நான் இளம் குழந்தையாக இருந்த போதே எனக்கு இயற்கையின் மீது இனம் புரியாத காதல் இருந்து வந்தது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் பசுமையான மரங்களும், பரந்த வயல் வெளிகளும், விரிந்து கிடக்கும் கடலும், பளிச்சென்ற பாறைகளும் மற்றும் அன்னாந்து பார்த்து வியக்கும் ஆகாயமும்தான் என் காதல் சின்னங்கள். இயற்கைச் சூழலுக்குள் அலைந்து திரிவதிலும், ஆய்வு மேற்கொள்வதிலும் எனக்கு அலாதியான நேசம். பதின்ம வயதில், பெரிதளவுக்கு கறார் பேர்வழியாகவும், தீவிர அக்கறை மனப்பான்மையுடைய இளைஞனாகவும் இருந்து வந்தேன். நான் பயிலும் கல்விக்கூடம் கல்வித்தரத்தில் உயர்ந்து இருந்த போதிலும், கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடும், சர்வாதிகாரப் போக்கும் எனக்கு அறவே பிடிக்காமலிருந்தது. என்னில் வயதுக்கு மீறிய அறிவாற்றலும், அசாதாரண சுறுசுறுப்பும் இருந்து வந்ததால் நான் படு சுட்டியாகச் சுழன்று வந்தேன். பள்ளியில் சொற்போர் மன்றத்தை முன்னின்று நடத்தி வந்ததோடு மட்டுமின்றி, சமூக சேவையாற்றுவதிலும் ஈடுபாடு இருந்து வந்தது. மேலும் நான், CND என்றழைக்கப்படும் அணு ஆயுத ஒழிப்பு இயக்கத்தின் அபிமானியாகி, அடக்கு முறைக்கெதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினேன். சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, ஒரு கால கட்டத்தில் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டேன்.
அப்போது எனக்கு வயது 13 இருக்கும். என் சொந்த விருப்பில் என்னை நானே இங்கிலாந்து திருச்சபையில் இணைத்துக்கொண்டேன். ஏறக்குறைய 16 வயதினில், இருத்தலியல் பற்றிய கோட்பாடுகளின் தாக்கம் என்னைப் பற்றிக் கொண்டது. கிறிஸ்துவ இறையியல் தத்துவகர்த்தாக்களான சோரேன் கீர்கேகார்ட், பால் டில்லிச் மற்றும் டயட்ரிச் போன்றோர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். இக்கால கட்டத்தில் குர்ட்ஜீஃபின் போதனைகள் சிலவற்றையும் கற்றுணர்ந்ததோடு, ஜென் புத்தமதத்தின் மீதும் சற்று ஆர்வம் மேலோங்கத் தொடங்கியது. கிறிஸ்துவ தேவாலயத்துடனான முறையான இணைப்பு, ஒரு சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. ஆனாலும் 20 களிலும், 30 களிலும் என் பிரதான ஆர்வமும், நம்பிக்கையும் மார்க்ஸீய கொள்கையின் மீது இருந்த போதிலும், ஆன்மீக விவாதங்களில் தீவிர அக்கறையோடு இருந்து வந்தேன். என் பதின்ம வயதில், ஏசு கிறிஸ்துவின் கட்டளையான, “உன் அண்டை வீட்டாரையும், உன்னைப் போலவே நேசி”, என்ற சொற்றொடரில், ஒருவன் முதலில் தன்னைத்தானே நேசிக்கக் கடமைப்பட்டிருப்பதைப் பற்றி, நண்பர் ஒருவரிடம் விவாதம் செய்ததை நினைத்துப் பார்க்கிறேன். அப்போதைய பருவங்களில் என்னை நானே நேசிக்காதவனாகவே இருந்து வந்தேன் அன்றி அவ்வப்போது மனச்சோர்வு ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வந்தேன். “அன்பே கடவுள்” என வாதிடுவோர்களை தற்காத்து ஆதரித்துப் பேசிய தருணங்களும் நினைவில் நிற்கின்றன. ஏனெனில், அன்புதான் இப்பிரபஞ்சத்திலேயே பலம் வாய்ந்த ஆயுதம் எனும் புரிந்துணர்வால், நிச்சயம் அன்பு ஒன்றுதான் கடவுளாக இருக்கமுடியும் என தீர்மானித்தேன்.
