யோகாவைப் பயிற்சி செய்து வந்த எனது பல்கலைக்கழகத்து நெருங்கிய நண்பர் மூலம், தியானத்துடனான முதல் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. உண்மையிலேயே, தியானம் என் மன நிலைக்கு உகந்ததாகவும், பயனுள்ள வகையிலும் இருந்ததால், அதை ரகசியமாகச் செய்து அதன் பலாபலன்களை அனுபவித்து வந்தேன். ஆனால், ஆன்மீகப் போதனைகளுக்கு கட்டணம் செலுத்துவதிலும் அல்லது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மன உளைச்சலைப் போக்கும் உத்தியாக அதனை சந்தைப்படுத்தி விலை நிர்ணயிக்கும் மேற்கத்திய நிறுவனத்தில் என்னை நானே ஈடுபடுத்திக் கொள்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லாமலிருந்தது. இருந்த போதிலும், மந்திர தியான முறையின் மூலம் பெற்ற சில மனோவியல் அனுபவங்கள், என்னை சூஃபித்துவத்துடன் தொடர்புடைய, மிகவும் பொருத்தமான பாதையைத் தேடுவதற்கு ஆர்வமூட்டியது-அப்பாதை இஸ்லாமியப் பிண்ணனியிலிருந்து நான் கேள்விப்பட்ட ஒன்றாகும்.
மேற்கத்தியர்களின் நாட்டத்திற்குப் பொருந்தும் வகையில், கிழக்கத்திய ஆன்மீக நெறிகளை நீர்த்துபோகச் செய்து, யாரோ, எங்கோ அபரிதமாய் ஆதாயம் தேடிக்கொள்கிறார்கள் என்ற கருத்தில் நான் மட்டும் இல்லை என்பது எனக்குத் தெரியும். தியானம் என்பது ஒரு புனிதமான பயிற்சி, அது இறைவனின் உயர்ந்த உள்ளமையிலிருந்து ஊற்றெடுத்து வர வேண்டியதாகும் என என் உள்ளத்தில் முடிவு செய்து கொண்டேன். இறைவனிடம் ஒப்படைத்தல், அவனை முழுமையாக நம்புதல் மற்றும் அமைதி ஆகியவைகளை உள்ளடக்கி, அதனைத் தன் எல்லைகளுக்குள் வைத்திருக்கும் வைதீகமான இஸ்லாமிய சமயம்தான் என் ஈடேற்றத்திற்கான ஒரே பாதை, என என் மனதை ஏற்கனவே தயார் செய்து கொண்டேன். அச்சமய நெறி ஒன்றுதான், “தான் கிழக்கிலிருந்தும் இல்லை, மேற்கிலிருந்தும் இல்லை” எனத் தன்னைத் தானே விவரிக்கிறது. இது கிழக்கத்திய போதனைகளா, அல்லது மேற்கத்திய போதனைகளா என்று நான் கவலைப்பட வேண்டியதில்லை. நானே சுயமாக தியானம் செய்வதில் சற்று சிரமம் தென்பட்டது. மேலும், பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நூலில் கண்ட பழமொழி நினைவுக்கு வந்தது.
“வாளைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரியாதவன், தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்வான்”.
எனவே, ஒரு ஆசிரியரைத் தேடியாக வேண்டுமென மனதில் எண்ணங்கொண்டேன். என் தேடுதல் வேட்கை ஒரு போதும் வீணாகாது. ரூமியின் வார்த்தைகளில் அளவு கடந்த நம்பிக்கையிருந்தது.
