இவ்வான்மீகப் பாதையில் பயணித்தவர்களால் கண்டறியப்பட்ட ஆய்வுகள் யாவும் கொள்கைக் கோட்பாடுகளாக இல்லாமல், முற்றிலும் செயல்வடிவமாகவும், தனிப்பட்ட அனுபவமாகவும் இருப்பதால், இப்புரிதல்களை, வார்த்தைகளால் விளக்கிக் கூறுவது கடினம்.
ஒரு ஆழ்நிலைப் பரிமாணம் பற்றிய விழிப்புணர்வே, மாணவர்களுக்கு மத்தியில் முதன்முதலாக அறியப்படுவதாகும். பொருள்சார் நிகழ்வுகளுக்கு அப்பால், அறிவாற்றலால் அணுகமுடியாத, இப்பிரபஞ்சத்தைப் பற்றிய கண்ணோட்டத்தின் ஒருவகையான சுவையை அவர்கள் பெறுகிறார்கள். ஒரு உண்மையான புதிய கூர்நோக்கு, அவர்களின் வாழ்விலும், சிந்தனைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்குகிறது.
மாணவர்கள் இதயத்தையும், ஏனைய உணர்வு நுட்ப மையங்களையும் விழிப்புணர்வு பெறச்செய்ததும், அவர்களின் சுயத்தைப் பற்றிய புரிந்துணர்வானது ஆழமாகிக் கொண்டே செல்கிறது. விவேகமான மனமானது விரிவடைந்து கொள்கிறது. வாழ்வின் அனைத்து அம்சங்களையும் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கத் தேவையான பிரகாசத்தையும் தேட்டவான்கள் தேடிக்கொள்கிறார்கள்.
விடாமுயற்சியுடன் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வரும் மாணவர்களால் பின்வரும் விஷயங்களை தனிப்பட்ட அனுபவமாகப் பெற்றுச் சிறப்புற முடியும்.
- வியப்புமிகு இவ்வுலகின் பொருட்களும், தனி நபரின் விழிப்புணர்வு நிலையும், ஒரு அரைகுறையான உண்மை மட்டுமே.
- மனிதனிடத்தில் அனுபவ சுயமின்றி மற்றொரு சுயமும் இருக்கிறது. அதுவே ‘நித்திய சுயம்’ (Eternal Self)
- காரண காரியங்களுக்கும், அறிவாற்றலுக்கும் அப்பால், கவனமாகப் பேணிவளர்க்கப்பட்ட ஒருவரின் உள்ரங்கத்தின் மூலம் ‘தெய்விக அனுபவம்’ பெறமுடியும்.
- அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டியின் உதவியோடு, பயிற்சியின் விதிமுறைகளை விசுவாசமாகப் பின்பற்றி ஒழுகும் ஒருவரால், தன்னுடையை ‘வரையறுக்கப்பட்ட சுயத்தையும்’ (Limited Self), ‘உண்மையான சுயத்தையும்’ (True Self) அடையாளம் காண இயலும்.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்கப்பால், ‘மெய்யறிதல்’ (Realization) என்பது ஒருவரிடமிருந்து பிரிக்கமுடியாத ஒன்றாக ஆகிவிடும். மனிதர்கள் வெறும் இயல்புணர்ச்சிகளின் அடிமைகள் அல்ல, மாறாக மிக உயர்மதிப்புப் பெற்றவர்களாகவும், தங்களின் செயல்பாடுகளைக் கட்டுக்குள்ளாக்கும் திறனுடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற தெளிவு மாணவர்களுக்குக் கிடைக்கிறது. எல்லாவற்றிலும் இறைவனின் பிரசன்னத்தைப் பார்க்கத் தொடங்கும் மாணவர்களால், மனித வாழ்வின் அர்த்தத்தை மிகச்சிறந்த முறையில் கிரகித்துக்கொள்ள முடிகிறது – அந்த அர்த்தம் தங்களின் தனிப்பட்ட வாழ்வையும் மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் விதியையும் புரிந்து கொள்ள வழிவகுக்கிறது. குறுகிய, தன்னலமிக்க