School of Sufi Teaching

இறைவனை நினைவுகூர்தல் (திக்ர்)

சூஃபி ஆசான்கள் திக்ரெனும் இறைவனை நினைவு கூர்தலை வலியுறுத்துவதின் நோக்கம், அது ஆர்வலரின் கவனத்தை இறைவனின் பக்கமாக முன்னோக்கச் செய்து, அவனைப்பற்றிய நம்பிக்கை, அறிவு மற்றும் விசுவாசத்திற்கு அடிப்படை வித்திடுகிறது என்பதாலாகும். ‘இறைவனது முன்னிலை’ பற்றிய தொடர்ச்சியான விழிப்புணர்வு உண்டாகும் விதம், அவனை எவ்வளவு அடிக்கடி நினைவு கூறமுடியுமோ அவ்வளவு நினைவு கூறவேண்டுமென்பது இறைவனின் அடிப்படையான கட்டளைகளில் ஒன்றாகும். இறைவன் இறைத்தூதர் மூஸா அவர்களுக்கு இவ்வாறு கட்டளை பிறப்பித்தான், “நிச்சயமாக நான் தான் இறைவன்! என்னைத் தவிர வேறு தெய்வம் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக”. குர்ஆன் (20:14). திக்ரின் வடிவமானது இடம், காலம் ஆகியவற்றுடன் வேறுபட்டாலும், திக்ரு செய்யவேண்டுமென்ற இறை கட்டளையானது எல்லா தலைமுறையினருக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.

பெருமானார் நபிகள் நாயகத்தின் ஸஹாபாக்களெனும் தோழர்கள் (ரலி) சம்பிராதாய உத்திகளைக் கொண்டு திக்ரு செய்யவில்லை, காரணம் நபிகளாரின் ஒரே ஒரு அருள்நோக்கே, ஒருவரின் விழிப்புணர்வு நிலையை உயர்த்துவதற்குப் போதுமானாதாக இருந்தது. நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பின்னர், இஸ்லாமிய போதனைகள் யாவும் தொகுக்கப்பட்ட தருணத்தில், நபித்தோழர்கள் அடைந்தது போன்ற ‘இறைநினைவு’ நிலையை அடைய விரும்பிய தனி நபர்களுக்கு, ‘திக்ர்’ என்பது ஒரு அவசிய வழிமுறையாகக் காணப்பட்டது. எனவே, அவர்கள் சூஃபித்துவத்தின் அடிப்படைப் பயிற்சியாக திக்ரை நிர்ணயித்ததோடு, அதனைத் திறம்படச் செயல்புரியும் வழிவகைகளையும் அடையாளமிட்டு வழங்கியிருக்கிறார்கள்.

திக்ரை சப்தமாகவோ (ஜல்லி) ,நிசப்தமாகவோ (கஃபி) ஓதலாம். சில சூஃபித்தொடர்கள் முந்தையதை வலியுறுத்தும் அதே வேளையில், ஒரு சில சூஃபித்தொடர்கள் பிந்தையதை முக்கியத்துவப்படுத்துகின்றன. இவ்விரு வகை திக்ருகளும் ஓரே மாதிரியான நன்மைகளையே வழங்குகின்றன. செய்முறை நுட்பத்தால் மட்டுமே அவைகள் வேறுபடுகின்றன. மேற்கூறப்பட்ட திக்ரின் இரு வடிவங்களையும் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் நியாயப்படுத்துகிறது. சில சூஃபித்தொடரகள் நின்ற நிலையிலும், சில தொடர்கள் குறிப்பிட்ட இருப்பு நிலையிலும், மற்றும் சில தொடர்கள் அசையும் நிலையிலும் திக்ருகளைப் போதிக்கின்றன. திக்ரை முனைப்புடன் செய்யும் பொருட்டு, ஷைகுமார்கள் எனும் ஆசான்கள் இவ்வகை வித்தியாசங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆர்வலர்களுக்கு அசலான இறைநினைவு உண்டாக வழிகாட்டுவதே ஷைகின் பங்காகும். அதன்மூலம், உடல், மனம், உணர்வு ஆகியன யாவும் ஒன்றிணைந்த, வாழ்வின் அனைத்து அம்சங்களிலும், வெளிரங்கத்திலும் அந்தரங்கத்திலும், மேலும் தொடர்ச்சியாகவும், தன்னிச்சையாகவும் இறைதரிசன விழிப்புணர்வுள்ளவர்களாக அவர்கள் உருவாகிறார்கள்.

