பொதுவாக, மனித உடலுக்குள், மனம் அல்லது மூளை எனப்படும் ஒரே ஒரு ‘உணர்வூட்டும் நுட்ப மையம்’ இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், மூத்த சூஃபிகள், தங்களின் அனுபவங்கள் மூலம் மேலும் ‘பல உணர்வு மையங்கள்’ அல்லது ‘அகமியப்புலன்கள்’ இருப்பதைக் கண்டறிந்தனர். அவற்றை ‘லதாயிஃப்’ (ஒருமையில் லதீஃபா) என்று குறிப்பிட்டனர். மேலும் அவர்கள் தங்களின் ஆழ்ந்த உள்ளுணர்வின் அடிப்படையில், அப்படிப்பட்ட “பத்து உணர்வு நுட்பமையங்கள்” இருப்பதாக முடிவுக்கு வந்தனர்.
லதாயிஃப்களின் மூலத்தோற்றமானது முழு பிரபஞ்சத்தின் மூலத் தோற்றத்தையும் பிரதிபலிக்கிறது. இந்திய ஆன்மீக மாமேதையும், முஜத்திதி ஆன்மீகப் பாரம்பரியத்தின் காரணகர்த்தாவுமான ஷேக் அஹ்மது ஃபாரூகி ஸர்ஹிந்தி (ரஹ்) அவர்களின் கூற்றுப்படி, இறைவன் இப் பிரபஞ்சத்தை இரண்டு நிலைகளில் படைத்துள்ளான். முதலாவதாக, இறைவன் “ஆகுக” என்று கூறிய மாத்திரத்தில் உருவானதுதான் ‘ஆலமே அம்ர்’ எனும் ‘இறை ஆணை உலகம்’(The World Of God’s Command). பின்னர், பல்லாண்டு நீடித்த பரிணாம வளர்ச்சியின் மூலம் இறைவனால் உருவாக்கப்பட்டதுதான் ‘ஆலமே ஹல்க்’ எனும் ‘படைப்புகளின் உலகம்’ (The World Of Creation). ஆலமே ஹல்க்கின் உருவாக்கத்துக்குப் பின்னர், இறைவன் மனிதனைப் படைத்தான். அப்புதிய படைப்பினத்துக்கு, ‘அகமியப்புலன்கள்’ அல்லது ‘ஒளிப்புள்ளிகள்’ எனும் சிறப்பம்சத்தை இணைத்து அருள் புரிந்தான். அதுதான் லதாயிஃப்களாகும். சுயம் (Self), காற்று (Air), நீர் (Water), நிலம் (Earth) மற்றும் நெருப்பு (Fire) ஆகிய ஐந்தும் படைப்புலகத்தின் பகுதிகளாகும். மற்ற ஐந்தான கல்ப் (Heart), ரூஹ் (Spirit), சிர்ர் (Secret), கஃபி (Hidden), மற்றும் அக்ஃபா (Most Hidden) – இவைகள் யாவும் ஆணை அல்லது கட்டளை உலகின் பகுதிகளாகும்.
லதாயிஃப்கள் யாவும் ஆரம்பத்தில் ஒளிச்சுடர் வீசி மின்னிக் கொண்டிருந்தன. இறைவன் அவற்றை மனித உடலுக்குள் இணைத்த மாத்திரத்தில், பௌதீக உலகத்தின் தாக்கத்தின் காரணமாகவும், ஜடப்பொருட்களோடு இணைந்து கொள்ளும் மனிதர்களின் தனித்துவப் போக்கின் காரணமாகவும், அவற்றின் ‘பிரகாசம்’ மங்கத்துவங்கியது. அவ்வாறு மங்கிப்போன இயற்கையான நமது உள்ளொளியைப்பற்றி குர்ஆனில் இவ்வாறு பிரதிபலிக்கப்பட்டுள்ளது. “திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.” (95:4-6)
லதாயிஃப்களை முன்னோக்கிச் செய்யப்படும் பயிற்சிகளின் மூலம், ஒரு சூஃபி ஆர்வலர், அவற்றை ‘இறைவனது பிரசன்னம்’ பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வுக்குக் காரணமாக பயன்படுத்தும் திறனைப் பெற்றுக்கொள்கிறார். எவ்வளவு அதிகம் ஒரு சூஃபி ஆர்வலர் இத்திறனை மேம்படுத்திக் கொள்வாரோ, அவ்வளவு குறைவாகவே அறிவொளியும் மறைந்திருக்கும்.