பார்வையானது, பரந்த மனப்பான்மைக்கு வழிவிட்டு, மாணவர்களின் ஒவ்வொரு சிந்தனையிலும், வார்த்தையிலும், செயலிலும் ‘இபாதா’ எனும் வழிபாட்டு(Worship) வடிவத்தையும், ‘ஹித்மத்’ எனும் சேவை(Service) வடிவத்தையும் உண்டாக ஊக்குவிக்கிறது. அவர்கள் என்றென்றும் நலவையே விரும்பும் ஒரு நிலையை நெருங்கிவிடுகிறர்கள், அதன் மூலம் வெளிரங்க வற்புறுத்தல் மற்றும் தனிப்பட்ட ஆதாயமில்லாத எல்லா சூழல்களிலும், அவர்கள் நன்மையை மட்டுமே நாடுபவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
நிச்சயமாக, உறுதியாக இறைவனின் நாட்டப்படியே எல்லாம் நடக்கிறது என்பது, ஆர்வலர்களுக்கு அனுபவப்பூர்வமாக விளங்கிவிட்டதால், அவன் பக்கமே சார்ந்து இருக்கவும், அவனின் நாட்டத்தைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்கிறார்கள். பயிற்சிகளின் மூலம் மரணத்திற்குப் பிறகு ‘மற்றொரு வாழ்வு’ இருக்கிறது என்ற உறுதிப்பாடு உண்டாகிவிடுகிறது. “இவ்வுலக வாழ்வு மறுஉலக வாழ்வுக்கான ஒரு தயார் செய்யுமிடமே” எனும் புரிதல் ஏற்படுவதால், அது அவர்களை மென்மேலும் பேணுதல் மிக்க, பயபக்திமிகுந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஊக்கமளிக்கிறது.
சூஃபித்துவம் என்பது உள்ரங்கத்திலிருந்து வெளிரங்கத்தை முன்னோக்கிச் செல்லும் பயணமாகும். ஆர்வலர், தன்னைப்பற்றி அறிவதின் மூலம், இறைவனைப்பற்றி அறிந்து கொள்கிறார். இறைவனை அறிந்து கொள்வதன் மூலம் அவர் தன்னலமற்றவராகிறார். படிப்படியாக அவரின் முந்தைய அமைப்பு மாற்றம் பெற்று, இறைவனின் கருணையால், ‘ஃபனா’ மற்றும் ‘பகா’ எனும் படித்தரத்தை எய்தப் பெறுகிறார். அதாவது, ‘இறைவனில் ஐக்கியப்படுதல்’, ‘அவனிலே அழிந்து விடுதல்’ அல்லது ‘அவனோடு கலந்து விடுதல்’ என்பதாகும்.
‘இறைவனில் ஐக்கியமாதல்’ எனும் அனுபவம் மட்டுமே இவ்வான்மீகப் பாதையின் ‘இறுதி மெய்யுணர்வு’ அல்ல. யாரெல்லாம் அந்த உன்னத நிலையை அடைந்தார்களோ, அவர்கள் சக மனிதர்களுக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்காக மீண்டும் அவ்வுயர் நிலையிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்கள் ஒரே நேரத்தில் இறைவனுடனும், இவ்வுலகத்தோடும் தொடர்புடையவர்களாக இருந்து கொண்டு, படைப்பினங்களின் சேவையிலேயே ‘படைத்தவனின் அருகாமை’ உணர்வைப் பெற்றுத் திகழ்கிறார்கள். அன்றாடம் இறைவனின் புறத்திலிருந்து வழங்கப்படும் பணிகளையும் பொறுப்புகளையும் செவ்வனே நிறைவேற்றத் தங்களைத் தாங்களே தயார்படுத்திக்கொள்கிறார்கள்.
இவ்வுலகமென்பது இறைவனால் நிர்வகிக்கப்படும் ஒரு பட்டறை போலிருக்கிறது. அதில் அதிஉன்னத மெய்யுணர்வு பெற்ற சூஃபியானவர், முழுமூச்சுடன் தன்பங்குக்கு எவ்வளவு சிறப்புற பணியாற்ற இயலுமோ அந்த அளவில், முழுக்க முழுக்க இறைவனின் கருணையிலும், அருளிலும் ஆதரவு வைத்தவராகப் பணியாற்றும் ஒரு பணியாளராகச் செயல்படுகிறார்.