School of Sufi Teaching

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவரின் சான்றுரை

எனது ஆன்மீக வழிகாட்டியாக ஆகப் போகும், சூஃபி ஷேக் அவர்களை முதன்முறையாகச் சந்தித்த போது, நான் ஏறிப்பயணமாகும் இப்பாதை ஒரு புதிய வழியாகவும், புதிய பக்தி விசுவாசத்தை நோக்கி என்னை வழிநடத்தும் ஒரு பாதையாகவும் இருக்கக் கூடும் என்ற இலேசான எண்ணம் தான் என்னில் தோன்றியது. ஆனால், ஆண்டுகள் பல கடந்த பின்னர், இயல்பாகவும், படிப்படியாகவும் அதுவாகவே வெளிப்படத் தொடங்கியது.

1970 களில் மேற்கத்திய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் நோக்கில், என் இளமைக் காலமே ஒழுக்கங்கெட்டுப் போயிருந்தது. அதன் காரணமாக என் 20 களின் இறுதியில், மனதில் ஒரு வித வெறுமையும்,அதிருப்தியும் ஏற்பட்டு விரக்தியடைந்திருந்தேன். பல்லாண்டுகளாக, பல்வேறு விதமான ஆன்மீக அமைப்புகளைப் பற்றிப் படித்துக் களைத்து, இறுதியில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக பயிற்சி செய்ய வேண்டுமென தீர்மானித்தேன். எனவே, ஆழ்ந்த ஆராய்ச்சியோடு யோகாவைப் பயிற்சி செய்ய ஆயத்தமானேன். அதனுள் இறைஞானம் பற்றிய ஆய்வும் சேர்ந்திருந்தது. காலங்கள் கடந்திட, நான் முன்னை விட கட்டுப்பாடு மிக்கவனாக, கவனத்தோடு செயல்படுபவனாக மாறிக் கொண்டிருந்தேன். ஆனால் பெயரிட முடியாத ஏதோ ஓன்றுக்காக என்னுள்ளம் ஏங்கிக்கொண்டிருந்தது.

நாற்பதாம் வயதை நெருங்கிய போது, ஆன்மீகப் பாதையின் நீண்ட பயணத்திற்கு ஒரு வழிகாட்டி அவசியம் தேவை என்ற முடிவுக்கு வந்தேன். அறிமுகமில்லாப் பிரதேசத்திற்குப் பயணமாகும் ஒரு பயணி, அப்பாதையைப் பற்றிய முன் அனுபவம் உள்ளவரோடு பயணிக்கும் போதுதான், தான் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாகவும், இலகுவாகும் சென்று சேர இயலும். ஓர் ஆன்மீகத் தேட்டவானும் அவ்வாறுதான். இதனை மனதிற்கொண்டு, ஓர் உண்மையான ஆன்மீக ஆசானைத் தந்தருளுமாறு இதயப் பூர்வமாக இறைவனிடம் பிரார்த்திக்கத் தொடங்கினேன்.

என்னுடைய முந்தைய பயிற்சிகள் அனைத்தும் என் வாழ்வியலை மேம்படுத்த உதவியது. ஆனால், ஏற்ற இறக்கமாக என்னில் காணப்படும் இயல்பான உணர்ச்சி வசப்படுதலை சீராக்க இயலாதவனாயும், என்னை விட்டுக் காணாமல் போய் விட்ட அத்தியாவசியமான கூட்டுப்பொருளான ‘அன்பை’ வளரவிட முடியாதவனாயும் தவித்துக் கொண்டிருந்தேன்.