பண்டைக்கால சீனக் கொள்கைகளான தாவோயிஸம் மற்றும் கன்ஃபூசியவாதம் ஆகியவற்றின் கலவையான, “இ சிங்” அல்லது “மாற்றங்களின் ஏடு” (Book of changes) என்றழைக்கப்படும் அசரீரி உரையின் மீது ஒரு வித மயக்கம் இருந்து வந்தது. எந்த அளவுக்கெனில், அதற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் சூழலுக்கு ஆளாகி மீண்டும் மீண்டும் அதனை கலந்தாய்வு செய்து என் கேள்விக்கு விடைகிடைக்கும் வரை முயன்று வந்தேன். குர்ட்ஜீஃபின் (பெரும்பாலான கருத்துக்களும் பயிற்சிகளும் சூஃபித்துவத்திலிருந்து இரவல் பெற்றதாகும்) போதனைகளைப் படித்தது நீங்களாக, சூஃபிகளுடன் எந்த ஒரு தெளிவான தொடர்பும் எனக்கு இல்லாமலிருந்தது. எதுவரைக்குமெனில், ஏறக்குறைய 20ம் வயதில், ஆக்ஸ்ஃபோர்ட் பள்ளியில், என் மாணவப் பருவத்தில் அறிமுகமான ஒருவர், அல்ஜீரிய சூஃபி ஆசிரியரின் மாணவராகத் தான் இருப்பதாகக் கூறினார். அம்மனிதரிடம் என்னைக் கவர்ந்ததெல்லாம், அவர் தன்னிடம் இருந்த எல்லா வகையான போதைப் பழக்கத்தையும் கைவிட்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் பக்திமான் போன்றோ அல்லது சுய புகழ்ச்சி செய்பவராகவோ தோன்றவில்லை .
பின்னர் என் சொந்த வாழ்க்கைப்ப்யணமே அபாயகரமான எல்லையைத் தொட்டது. மருந்துகளிலும், குடிபானங்களிலும் பொறுப்பற்ற முறையில் நான் நடந்து கொண்ட விதம், என் வாழ்க்கையில் மிகப் பெரும் கவனக் குறைவை உண்டாக்கி, இறுதியில் மன நல மருத்துவமனையில் சென்று முடிந்தது. இது என் வாழ்வில் ஓர் பலத்த அடியாகும். ஆயினும், அறிமுகற்ற சிலர் என் மீது காட்டிய அக்கறையும், அன்பும், என் ஆன்மாவை மீண்டும் புத்துயிர் பெறச்செய்தது.
என் இருபதுகளின் இறுதியில் குடும்ப வாழ்க்கையை ஓரளவு அமைதியோடு தொடங்கினேன். ஓர் குழந்தையும் கிடைத்தது. பல்வேறுபட்ட உத்தியோகங்களைச் செய்து வந்தேன். இருந்த போதிலும், என்னில் முரட்டு சுபாவமும், கடுகடுப்பான விவாதப் போக்கும் இருந்து வந்தது. அதன் காரணமாக, பல நண்பர்களை இழக்க நேர்ந்தது. என் மகனுக்கு ஒரு வயது நிறைவடையும் தருணத்தில், என் மனைவி வேலைக்குச் செல்லத்தொடங்கியதால், ஓராண்டு காலம் என் மகனைக் கவனித்துக்கொள்ள வீட்டில் தங்கினேன். இவ்வனுபவம் என்னைக் கொஞ்சம் மென்மையாக்கியது. பின்னர் ஐந்தாண்டு காலம், ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளாரகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இது என்னை மென்மேலும் மென்மையாக்கி விட்டது.