“தாகித்தவனே, தேடிக்கொண்டேயிரு, முயற்சியை கை விட்டு விடாதே, நிச்சயம் ஒரு நாள், நீ நீர் ஊற்றை சென்றடைவாய்”
என்னுடைய பல தலைமுறையினரைப் போல், நானும் மேற்கத்திய பாணியில் வளர்க்கப்பட்டதால், காரணங்களை ஆராயும் பகுத்தறிவு மனதில் தான் உண்மை அமைந்திருக்கிறது என்ற போதனைகள் மூலம் நம்ப வைக்கப்பட்டிருந்தேன். நீ எது ஒன்றையும் காணாதும், புரியாதும் இருக்கும் நிலையில், அப்படிப்பட்ட ஒன்று இல்லவே இல்லை அல்லது பிழை என்பதே அதன் சாரம்சம். நான் ஏற்கனவே சத்தியத்தை தேடுவதைத் தொடங்கி விட்டதால், தன்னை மையமாக வைத்து சிந்திக்கும் இவ்வகையான கோட்பாட்டை விட்டு விலகி, கிழக்கத்திய தத்துவங்களை நோக்கி நகரத் துவங்கினேன்.
பல வகைக் குழுக்களும், மனிதர்களும் சத்தியத்தைத் தாங்கள் விளங்கிக் கொண்டோம் என உரிமை கொண்டாடுவதெல்லாம், உலகின் பெரும் பெரும் சமய நெறிகளின் சாராம்சமாகிய, ஒரே விளக்கிலிருந்து வரும் ஒளிக்கதிர்களைப் போல, அனைத்துப் பாதைகளும், ஆண்டவனை முன்னோக்கியே அழைத்துச் செல்கின்றன என்ற கருத்தைத் தான் என்பது எனக்குத் தெரிந்தது. ஆயினும், அதே நேரத்தில் நான் செய்யும் காரியங்கள் அத்தனைக்கும், நானே முழுப்பொறுப்பும், காரணமும் ஆகையால், என் தேடல் படலத்தில் நான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது. யாரோ ஒரு சில ஆன்மீகவாதிகளால் மூளைச் சலவைக்குள்ளாக்கப்பட்டும், நிர்ப்பந்த்திக்கப்பட்டும் நான் மேற்கொள்ளும் செயல்பாடுகள், பின்னர் நான் வருத்தப்படும் சூழலுக்கு ஆளாக நேரலாம். பல்வேறு குழுக்களைச் சார்ந்த மனிதர்கள் பலரைப் பார்த்திருக்கின்றேன். ஒரு குறிப்பிட்ட எல்லை வரை முன்னேறிய பின், மீண்டும் திடீரென தங்களைத் தாங்களே பல பாதைகளும் சங்கமிக்குமிடத்தில் இருக்கக் கண்டு, குழம்பிப்போய் ஒரு தெளிவான வழிகாட்டியின்றி தவிப்பதைக் காண முடிகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பெரும்பாலான குழுக்கள் உண்மையான வழிகாட்டியின்றி தவிப்பது தெரிகிறது. அப்படிப்பட்ட வழிகாட்டிகள் எங்கோ, இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிகிறது. அவர்கள் நம்மிடையே இருக்கும் மனிதர்களுள் மாணிக்கமாவார்கள். என் காலத்திற்குப் பிறகு, தவறான போதகர்களும், குழப்பவாதப் பிரிவினர்களும் தோன்றுவார்கள் என்ற இறைத் தூதரின் முன்னெச்சரிக்கைச் சொற்கள் என்னை மேலும் ஜாக்கிரதையுடன் இருக்கும்படிச் செய்தன. ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவன் என்று என்னை வகைப்படுத்தப்படுவதற்கோ அல்லது நுட்பமாக ஒரு சில சூழ்ச்சி வலைக்குள் அகப்படுவதற்கோ நான் விரும்பவில்லை. ஒன்று, எளிமையான பாதையின் மூலம் இறைவனைச் சென்றடைவதற்கு உதவும் ஒரு உண்மையான் சூஃபி ஆசிரியரைக் கண்டு பிடித்தாக வேண்டும் அல்லது மொத்தத்தில் கைவிட்டு விட வேண்டியதுதான்.
சூஃபி போதனைப் பள்ளியுடன் ஒரு அறிமுகம்
புறத்தோற்றத்தின் அடிப்படியில் மனிதர்களைப் பற்றிக் கருத்துரைக்கும் சூழலுக்கு, மேற்கத்திய கண்ணோட்டம் அவ்வப்போது வழி வகுக்குகிறது. அதன் காரணமாக, மனிதர்களின் புறத்தோற்றத்தை வைத்தே அவர்களின் தராதரமும், திறமையும் மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதே உண்மை. ஒரு சமூகமே, புத்தகத்தை அதன் அட்டையைப் பார்த்து மதிப்பீடு செய்வது வருத்தத்திற்குரிய செய்தியாகும். ஏறக்குறைய இவ்வலைக்குள் நானும் விழுந்து விட்டேன்.