மனிதனை முழுமையடைச் செய்வதற்கான பயிற்சி உத்திகளை தன்னகத்தே கொண்டுள்ள ‘சூஃபித்துவம்’ எனப்படும் ‘இஸ்லாமிய ஆன்மீகம்’ என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவ்வகையான பயிற்சி உத்திகள் யாவும் பல நூற்றாண்டுகளாக மேம்படுத்தப்பட்டு சூஃபி ஆசானின் வழிகாட்டுதல் மூலம் மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளன. அத்தகைய ஆசான்கள் எனப்படுபவர்கள் வெறுமனே இப்பாதையில் பயணம் மேற்கொண்டிருப்பவர்கள் அல்ல, மாறாக இப்பாதையின் இறுதி இலக்கை சென்றடைந்தவர்களாவர். நான் இறைவனிடம் பிரார்த்தனையின் மூலம் வேண்டிக் கொண்ட ஒரு சில வாரங்களுக்குப் பிறகு, எனக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது. சூஃபி ஆசான் ஒருவர் நான் வசிக்கும் மெல்போர்ன் நகருக்கு வருகை தருகிறார்கள் என்றும், அவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என்ற தகவல் எனக்கு வந்தது. விரக்தியோடு கலந்த என் அழுகுரலுக்கு இத்தகவல் மூலம் மறுமொழி கிடைத்தது போலிருந்தது.

ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்) அவர்கள், மெல்போர்ன் புறநகர்ப்பகுதியில், எளிமையான ஒரு வீட்டில், தரையின் மீது சாதாரணமாக அமர்ந்திருந்தார்கள். அன்னாரைச் சந்திக்கச் சென்ற என்னுள், ஏக்கமும் தவிப்பும் நிறைந்திருந்தது. மாறுபட்ட கலாச்சாரமும், வேறுபட்ட பாரம்பரியமும் உடைய, இதற்கு முன்னர் சந்தித்திராத இம்மனிதரிடம் நான் என்ன சொல்லப்போகிறேன்?. ஒரு வேளை அவர் என் எண்ணங்களை அறிந்திருக்கலாம் மேலும் என்னுள் பரவிக்கிடக்கும் இருளையும் பார்த்து விடலாம் என்றெல்லாம், சிந்தனைப் பறவை சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது; நான் கவலையுறத் தேவையில்லை. ஏனெனில், ஷேக் அவர்கள் மேற்கத்திய மாணவர்களோடு பழகிய அனுபவம் பெற்றவர்கள். சந்தேகமின்றி, அவர்கள் எல்லாவற்றையும் அறிந்து வைத்திருந்தார்கள். அன்னாரிடமிருந்து புறப்பட்டு வந்த நற்குணத்தின் இனிய காற்றும், ஆசுவாசமாக அதே நேரம் உன்னிப்பான கவனத்துடன் அமைந்த தோற்றமும், என்னை ஒரு கணம் உலுக்கி விட்டது. உள்ளொளியால் நிரம்பிய விழிகளும், முகத்தோற்றமும் அவர்களின் உண்மையான வயதைக் கூட பொய்யாக்கிக் காட்டின.

ஆரம்பக் கட்ட அறிமுகத்திற்குப் பின்னர், நான் அமைதியோடு அமர்ந்திருக்க, அன்னார் கண்களை மூடி அமைதிக் கடலுக்குள் மூழ்கிப் போய்விட்டார்கள். சுற்றிலும் முழுக்க மயான அமைதி நிலவியது. அன்னார் என்னை மிக நுட்பமாக ஆய்வு செய்கிறார்கள் எனும் வியப்புக்குறி என்னை வியாபித்தது. ஆடாது அசையாது, மேலும் எதைப்பற்றியும் எண்ணுவதற்கு முயற்சி செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். ஏனெனில், எதையாகிலும் நினைக்க, அதன் மூலம் என்னுடைய குறைகள் அவர்களின் மனத்திரையில் தெரிந்து விடுமோ என்ற பயம். ஆயினும், சிறிது நேரங்கழித்து கண் விழித்தவர்கள், ஆன்மீகப் பயிற்சியில் எனக்கிருக்கும் ஆர்வத்தையும், சூஃபித்துவ வழிமுறைகளைப் பற்றி அறியத் துடிக்கும் என் ஆவலையும் விசாரித்தார்கள். அவர்கள் பணிவன்பு மிகுந்தவர்களாகவும், விஷயத்தை நேரடியாகச் சொல்பவர்களாகவும், அவசியமற்ற எதையும் பேசாதவர்களாயும் நகைச்சுவை உணர்வுடன் அதே நேரம் அக்கறையுடனும் காணப்பட்ட அவர்களைப் பற்றி என் மனம் பெருமிதம் கொண்டது.