இக்கால கட்டத்தில், ஆன்மீகம் சம்பந்தப்பட்டவைகள் என்னை படிப்படியாக புத்துயிர் ஊட்டச் செய்தன. ஓர் புத்தகக் கடைக்குள் சென்ற நான் சுவாமி ரஜ்னீஷ் (ஒஷோ) எழுதிய புத்தகம் ஒன்றைக் கண்டேன். டஜன் கணக்கில் அவரது புத்தகங்கள் அனைத்தையும் ஆவலுடன் நுகரத் தொடங்கினேன். அதில் ஓர் புத்தகம் சூஃபித்துவம் சம்பந்தமானது. அதன் தலைப்பு “விடுதலைக்கான நேர் வழி”. பின்னர் ரிஷாத் ஃபீல்ட் என்பவரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டேன். அதில் ஒரு தலைப்பு, “கண்ணுக்குப் புலப்படாத பாதை”. நீல நிறக்கடலும், கடற்கரையும் அழகிய முறையில் படமாக்கப்பட்டிருந்த அப்புத்தகத்தின் அட்டைப் படம் என்னை வசீகரித்தது. (எனக்குள்ளிருந்த பழைய இயற்கை ஞானி வெளிவரத் தொடங்கினார் போலும்!).
அக்காலகட்டத்தின் ஒரு பகுதியில், சூஃபிகளுடன் கண்டிப்பாக தொடர்பு கொண்டே ஆக வேண்டுமென உணர்வு பூர்வமாக முடிவு செய்தேன். ஆனால், எங்கு போய்க் காண்பது என்றுதான் தெரியவில்லை. அந்நாட்களில் கிழக்கு லண்டனின், டால்ஸ்டன் என்ற பகுதியில் என் வசிப்பிடம் இருந்தது. நான் வசிக்கும் வீடு, ஒர் பெரிய வீட்டுக்குப் பின்புறமாக அமைந்திருந்தது. அப்பெரிய வீட்டினில் ஒரு வகையான குழுவினர் வசித்து வருவது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அவர்கள் எந்தக் கொள்கையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று என்னால் கணிக்க இயலவில்லை. அங்கே பெண்கள் சிலர் சதா கழுவிச் சுத்தம் செய்யும் வேலை செய்து வருவதைக் காண முடிந்தது. மேலும், அவ்வப்போது ஆண்கள் பலர் ஏணியில் ஏறியவர்களாய் ஒரு வகை சமநிலைக் கலை பயின்று வருவது போலும், குறிப்பாக இந்நிகழ்வு இரவில் அடிக்கடி நடந்து வருவதும் தெரிந்தது. எப்போதாவது ஒரு நேரத்தில், ஸ்காட்லாந்து நாட்டு நிலக்கிழார் போன்ற ஒரு உருவம் வீட்டின் தோட்டத்தின் பக்கமாக வந்து, அங்கிருக்கும் ரோஜா மலர்களை நுகர்வதையும் காண முடிந்தது. “சுழன்றாடும் தர்வேஷ்கள்” குழு ஒன்று டேல்ஸ்டன் பகுதியில் வசித்து வரும் செய்திக் குறிப்பொன்றை நாளிதழ்களில் பார்த்த ஞாபகம் எனக்கு வந்தது. அவ்வீட்டின் கதவைத் தட்டி, நீங்களெல்லாம் சூஃபிகளா? என்ற வினாவைத் தொடுத்த என்னிடம், உங்களுக்கு அது எப்படித் தெரிந்தது என அவர்கள் கேட்க, எல்லாவற்றையும் விளக்கினேன். அவர்களின் ஆசிர்யர் நிகழ்த்தும் வாரந்திர சொற்பொழிவு அமர்வில் கலந்து கொள்ள எனக்கு அழைப்புக் கிடைத்தது. (ஸ்காட்லாந்து நிலக்கிழார் போன்ற தோற்றமுடையவர் தான் ஆசிரியர் என்பது தெரிந்தது.) பல ஆண்டு காலம் அவர்களின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு, அவ்வாசிரியருடன் தனிப்பட்ட தொடர்பு கொள்வதில் கருத்து வேறுபாடு இருந்த போதிலும், அவர் வழங்கிய பயிற்சிகளைச் செய்து வந்தேன். அவர் பார்ப்பதற்கு, அகப்பார்வை உடையவராகத் தோற்றமளித்ததோடு அன்றி, பல சந்தர்ப்பங்களில் அவர் எண்ண அலைகளையும், கவனத்தையும் பார்வையாளர்களில் ஒரு சிலர் (நானும் உட்பட) மீது செலுத்தியதை உணர முடிந்தது.