இறைவனை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், அவ்வப்போது வெளிப்பகட்டாக நினைவு கூர்வதைக் காட்டிலும், அன்றாட வாழ்வியலில் எப்போதும் நினைவு கூர்வதுதான் மிக அதிக மதிப்புள்ளதாகும். திக்ரு என்பது ஒரு விழாவோ, சடங்கோ அல்ல. அது வாழ்வின் இன்றியமையா இலக்காகும். எந்த நபர் இறைவனை நினைவு கூறுகிறாரோ, அவர் மகிழ்ச்சியைக் கண்டு கொள்கிறார். எவர் அவனை மறந்து விடுகிறாரோ, அவர் பாழ்பட்டுப் போய்விடுகிறார். மறதி என்பது எப்படிப்பட்ட கடினத்தன்மையான சக்தியெனில், அது மரத்தையே கல்லாக மாற்றிவிடும். மாறாக, திக்ரின் மூலம் ஆர்வலர், இறையருளையும், வானவர்களின் கருணையையும், உளப் பரிசுத்தத்தையும் மற்றும் உயிருக்கு அலங்காரத்தையும் பெற்றுச் சிறப்புறுகிறார். “ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூருங்கள்; நானும் உங்களை நினைவு கூருவேன்”. (குர்ஆன் 2:152) என்ற இறை வாக்கிற்கொப்ப, அவனை நினைவு கூர்வதில் திளைத்திருக்கும் ஆர்வலர், அந்த சர்வ சக்தியாளனின் பக்கம் ஈர்க்கப்படுகிறார். எனவேதான் இப்பாதையில் முன்னேற்றம் காண்பதென்பது சுலபம் என்று சொல்லப்படுகிறது.

Total
0
Shares
முந்தையது

ஆழ்நிலை தியானம் (முராகபா)

அடுத்தது

இப்பாதையின் மீதான மெய்யறிவு

தொடர்புடைய இடுகைகள்
மேலும் வாசிக்க

இப்பாதையின் மீதான மெய்யறிவு

இவ்வான்மீகப் பாதையில் பயணித்தவர்களால் கண்டறியப்பட்ட ஆய்வுகள் யாவும் கொள்கைக் கோட்பாடுகளாக இல்லாமல், முற்றிலும் செயல்வடிவமாகவும், தனிப்பட்ட அனுபவமாகவும் இருப்பதால், இப்புரிதல்களை, வார்த்தைகளால் விளக்கிக் கூறுவது…
மேலும் வாசிக்க

ஆழ்நிலை தியானம் (முராகபா)

‘ஆழ்நிலை தியானம்’ அல்லது ‘முராகபா’ எனும் பயிற்சியே, அனைத்து ஆன்மீக நிலைகளும் பூரணத்துவமடைய வழிவகுக்குகிறது என்பது பல நூற்றாண்டு கால அனுபவங்கள் மூலம் தெரிய…
மேலும் வாசிக்க

அகமிய பந்தம் (நிஸ்பத்)

நிஸ்பத் எனும் அரபிச்சொல்லின் பொருள், இருவரிடையே உள்ள உறவு அல்லது இணைப்பு என்பதாகும். சூஃபிகளின் சொல்லகராதியில் அது இறைவனுக்கும், மனிதர்களுக்குமிடயே உள்ள பந்தத்தைக் குறிக்கிறது.…
மேலும் வாசிக்க

உள்ளார்ந்த அருள் நோக்கு (தவஜ்ஜுஹ்)

நபிகளாருக்கு முதன் முறையாக வேதவெளிப்பாட்டை வழங்க வந்த நேரத்தில், வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூன்று முறை ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்த நிகழ்ச்சியை, பெரும்பாலான…