சூஃபி போதனைப் பள்ளியின் துண்டுப் பிரசுரம் ஒன்று எனக்குக் கிடைத்தது. அதை எனது கையிலிட்ட அம்மனிதருக்கு இறைவன் அருள் புரிவானாக! அப்பிரசுரத்தில் குறிப்பிட்ட வழிகாட்டுதலைப் பின்பற்றி அவ்விடத்தை அடைந்த பின்னர், அங்குள்ள குழு மேலாளர் எனக்கு நக்ஷ்பந்தி முஜத்திதி பயிற்சிகளை அறிமுகப்படுத்தினார். அவர் எல்லா நேரத்திலும் அக்கறையுடனும், கவனிப்புடனும் மேலும் உதவி செய்யும் மனப்போக்குடனும் காணப்பட்டார். பூலோகத்தின் பல பாகங்களிலிருந்தும், பல வகையான துறைகளையும் சார்ந்த ஹஜ்ரத் அவர்களின் மாணவர்கள் மூலம் நான் பெற்ற அனுபவங்கள், குறிப்பாக, பிறருடன் கனிவோடு நடந்து கொள்ளும் மனப்பாங்கு, ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்தோடும், நேசத்தோடும் உறவாடும் பண்பாடு, பயிற்சிகளின் பால் காட்டும் அர்ப்பணிப்புத் தன்மை மற்றும் பணிவன்பும், சந்தோஷமும் என்னை நெகிழ வைத்தன. இவைகளனைத்தும், அவர்களின் ஆசிரியரைச் சந்திக்கும் ஆவல் மேலீட்டை எனக்குள் அதிகமாக்கியது. நான் இதுவரை அன்னாரை நேரில் சந்திக்கவில்லை. ஆனால் அவர்கள் எல்லா நிலைகளிலும் ஒரு குறிப்பிடத்தக்க உருவகமாகத் திகழ்கிறார்கள். எனக்கு, அவர்கள் தான் அன்பெனும் வித்தை இம்மாணவப் பெருமக்களிடம் விதைத்தார்கள் என்றும், மேலும் இங்கே ஒரு அற்புதமான தோட்டத்தையே உருவாக்கியுள்ளார்கள் என்றும் தெரிந்தது. எவ்வாறு செய்திருப்பார்கள் ? இறைவனின் அருளினால், அவர்களைச் சந்தித்து இதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென என்னளவில் எண்ணிக் கொண்டேன்.
ஷேக் அவர்கள் இங்கிலாந்து நாட்டுக்கு வெகு விரைவில் வருகை தருகிறார்கள் எனும் தகவலை, குழு மேலாளரின் மூலம் தெரிந்து கொண்டேன். அன்னாரைச் சந்திக்கும் ஆர்வமும், அவர்கள் எவ்வாறான தோற்றமுடையவர் என்ற வியப்பும் எனக்குள் உண்டாகத் தொடங்கியது. அவர் எவ்வாறிருப்பார் என்று முன்னரே என் மனதிற்குள் படம் வரைந்து வைத்திருந்தேன். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, பசுமையான தோட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள கான்காஹ்வில்(Sufi Center) பெரும்பாலான காலத்தை கழித்து வரும் அம்மஹான், மிகப் பெரிய, உயரமான, மின்னும் தேகத்துடன், சாந்தமான கம்பீரத்துடன், அழகிய தலைமுடியுடன் இருப்பார் என எதிர்பார்த்திருந்தேன். தன்னுடைய முன்னிலையால், என்னை வெகு இலகுவாக இறைவனை முன்னோக்கிப் பயணிக்க வைக்க வகை செய்வார் எனவும் எதிர்பார்த்திருந்தேன். இவர் தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இறைவன் இவரிடம் மிகப் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருக்க வேண்டுமெனவும் எண்ணிக் கொண்டேன். ஆம், சுருக்கமாக, மொத்தத்தில் ஒரு கற்பனைப் படைப்பை மனக் கண்ணால் சித்தரித்துக் கொண்டேன்.