ஒரு சில ஆண்டுகளில், அந்தச் சொற்பொழிவுகள் யாவும் நின்று போயின. அவ்வாசிரியர், தன்னுடைய மாணவர் சிலருடன் வெளிநாடு பயணம் சென்று விட்ட செய்தியைச் சேகரித்துக் கொண்டேன். எந்த வழிகாட்டுதலும், ஆசிரியர் தொடர்புமின்றியே, அப்பயிற்சிகளை முட்டாள்தனமாக தொடர்ந்து செய்து வந்தேன். ஓரிரு ஆண்டுகளில் ஏறக்குறைய தொடர்ச்சியான உயர் மன உளைச்சலுக்கும், பீதியின் தாக்குதலுக்கும் ஆளானேன். எனக்கு உதவி தேவைப்படுகிறது என்ற உணர்வு உண்டானது, ஆனால், எங்கு திரும்புவது என்பது விளங்கவில்லை. ரெஷாத் ஃபீல்ட் என்ற ஆன்மீகத் துறை ஆசிரியருக்கு ஒரு தபால் எழுதினேன். அக் கடிதத்தை தபால் பெட்டியில் இடுவதற்காகச் செல்லும் வழியில், ஸ்காட்லாந்து ஆசிரியரின் பழைய மாணவர் ஒருவர் கடந்து செல்வதைக் கண்டேன். ஆனல் அவருடன் எதுவும் பேசிக் கொள்ளாமல் வீடு திரும்பி விட்டேன். பின்னர் என் முட்டாள்தனத்திற்காக என்னை நானே இவ்வாறு நொந்து கொண்டேன். ” ஏன் அம்மனிதரிடம் பேசாமல் வந்து விட்டாய்? வெளிப்படையாக தானகத் தென்பட்ட உதவி அன்றோ, முட்டாளே!” என் மனதுக்குள் ஆற்றாமை வெளிப்பட்டது. ஒரு வாரங்கழித்து, அவரின் கூட்டாளியை வீதியில் சந்தித்தேன். இம்முறை அவரை அழைத்து, என் இக்கட்டான நிலையை விளக்கினேன். அதற்கு அந்நண்பர், இப்போது அவர்கள் யாவரும் , ‘ஹஜ்ரத்’ என்றழைக்கப்படும் ஒரு புதிய ஆசிரியருடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அக்குழுவின் வாரந்திர சந்திப்புக்கு வருமாறும் எனக்கு அழைப்பு விடுத்தார்.
ஆஹா, அத்தகவல் எப்படிப்பட்ட நிவாரணமாக இருந்தது. ஹஜ்ரத் அவர்கள் குழுவினருடன் அமர்வதற்காகச் சென்ற போது, நான் எந்த அளவு மிகவும் பதட்டத்துடனும், உளைச்சலுடனும் இருந்தேனென்றால் என் கால்களை இறுகக் கட்டிக்கொண்டு அமர வேண்டியதாயிற்று. ஆயினும், அந்நிலையைத் தாங்கிக் கொண்டேன். படிப்படியாக, நிலைமை கட்டுக்குள்ளாகி தளர்ந்தது.
