும் ஒரு முடிவென்பதே கிடையாது. இந்த வகையில் பயிற்சி செய்வதன் மூலம், விரிவான பயணத்தை நிறைவு செய்த தேட்டவான்களால் மட்டுமே இறுதி இலக்கை அடையமுடியும்”.
“மனித இனத்தை அன்பான முறையில் நடத்த வேண்டும், மேலும் விஷயங்களை அவர்களுக்குக் கடினப்படுத்தி விடாமல், எளிதாக்க வேண்டும்” என்ற அண்ணலெம் பெருமானாரின் அருள்வாக்கிற்கிணங்க, ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், எண்ணற்ற குறிப்பிடத்தக்க மாற்றங்களை, முஜத்திதி பயிற்சிகளில் ஏற்படுத்தினார்கள். ஹஜ்ரத் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், அக்கால கட்டத்தின் ஆன்மீக அச்சாணியாகவும், மார்க்கத்தை புணர் நிர்மாணம் செய்து புதுப்பித்த முஜத்திதியாகவும் திகழ்ந்ததால், “எங்கே மற்றவர்களின் முடிவு இருக்கிறதோ, அங்கேதான் நமது தொடக்கம் இருக்கிறது” எனும் கோட்பாட்டை மீதமுள்ள சூஃபித்தொடர்களிலும், அந்தந்த சூஃபித்தொடரின் நிறுவனர்களின் அனுமதியோடு அறிமுகப்படுத்தி விட்டார்கள். பிற சூஃபித்தொடரின் ஆசான்களில் சிலர், இந்தக்கொள்கையை தங்களின் போதனைகளில் அறிமுகப்படுத்த விரும்பினர். ஆனால் அதற்கான தகுதிகள் அவர்களிடம் இல்லையென்பதால், அம்மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. மார்க்கத்தை புதுப்பிப்பவரிடத்தில் காணப்படும் அற்புதங்களும், அதி உன்னத ஆன்மீகத் தகுதியும், சிறப்புப் பண்புகளும் இறைவனின் உதவியின் மூலம் புதிய பாதைகள் திறப்பதற்கு வழிவகுத்தது. சூஃபி போதனைகளிலும், பயிற்சிகளிலும் இது வரலாற்றுச் சிறப்புமிக்க மறுமலர்ச்சியை உண்டாக்கி விட்டது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.