ஒரு ஷேகின் முதற்பார்வை
நீங்களே கணித்திருக்கலாம். ஷேக் அவர்களைப் பார்த்ததும், நான் மனதில் செதுக்கி வைத்திருக்கும் சித்திரத்திற்கு உகந்ததாக இல்லையே என்ற எண்ணங்கள் ஏற்பட்டது. (அந்நேரத்தை நினைக்கும்போது இப்போதும் அந்த வியப்பு தெரிகிறது). உண்மை வேறாக இருந்தது.
ஷேக் அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிரும் போது எனது முதற்பார்வை அவர்கள் மீது பட்டது. ஒரு சாதாரண இந்திய ஆடையுடன், தலையின் மீது தொப்பி அணிந்திருந்தார். நரைத்த தாடியும், அமைதி பொங்கும் தோற்றமும் பெற்றிருந்தார். இருந்த போதிலும், அந்நேரத்தில்மாணவர் பெருமக்கள் அனைவரின் இதயமும் அன்பால் நிறைந்தும், ஷேக் அவர்களை நோக்கி ஈர்க்கப்பட்டும் இருப்பதைக் கண்ணுற்றேன்.அது ஒரு அற்புத எழுச்சியூட்டும் தருணமாக இருந்தது. இந்த சுவராஸ்யமான மனிதரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு வேண்டும் என விரும்பினேன்.
ஷேக் ஹஜ்ரத் ஆசாத் ரசூல் அவர்களுடன் முதல் சந்திப்பு
ஹஜ்ரத் அவர்களுடனான முதல் சந்திப்பு மிகவும் சுவராஸ்யமாக இருந்தது. அது மிகவும் சாதாரணமாக இருந்தது. நாங்களிருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் போல் உரையாடிக் கொண்டிருந்தோம் ஆயினும், என் தந்தை போன்றிருந்த அன்னார் பேரில் உயரிய மரியாதை உணர்வு இருந்தது. அவர்களின் இதமான புன்முறுவல், அவர்கள் உதிர்க்கும் ஞானச் சொற்களை விட உரக்கப் பேசியது. ஆனந்தமும், அமைதியும் அவர்கள் தோற்றம் முழுதும் எழுதப்பட்டிருந்தது. நாங்களிருவரும் நண்பர்களைப் போல, அவர்களின் பேச்சு இருந்தது. இந்த மனிதரின் சகவாசத்தில் என்றென்றும் இருக்க வேண்டுமென உணர்ந்தேன்.
அதே நேரத்தில், ஹஜ்ரத் அவர்கள் மிகவும் விழிப்புணர்வுடனும், ஒவ்வொரு தருணத்திலும் நன்றிப் பெருக்குடனும் இருப்பதை உணர்ந்தேன். தியானத்தைப் பற்றிக் கேள்விகள் எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. ஒரு சில கேள்விகளை அவர்கள் முன் எழுப்பி, என் தியான ஆர்வத்தை வெளிக்காட்டும் விதம் ஒரு சம்பிராதய சூழலை உருவாக்கலாமென எண்ணியிருந்தேன். ஆனால், அன்னாரின் முன்னிலையில் மிக மிக சௌகரியமாக இருப்பதாக உணர்ந்தேன். பயிற்சிகள் யாவும் மிகவும் எளிமையானதாக இருந்தது. அவைகள், குறுகிய கால கட்டத்திலேயே என்னில் விளைவுகளை ஏற்படுத்தி என்னை அகமகிழ வைத்தது.