தியானம் செய்வதற்கு என் சம்மதத்தைப் பெற்ற பிறகு, இருவருமாக தியானத்தைத் தொடங்கினோம். என் வாழ்வில், ஆன்மீகத்தில் உள்ளார்ந்த அருள் நோக்கு எனப்படும் தவஜ்ஜுஹ் உண்டான முதல் அனுபவம் இதுவாகத்தான் இருந்தது. நக்ஷ்பந்தி முஜத்திதி ஆன்மீகப் பாரம்பரியத்தில், ஆன்மீக ஆசானின் இதயத்திலிருந்து மாணவரின் இதயத்திற்கு ஆன்மீக சக்தி பாய்ச்சப்படுகிறது. அவ்வாறு பாய்ச்சப்படும் சக்திதான் மாணவரின் ஆன்மீக மேம்பாட்டுக்கு அஸ்திவாரமாகும். தொடர்ந்து மாணவர் அக்கறையோடு செய்யும் தியானப் பயிற்சிகள் அவருக்கு மேன்மேலும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்குகிறது. தியானத்திற்கு முன்பு, நிய்யத் எனும் எண்ண உறுதி கொண்டு, முதற்கட்டப் பயிற்சி, இதயத்தை முன்னோக்கிச் செய்விக்கப்படுகிறது.

இந்த முதல் அமர்வு எனக்கு சாந்த உணர்வை, அதே நேரத்தில் உற்சாகத்தை வழங்கியது. வாழ்நாளில் ஒருபோதும் உணர்ந்திடாத, வித்தியாசமான உணர்வு, ஏதோ உயரத்தை எட்டுவது போலும், ஆழத்தில் அமிழ்வது போலும் உணர்ந்தேன். தங்களின் அமைதி நிறைந்த முன்னிலை மூலம் ஷேக் என்னை வெகுவாகக் கவர்ந்தார்கள். அவர்கள் என்னிடம் எது ஒன்றும் கேட்கவில்லை. நான் இந்த தியானப் பயிற்சியை செய்து பார்க்கும்படியும், அதன் மூலம் விளைவு தென்பட்டால் சரி, இல்லையெனில் இதை விட்டும் விலகிக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டார்கள். அன்னாரின் முகத்திலும், கண்களிலும் பிரகாசிக்கும் ஒளியைக் கண்ட நான், இப்பயிற்சிகளைச் செய்து பார்த்தாக வேண்டுமென தீர்மானித்துக் கொண்டேன்.

நாள் தோறும் இடைவிடாது பயிற்சிகள் தொடர்ந்தன. ஷேக் அவர்கள் கணித்தபடி, ஓரிரு வாரங்களில் ஒவ்வொரு பயிற்சியும், முன்னதை விட உயிரோட்டம் பெற்றுக் கொண்டு வந்தது. இதயத்தை முன்னோக்கிச் செய்யும் தியானப் பயிற்சி எனக்குப் புதிதாகவும், அதே நேரத்தில் என் ஆன்மீகத் தேடுதலுக்கு வாக்குறுதி தருவது போன்றும் திகழத் தொடங்கியது. இறுதியாக சூஃபித்துவத்தை மனப்பூர்வமாகத் தேர்ந்தெடுத்து, அப்பாதையில் அடியெடுத்து நடக்கத் தொடங்கினேன்.

