நபிகளாருக்கு முதன் முறையாக வேதவெளிப்பாட்டை வழங்க வந்த நேரத்தில், வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூன்று முறை ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்த நிகழ்ச்சியை, பெரும்பாலான அறிஞர்கள், ‘தவஜ்ஜுஹ்’ எனப்படும் உள்ளார்ந்த அருள் நோக்கின் (Spiritual Transmission) ஒரு வடிவம் எனக் கருதுகின்றனர். இந்நிகழ்வின் மூலம், இறைவனின் புறத்திலிருந்து ஜிப்ரீல்(அலை) அவர்களால் கொண்டுவரப்பட்ட அறிவுஞானத்தின் தொடக்கமே தவஜ்ஜுஹ்தான் எனும் முடிவுக்கு நம்மால் வரமுடிகிறது. நபி(ஸல்) அவர்கள் ‘ஹிரா குகை’யில் இருந்தபோது வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் வந்து ஓதச் சொன்னார்கள். அதற்கு நபியவர்கள் ‘நான் படித்திருக்கவில்லையே’ என்றார்கள். ஜிப்ரீல் (அலை)அவர்கள் நபியவர்களை ஆரத்தழுவி, பின்னர் நபியவர்களை அழுத்தியவாறு “ஓதுவீராக” என்றார்கள். அதற்கு நபியவர்கள்,”என்னால் இயலாது” என்று பதிலளித்தார்கள். மீண்டும் மூன்றாம் முறையாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களை நெஞ்சோடு நெஞ்சாக வாரியணைத்து “ஓதுவீராக” என்றார்கள். பிறகுதான், பெருமானார் நபி (ஸல்) அவர்கள் இறைச்செய்தியை ஓதத் தொடங்கினார்கள். “(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. மனிதனை அவன் இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் கண்ணியமிக்கவன். அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்”. குர் ஆன் (96:1-5)
ஓர் ஹதீஸின்படி, ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களுடைய கரத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள்,”அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என் உயிரைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களை விடவும் எனக்குப் பிரியமுள்ளவர்களாக உள்ளீர்கள்” எனக் கூறினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள்,”அப்படியில்லை உமரே! யாருடைய கைவசம் என் உயிர் இருக்கிறதோ, அவன் மீது ஆணையாக,உமது உயிரை விட நானே உமக்கு அதிகப் பிரியமுள்ளவனாக ஆகாத வரையில் உமது இறைநம்பிக்கை பரிபூரணமாகாது” என மறுமொழி பகன்றார்கள். சற்று நேரத்திற்குப் பிறகு, ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள்,” ஆயினும்,இப்போது அல்லாஹ்வின் மீது ஆணையாக, தாங்கள் என் உயிரை விட அதிகப் பிரியமுள்ளவராக ஆகிவிட்டீர்கள்” என்றார்கள். உடனே நபி (ஸல்) அவரகள், “இப்போதுதான் உமரே” (நீர் பரிபூரணமான இறைநம்பிக்கையாளர்) என மொழிந்தார்கள். சந்தேகமின்றி இது தவஜ்ஜுஹின் செயல்வடிவமே.
பின்வரும் நிகழ்வை ஹஸ்ரத் உபை இப்னு கஅப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “ஒரு முறை நான் பள்ளிவாசலில் இருந்தபோது ஒருவர் வந்து தொழ ஆரம்பித்தார். தொழுகையில் அவர் புனிதக்குர்ஆனை ஓதிய விதம் எனக்குத் தவறாகத் தோன்றியது. பின்னர், மற்றொருவர் வந்தார், வந்தவர் புனிதக்குர்ஆனை வேறுவிதமாக ஓதினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, இவர்கள் குர்ஆன் ஓதிய விதத்தைப் பற்றிச் சொன்னேன். அண்ணலார் அவர்களிருவரையும் அழைத்து புனிதக்குர்ஆனை ஓதச் சொல்லிக் கேட்டார்கள். பின்னர் அண்ணலார் அவர்கள், ‘அவர்களிருவரும் ஓதியவிதம்’ சரியானதே எனத் தெரிவித்தார்கள். என் உள்ளம், தீய சந்தேகத்தால் நிரம்பியது. அது முந்தைய ஜாஹிலியா எனப்படும் அறியாமைக் காலத்தை விட மிகவும் வலுவான நிலையில் என் உள்ளத்தை ஆட்கொண்டது. நபி(ஸல்) என்னுடைய அந்நிலையைக் கண்ணுற்று, தங்கள் கரத்தால் என் நெஞ்சின் மீது தட்டினார்கள். எனக்கு கட்டுக்கடங்காமல் வியர்த்துக்கொட்ட ஆரம்பித்தது, மேலும் அச்சமும் திகைப்பும் கொண்ட என் நிலை எப்படி ஆகிவிட்டதெனில், ‘நான் இறைவனைப் பார்த்துக்கொண்டிருப்பதாகவே உணர்ந்தேன்’.
இந்த உதாரணங்கள் தவிர இன்னும் நிறைய சம்பவங்களை தவஜ்ஜுஹின் விளைவுகளுக்குச் சான்று பகரலாம். ஆயினும், உண்மை என்னவெனில், ‘உள்ளார்ந்த அருள் நோக்கு’ மற்றும் ‘அகமிய பந்தம்’ இவைகளெல்லாம் அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் உண்மையான மூல ஆதாரங்கள் இல்லை: நபியவர்களைப் பார்த்து இறைவன் சொல்லுகிறான், ” (நபியே!) நீர் விரும்பியவர்களை நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ், தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் (குர் ஆன் 28:56) இறைவனது அருளின்றி இறுதி இலக்கைச் சென்றடைய முடியாது, ஆனால் சீரிய வழிகாட்டுதலும், பெருமானாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதலும், மேலும் சொல், செயல்,சகவாசம் மற்றும் இறைநேசர்கள்,ஆன்மீக ஆசான்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் ஆன்மீகக் கவனிப்பும் இருக்குமேயானால், அது ஒன்றும் முடியாததல்ல.