நான் ஹஜ்ரத் அவர்களின் தியானப் பயிற்சியைச் செய்யலானேன். அதன் ஆரம்பக்கட்ட விளைவுகளான நிம்மதி, நிதானம் ஆகியவற்றின் தாக்கங்கள் என் மீது ஏற்பட்டன. ஆறு மாதங்களுக்குப் பிறகே ஹஜ்ரத் அவர்கள் இங்கிலாந்து வந்தார்கள். நான் அன்னாரின் சந்திப்பைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். இறுதியாக, அன்று சாலையில் சந்தித்த அதே நண்பர் என்னிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, “இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் ஒவ்வொரு நாளும் வருவதில்லையே, ஏன் நீங்கள் ஹஜ்ரத் அவர்களை வந்து சந்திக்கக் கூடாது ? என்று கூறினார்.
ஹஜ்ரத் அவர்களைச் சந்திக்க லண்டன் மாநகரம் நோக்கிப் பயணத்தைத் தொடங்கினேன். டேல்ஸ்டனிலிருந்து ப்ரிக்ஸ்டன் வரச் செல்ல வேண்டும். ஒரு சில காரணங்களால், அத்தடத்தில் செல்லும் பாதாள ரயில் சேவை இயங்கவில்லை. எனவே, ஆக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் எனுமிடத்திலிருந்து பேருந்தில் ஏறி அமர்ந்தேன். என் அருகில் குடி போதையில் அமர்ந்திருந்த ஆசாமியுடன் உரையாடிக் கொண்டே, ஐயோ கடவுளே, எங்கே இம்மனிதனுடனன் என் இறங்குமிடம் குடிபான விடுதியில் போய்ச் சேர்ந்து விடுமோ! என்று எண்ணத் தொடங்கினேன். ஏனெனில், நான் அவ்வாறு செய்பவன் தான். ஆனால் அன்றைக்கு அவ்வாறு நிகழவில்லை. ஹஜ்ரத் அவர்களைச் சந்தித்தேன். சந்திப்புக்கு முன், என்னவோ, ஏதோ என்ற பயம் என்னைக் கவ்வியிருந்தது, ஆனால், அவர்களுடன் அம்ர்ந்திருக்கச் தொடங்கியதும், எல்லாம் சரியாகி விட்டதாக உணர்ந்தேன். என்னை ஒப்படைக்கத் தகுதியானவர் இவர்தான் என என் உணர்வுகள் சொல்லத் தொடங்கின. மேலும், ஹஜ்ரத் அவர்களின் தெளிவான உருத்தோற்றம் உள்ளே வருவது, வெளியிற்செல்வது போன்றும் எனக்குக் காட்சியளித்தது. ஹஜ்ரத் அவர்கள் இந்த நிதர்சன நிலையிலும், இன்னும் வேறு சில நிதர்சன நிலையிலும் இருப்பதாகவே தோன்றியது. அத்தருணத்திலிருந்து ஹஜ்ரத் அவர்களை எளிய, மிகச் சாதாரண நிலையும், அபார ஆன்மீக ஆற்றலுடன் கூடிய அசாதாரணமும் கலந்த ஒரு கலவையாகவே நான் பார்க்கத் தொடங்கினேன். இரண்டுமே ஓரே சமயத்தில். இரண்டுமே சம அளவு முக்கியத்துவம் கொண்டதாகும். இவ்விரண்டு நிலைகளும் அவர்களை ஓர் ஆசிரியராக இருப்பதற்கானத் தகுதியோடு வைத்திருப்பதாகத் தான் நான் காண்கிறேன்.
அப்போதிருந்தே லண்டன் குழுவுடன் சேர்ந்திருக்கத் தொடங்கினேன். இலையுதிர் காலங்களில் தான் பெரும்பாலும் ஹஜ்ரத் அவர்களின் வருகை எங்களுடன் இருக்கும். தொடர்ந்து பயிற்சிகளைச் செய்து வந்தேன். சில சமயங்களில் ஒழுங்காக முறைப்படியும், சில சமயங்களில் விட்டு விட்டும் செய்வேன். வாராந்திர சந்திப்புகளிலும் அவ்வாறே சீராகவும், சில சமயங்களில் விட்டு விட்டும் கலந்து கொண்டேன். சமீப காலங்களில், ஒரு சில நாட்கள் ஹஜ்ரத் அவர்களுடன் தங்கிப் பயிற்சிகளைப் புதிப்பித்துக்கொள்ளும் (ரெட்ரீட்) நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. குழுவினரின் கூட்டமைப்பு அவ்வப்போது மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இருந்த போதிலும், 12 அல்லது 13 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த பரிச்சயமான ஒரு சில முகங்களை இன்னும் காண முடிகிறது. இவ்வகையான மாற்றங்கள் இருந்தும், நாம் எதனைப் பயிற்சியாகச் செய்து வருகிறோமோ, எதை நோக்கி நம் முயற்சிகள் இருந்து வருகிறதோ, அதன் சாரம்சம் மட்டும் அப்படியே இருந்து வருகிறது.