இந்தியாவிலிருந்து ஷேக் அவர்கள் மீண்டும் வருகை புரிவதற்கு இன்னும் 12 மாதங்கள் இருந்தன. இதற்கிடையே, தினமும் பயிற்சிகளை முறையாகச் செய்து வந்ததோடு, வாரந்திர தியான ஒன்றுகூடல் நிகழ்விலும் என்னை நான் இணைத்துக் கொண்டேன். ஷேக் அவர்களின் குழுவின் அங்கத்தினர்கள் யாவரும், அலுவல்கள், வயது மற்றும் ஆளுமை ஆகியவற்றில் முற்றிலும் வேறுபட்டு, தியானப் பயிற்சியில் ஒன்றுபட்டவர்களாக இருந்தார்கள். அவர்களோடு ஒன்றிணைந்து அமர்வதில் கிடைக்கும் அமைதியும், அனுபவமும் அலாதியானது. அந்த வாரந்திர குழுவின் அமைப்பு, ஏதோ ஒரு சமூக மன்றம் போன்றதல்ல. மாறாக, நாம் உற்சாகத்தோடு தியானப் பயிற்சியை மேற்கொள்வதற்கு ஒரு உந்துதலாக இருப்பதோடு, ஒன்று சேர்ந்து செய்யும் தியானப் பயிற்சிகளின் பலாபலன்களைப் பகிர்ந்து கொள்ளும் அனுபவமாகவும் அமைகிறது.

சூஃபித்துவம் என்பது முற்றிலும் அனுபவங்களை உள்ளடக்கியது. ஒரு சில அனுபவங்கள் தனி நபரைப் பொறுத்து தனித்தன்மை வாய்ந்ததாகவும், மற்றவைகள் எல்லோருக்கும் பொதுவாகவும் இருக்கிறது. சதா தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருக்கும் மூளையையும், மாறிக்கொண்டிருக்கும் உணர்வுகளையும், சுதந்திரமாக இயக்கி வரும் என் “சுயத்துடன்”, அனுதினமும் செய்து வரும் தியானப் பயிற்சி, ஒரு இணைப்பை ஏற்படுத்தி விட்டது. இதன் வெளிப்பாடாக, என்னுள் ஒரு வித சாந்தமும், நிம்மதியும் துளிர் விட்டு வளர்ந்து கொண்டிருப்பதை உணரலானேன். தொடர்ந்து அவ்வுணர்வு என் வாழ்க்கையில் நேர்மறையான சிந்தனைகளை வழங்கியதன் காரணமாக மற்றவர்களோடு சிறந்த தொடர்புகளை உண்டாக்கிக் கொள்ளவும் வழிவகுத்தது. நீண்ட காலமாக என் பெற்றோர்களோடு எனக்கிருந்த கருத்து வேறுபாடுகள் யாவும், கொஞ்சம் கொஞ்சமாக விலகி, சுமுகமான உறவு தொடர்வதை உணர்ந்தேன். அதைப் போன்றே என் சக பணியாளர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் நடந்து கொள்ளும் விதத்திலும் முன்னேற்றம் உண்டானது. இவ்வாறு படிப்படியாக “நான்” எனும் அகந்தையின் ஆதிக்கம் என்னை விட்டும் விலகிச் செல்வதைப் போலிருந்தது.

ஷேக் அவர்களின் வருகை நெருங்க நெருங்க, ஏக்கம் என்னை ஆட்கொண்டது. இதயத்தின் வலி அதிகரிக்கத் தொடங்கியது. ஆன்மீக வளர்ச்சியின் ஆவல் மிகுதியாகி, அகமிய அறிவும், விசாலமான நுண்ணறிவும் அவசியம் தேவை என உணரலானேன். ஒரு சில மூத்த மாணவர்கள் முன்னரே இஸ்லாத்தைத் தழுவியவர்கள் என்பது எனக்குத் தெரிந்த போதும், என்னைப் பொறுத்தவரை, அது ஒரு தொலை தூர, சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விருப்பமாகவே தோன்றியது. முக்காடு எதுவும் அணியாத அல்லது வேறு வகையில் சிறப்பான ஆடையணியாத பெண்களும், சமூகத்தில் சாதாரணமாக தோற்றமளிப்பது போலவே ஆண்கள் யாவரும் காணப்பட்டார்கள். ஆனால் அவர்களிடத்தில் காணப்பட்ட ஒருமைப்பாடும், உறுதிப்பாடும் என்னைப் பொறாமை கொள்ள வைத்தது.