நினைவாற்றலின் புலன்களைப் போலவே, லதாயிஃப்களும் நம்மால் உணர்ந்து, அனுபவம் பெறத்தக்க புலன்களாகும். ஆனால், அவற்றைப் பற்றி விளக்குவது சிரமமாகும். நினைவாற்றலை எவ்வாறு வரையறுத்துக் கூறுவது? அது மூளைக்குள் குடி கொண்டுள்ளது என்பதாக நீங்கள் சொல்லலாம். அதன் உடற்கூறின் செயலாக்கங்களைக் கூட விவரிக்கலாம். ஆனால், இந்த விளக்கங்கள் யாவும் அதன் அத்தனை பரிமாணங்களையும் விவரித்ததாகாது. சில சமயங்களில், காயப்படுவதன் மூலம் ஒருவர் தன்னுடைய நினைவாற்றலை இழக்க நேரலாம். அவ்வாறான தருணங்களில், அதன் முக்கியத்துவம் பற்றி அதிகமதிகம் விழிப்புணர்வு வெகுவாகவே அவருக்கு இருந்தும் கூட, அதனை விளக்கிச் சொல்வதற்கு இயலாத ஒரு நிலை ஏற்படுகிறது. இதுபோலவே, லதாயிஃப்களையும் போதுமான வார்த்தைகளில் வரையறுக்க இயலாது. ஆனால் அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் பட்சத்தில், அவற்றைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.
வெவ்வேறு சூஃபித்தொடர்கள், உடலின் பல்வேறு பகுதிகளிலும் லதாயிஃப்களை, தொடர்புப்படுத்துகின்றன. இறை ஆணை உலகத்தின் ஐந்து லதாயிஃப்களின் இருப்பிடத்தை, நக்ஷ்பந்தி முஜத்திதி தொடர், நெஞ்சைச் சுற்றி அமைத்துள்ளது. இதயம் அல்லது ‘கல்ப்’ என்பது இடது மார்புக்கு இரண்டு அங்குலம் கீழிறக்கத்தில் இருக்கிறது. ஆன்மா அல்லது ‘ரூஹ்’ என்பது அதற்கு நேரெதிரான இடத்தில், அதாவது வலது மார்புக்கு இரண்டு அங்குலம் கீழிறக்கத்தில் இருக்கிறது. ரகசியம் அல்லது ‘சிர்ர்’ எனப்படும் உணர்வு நுட்ப மையம் இதயம் இருக்கும் அதே பக்கத்தில் ஆனால் மார்புக்கு சற்று மேலாக அமைந்திருக்கிறது. அதைப்போல, மறைவு அல்லது ‘கஃபி’ எனப்படும் மையம் வலது மார்புக்கு மேலாக இருக்கிறது. மிகுந்த மறைவு அல்லது ‘அக்ஃபா’ எனப்படும் மையம், இதயத்துக்கும், ஆன்மாவுக்குமிடையில் நெஞ்சுக்கு நடுவே அமைந்திருக்கிறது.
ஆன்மீகப் பாதையில் பயணிக்க விழையும் ஒரு சூஃபி ஆர்வலருக்கு, நக்ஷ்பந்தி முஜத்திதி தொடரின் ஆசிரியர், லதாயிஃப்கள் ஒவ்வொன்றாக ஒளிமயமாவதற்கு வழிகாட்டுகிறார். ‘முராகபா’ எனும் தியானப்பயிற்சியின் மூலம், இவைகள் ஆரம்பக்கட்டமாக நிறைவேற்றப்படுகிறது. அமர்ந்திருக்கும் நிலையில், ‘நிய்யத்’ எனும் எண்ணம் கொண்டு,ஒரு குறிப்பிட்ட உணர்வுநுட்ப மையத்தின் பக்கமாக கவனம் செலுத்தப்படுகிறது. முதன்முதலாக இதயத்தின் பக்கம் முன்னோக்கிவிட்டு, பிறகு வரிசையாக இறை ஆணை உலகின் லதாயிஃப்களான, ஆன்மா,ரகசியம்,மறைவு மற்றும் மிகுந்த மறைவு ஆகியவற்றின் பக்கமாக முன்னோக்கப்படுகிறது. இவையெல்லாம் எப்போது ஒளிரத்தொடங்குகிறதோ, அதன்பிறகு, மாணவர் படைப்புலகம் சம்பந்தப்பட்ட லதாயிஃப்களின் பக்கம் கவனம் செலுத்தத் தலைப்படுகிறார்.
இறை ஆணை உலகத்தோடு தொடர்புடைய உணர்வு நுட்ப மையங்களுள், சுயம் எனப்படும் ‘நஃப்ஸ்’ மட்டுமே உடலின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இருப்பதாகக் கருதப்படுகிறது. நெற்றியின் நடுப்பகுதியே அதன் இருப்பிடமாகும். ‘ஆலமே’ ஹல்க் எனப்படும் இறை ஆணை உலகத்தின் லதாயிஃப்களில் முதன்முதலாக இதனையே மாணவர் ஒருவர் பிரகாசிக்கச் செய்கிறார். ஏனெனில், இதுதான் ஏனைய லதாயிஃப்களின் ஒட்டுமொத்தமாகக் கருதப்படுகிறது. இந்த நஃப்ஸின் மீது கவனம் செலுத்தி, அதனைப் பரிசுத்தமாக்கியதன் பிறகு, மனித உடலைச் சூழ்ந்துள்ள ஏனைய நான்கு லதாயிஃப்களான, காற்று, நீர், நிலம் மற்றும் நெருப்பு ஆகியவற்றின் பக்கம் கவனம் செலுத்துமாறு வழிகாட்டப்படுகிறார். இவை யாவும் ஒளிமயமானதன் பின்னர் உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒளிமயமாகி, அவைகள் இறைவனை நினைவுகூரத் தொடங்குகின்றன.