இக்குழுவில் நான் முதன்முறையாக இணைந்த போது, என்னிடம் முறையான எந்த ஒரு மத ரீதியான நடைமுறையும் இல்லாதிருந்தது. ஆண்டுகள் பல கழிந்த பின், ஏசுபிரானின் ஆன்மீக மெய்யுணர்வு என்னில் உணரத் தொடங்கியது. எனவே, சிறிது காலம் மீண்டும் என்னை நான் இங்கிலாந்து தேவாலயத்தில் இணைத்துக் கொண்டேன். இந்நிகழ்வுகளை, ஹஜ்ரத் அவர்களிடம், பயங்கலந்த உணர்வுடன் நான் கூறிய போது, ஹஜ்ரத் அவர்கள் புன்முறுவலித்தவர்களாக, “ஏதேனும் ஒரு மார்க்கத்தின் பக்கம் முகம் திருப்பியது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன்” என மறு மொழி பகர்ந்தார்கள். அப்போதிருந்து எனக்கு குவாக்கர்ஸ் எனப்படும் அன்பர்களின் குழுவினரோடு தொடர்பு ஏற்பட்டது. சில சமயங்களில் அவர்களின் வாரந்திர சந்திப்புகளிலும், வழிபாடுகளிலும் கலந்து கொண்டேன். ஒரு சில ஆண்டுகள் கழித்து, வார இறுதிகளில் சூஃபி போதனைப் பள்ளியின் அறிமுகக் கூட்டம், குவாக்கர்ஸ் எனும் அன்பர்களின் குழுவினருக்காக நடத்தப்பட்டது. குவாக்கர்ஸ் போதனைகளுக்கும், சூஃபித்துவத்துக்கும் மிக நெருக்கமான பிணைப்பு இருப்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். தற்சமயம் லண்டன் மாநகரில் ஒன்று கூடும் குழுக்களில் பெரும்பாலும் முஸ்லீம்களே உள்ளனர். ஆனால் நான் ஒருபோதும் முஸ்லீமாக ஆகியே தீர வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்படவில்லை, ஏனெனில், ஹஜ்ரத் அவர்கள் என்னிடம் “மக்கள் யாவரும் இறை நெருக்கம் பெற்றவர்களாக வேண்டும் என்பதே என் கவலை” என்று எல்லா நேரமும் கூறிக்கொண்டிருப்பார்கள்.
என் அனுபவத்தில், பயிற்சிகளைச் செய்வது என்பது ஒரு வகையான பிரயாணம், சில தருணங்களில் அதில் இலகுவும் உண்டு, கடினமும் உண்டு. அதன் ஒரு பகுதி, தான் யார் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவும், மற்றொரு பகுதி, உபயோகமற்று, கடின சித்தத்துடன் காணப்படும் ‘சுயத்தை” படிப்படியாக அழித்தொழிக்கும் தன்மை கொண்டது என்று கூறலாம். இது ஒரே நேரத்தில் சுலபமான பாதையாகவும், மேலும் சிரமம் மிக்கதாகவும் தோன்றுகிற்து. அதுதான் இரண்டுமே. இந்த முரண்பாட்டில் ஒரு உண்மையுண்டு, ஆனல் அதை விளக்குவதற்கு அடியேனால் இயலவில்லை.