ஹஜ்ரத் அவர்களின் எளிமை என்னை வெகுவாகக் கவர்ந்தது. நான் கற்பனையில் சித்தரித்திருந்த வேறொரு சூஃபி ஆசானின் வடிவம் வீணாகி விட்டதென நான் ஏமாற்றமடையவில்லை. ஏனெனில், “எதுவொன்றும் பார்ப்பதைப் போல் இருப்பதில்லை” என்ற வாசகத்தைக் கேள்விப்பட்டிருந்தேன். அதன் அடி ஆழத்தை இப்போது உணரத் தொடங்கினேன். இவ்வுலகில் வெகு எளிதில் பொய்மையைக் கண்டு கொள்ளலாம். ஆனால், உண்மையான இதயத்தைப் பெற்றுள்ளோரிடம் மட்டுமே, உண்மையைக் காண இயலும். இவ்விஷயம் எனக்குத் தெளிவானதால், ஒவ்வொரு விஷயத்தையும் இப்போது புதிய கோணத்தில் பார்க்கத் தொடங்கினேன். பார்ப்பவனின் கண்கள் நிரந்தர மாற்றம் பெற்றுவிட்டன.
ஹஜ்ர்த் அவர்களுடனான சந்திப்பு மென் மேலும் என்னை தியானத்தில் ஈடுபடவும், மேலும், ஆசிரியர்-மாணவர் உறவு குறித்த புரிதலை மறுபரிசீலனை செய்யவும் என்னைத் தூண்டியது.
ஹஜ்ரத் அவர்களை இரண்டாம் முறையாகச் சந்தித்த போது, இதய நுட்ப மையத்துடனான உள்ளார்ந்த அருள் நோக்கு எனக்கு வாய்த்தது. அதைத் தொடர்ந்து என் பயிற்சிகளை சதா செய்து வந்தேன்.
பற்பல சந்தர்ப்பங்களில் ஹஜ்ரத் அவர்களை நான் சந்தித்திருக்கிறேன். தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் தொலைவில் இருக்கும் அவர்களை, மாணவர்களின் தேவைகளை அக்கறையோடு கவனிக்கும் ஆசானாகக் கண்டேன். ஹஜ்ரத் அவர்கள் பிறருக்கு வழங்குவதில், எப்போதுமே, துடிப்புள்ளவர்களாக இருந்ததோடு, அன்னார் “எல்லோரும் எதையேனும் எடுத்துச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள். நாம் ஏன் கொடுப்பவர்களாக இருக்கக்கூடாது” என்று ஆர்வமூட்டுபவர்களாக இருந்து வந்தார்கள்.
பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன். உலகியல் வேலைகளுக்கும், ஆன்மீகத்துக்குமிடையே ஒரு சமநிலையை உருவாக்கும் வகையில், குறிப்பாக, குடும்ப வாழ்வின் தேவைகளின் அழுத்தமும் இணைந்த என் உத்தியோக வேலையிடச் சூழலுக்கும் ஏற்றாற்போல் இப்பயிற்சிகள் பெருமளவில் எனக்கு உதவின.
மேற்கொண்டு அதிகமான விபரங்களை வெளியிட விரும்பவில்லை. ஆனால் என்னுடைய இறுதி வார்த்தைகள்-யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம் ஏனெனில், நீங்களே ஒரு வேலை மதிப்பீடு செய்யப்படலாம்-என்று இந்த நல்ல சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் விருப்பத்தின் மீது எச்சரிக்கையோடு இருங்கள், ஏனெனில், எதுவுமே, நீங்கள் பார்ப்பது போல இருப்பதில்லை. உங்கள் மனோதிடத்தில் போதுமான அளவு உறுதியுள்ளதா, அல்லது விதி விட்ட வழி எதுவோ என்றெண்ணி விழப்போகிறீர்களா?
இறைவன் என் ரகசியத்தைப் பாதுகாப்பானாக! அவன் உங்களுக்கும் அருள் பாலிப்பானாக! மேலும் என் ஆன்மீக ஆசிரியரான ஷேக் அவர்களுக்கு, மகிழ்ச்சியையும் , நீண்ட ஆயுளையும் வழங்கி அருள் புரிவானாக! இந்த அற்புதமான உறவில், அன்பு எவ்விதம் உயிர்ப்புடன் திகழ்கிறது என்பதை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.