சூஃபித்துவப் பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கும் மாணவருக்கு, விரிவான அனுபவங்களும், ஞானங்களும் திறந்து கொடுக்கப்படுகிறது. இஸ்லாமியக் கட்டமைப்பு ஆன்மீகப் பயிற்சிகளுக்கு அரணாக நின்று அது வளர்ந்தோங்க உதவுவதோடு, அதனைப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறது. மேலும் அது பணிவான தன்மையைப் போற்றி வளர்த்து, தெய்வீக இணைப்பை ஏற்படுத்தித் தருகிறது. இஸ்லாம் என்றாலே அடிபணிதல், சமர்ப்பித்தல் என்பது பொருளாகும். இறைவனுக்கு முற்றிலும் அடிபணிதல் என்பது தான் விரிவான விளக்கம். ஒரு புதிய சமய நம்பிக்கையை மேற்கொள்ளும் எண்ணம் என்னிடம் இருந்ததில்லை, ஆனாலும், மிகச் சரியாக அது தான் நடந்தது. நான் பைஅத் ஆக முடிவு செய்து, இஸ்லாத்தைத் தழுவிய போது ( ஷேக் அவர்களை வழிகாட்டியாக ஏற்று, இத்தொடரின் பாரம்பரியச் சங்கிலித் தொடரில் இணைத்துக் கொள்ளும் சம்பிராதய முறை), என்னுள் வியப்பூட்டும் இனிமையானதோர் நிவாரண உணர்வு நிறைந்து வழிந்தது. என் வாழ்க்கையில் மிக முக்கியமானோதோர் அடி எடுத்து வைத்த மன நிறைவும், உயர்நிலையடைந்த உணர்வும் என் இதயத்தினுள் குடி கொண்டது.

அன்றாட வாழ்வியலை உள்ளடக்கிய சூஃபித்துவத்தை ஏற்று நடக்கும் மாணவர் எவரும், உலக வாழ்வின் தினசரி பொறுப்புக்களிலிருந்து தப்பித்துக் கொள்ளவோ, உலக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற்றுக் கொள்ளவோ இயலாது. மாறாக, உலகத்துடனனான அன்றாட தொடர்புகளின் மூலம் தன் இயல்பான குணாதிசயங்களைச் சுத்தி செய்து கொள்ளத் தொடர்ந்து பாடுபடும் அதே நேரத்தில், இறைவனுடனான உள்ரங்கத் தொடர்பையும் விழிப்புணர்வோடு பராமரித்து வருகிறார். இஸ்லாமியப் பயிற்சிகள் யாவும், இறைவனுடன் மனிதன் கொண்டிருக்கும் தொடர்பைப் பற்றிய விழிப்புணர்வைப் பண்படுத்துகிறது. அதன் விளைவாக மனிதனில் நன்றி செலுத்தும் தன்மையும், பணிவன்பும் ஏற்படுகிறது. இஸ்லாம் அறிவுறுத்தும் அழகிய, எளிமையான வாழ்வியலை ஊக்குவிக்கும் சூஃபித்துவம், தனிப்பட்ட முறையில் சாதனை படைப்போருக்கும் தடையாக இருப்பதில்லை. ஒருவரின் திறனை முழுமைபடுத்துவதும், முழுமையான மனிதனாக வளர்ந்து மேம்பாடு காண்பதும் ஆகிய இரண்டும் இஸ்லாம் மற்றும் சூஃபித்துவத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த இரு துறைகளும் ஒன்று சேர்ந்துதான் ஒரு முழுமையை உருவாக்குகின்றன. அதுதான் நம்முடைய  உள்ரங்க, வெளிரங்க அமைப்புகளை பண்படுத்துகின்றன.

நக்ஷ்பந்தி முஜத்திதி தரீக்காவின் முதற்கட்ட பயிற்சிகள் செய்வதற்கு முஸ்லிமாக இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. பொதுவாக அது, தன்னல வேட்கையின் வற்புறுத்தலை விட தெய்வீக தாகத்தின் தாக்கம் மிகைக்கும் கால கட்டத்தில் தனிப்பட்ட முறையில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். எனது புதிய மார்க்கம், வித்தியாசமான பண்பாட்டையோ அல்லது விசித்திரமான உடையமைப்பையோ என்னில் உண்டாக்கியதாக எனக்குத் தெரியவில்லை. மாறாக, அது படைப்பினங்கள் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கும், படைப்பாளனின் எல்லையற்ற அன்பிற்கும், நல்லெண்ணத்திற்கும் கைமாறாக, ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொள்ளும் உறுதிமொழியாகவே தோன்றியது. வாழ்வின் அர்த்தத்தையும், நோக்கத்தையும் சென்றடைய, அது இயல்பான நம்பிக்கையை மேம்படுத்தவும் வழி வகுக்குகிறது.

உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்பட்ட  உணர்ச்சி உந்துதல்கள், படிப்படியாக மாற்றம் பெற்று,  வாழ்க்கைக்கும், அதன் சவால்களுக்கும் ஏற்ப ஒரு அமைதியான அணுகு முறையை ஏற்படுத்தின. என்னில் இயல்பாகக் குடி கொண்டிருந்த மனத்தளர்ச்சி மற்றும் எதிர்மறை சிந்தனைகள் யாவும், நேர்மறை சிந்தனைகளாக மாற்றம் பெறத் தொடங்கின. கடந்த காலங்களில் என் நடவடிக்கைககளைக் கண்ணுற்றவர்கள், இப்படி நான் சாந்தமானவனாக மாறிப் போனதைப் பற்றிக் குறிப்பிட்டு கூறுவதைக் கேட்க முடிந்தது. ஒருவனுடைய இயற்கைக் குணாதிசயங்களில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள், மற்றவர்களிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி தந்தது.

விரக்தியோடு செய்து வந்த உண்மையான பிரார்த்தனைகள், இப்போது நன்றியறிதலாகப் பரிணமித்தன. மேலும் கீழுமாய்  ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைச் சுழற்சியைச் சமாளிப்பது எளிதாக இருந்தது. என் வாழ்வில் உள்ரங்க அமைதியையும், வெளிரங்க வெளிப்பாடுகளான, அன்பு பொங்கும் செயல்பாடுகளை மலரவிட்ட என் ஆன்மீக ஆசானுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என்னில் உண்டான எல்லா மாற்றங்களுக்கும் அன்னாரைக் காரணமாகக் கருதி மதிக்கிறேன். இஸ்லாமிய சூஃபித்துவம் என்பது கடந்த காலங்களில் இருந்ததைப் போலவே , இக்கால கட்டதிற்கும் பொருத்தமாகவும், திறனுள்ளதாகவும் திகழ்ந்து வருகிறது.

Total
0
Shares
முந்தையது

கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த மாணவரின் சான்றுரை

அடுத்தது

இங்கிலாந்து மாணவரின் சொந்த அனுபவம்

தொடர்புடைய இடுகைகள்
மேலும் வாசிக்க

ஓர் ஆங்கில மாணவி, தான் சூஃபித்துவப் பாதைக்கு வந்ததைப் பற்றி விவரிக்கிறார்

நான் வளர்ந்து வரும் கால கட்டத்தில், என்னைக் காட்டிலும் அபார ஆற்றலுடைய ஏதோ ஒன்று இருந்து கொண்டிருக்கிறது என்ற விழிப்புணர்வு எனக்கு ஏற்பட்டது. அது…
மேலும் வாசிக்க

இங்கிலாந்தில் இருக்கும் இஸ்லாமிய மாணவரின்

“ஏற்கனவே நீங்கள் அறிந்த சுருக்கத்தின் விரிவாக்கம் இது”சமயப் பிண்ணனி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த நான், பிறப்பிலேயே முஸ்லிமாக இருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு…
மேலும் வாசிக்க

இங்கிலாந்தில் வசிக்கும் இளம் மாணவரின் சொந்த அனுபவம்

யோகாவைப் பயிற்சி செய்து வந்த எனது பல்கலைக்கழகத்து நெருங்கிய நண்பர் மூலம், தியானத்துடனான முதல் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. உண்மையிலேயே, தியானம் என் மன…
மேலும் வாசிக்க

இங்கிலாந்து மாணவரின் சொந்த அனுபவம்

நான் இளம் குழந்தையாக இருந்த போதே எனக்கு இயற்கையின் மீது இனம் புரியாத காதல் இருந்து வந்தது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் பசுமையான…