School of Sufi Teaching

ஆழ்நிலை தியானம் (முராகபா)

‘ஆழ்நிலை தியானம்’ அல்லது ‘முராகபா’ எனும் பயிற்சியே, அனைத்து ஆன்மீக நிலைகளும் பூரணத்துவமடைய வழிவகுக்குகிறது என்பது பல நூற்றாண்டு கால அனுபவங்கள் மூலம் தெரிய வருவதாகும். அதன் காரணமாகத்தான், நமது ஞானத்தொடரின் ஆசான்கள் திக்ரையும் (இறைவனை நினைவுகூர்ந்து அழைத்தல்), ஸலவாத்தையும் (நபிகளார் மீது அருள்புரிய வேண்டுதல்) இன்னபிற உச்சாடன உத்திகளைச் செய்தபோதும், அவர்களின் அகமியப் பயிற்சியின் முக்கிய அம்சமாக முராகபாவே திகழ்கிறது. முராகாபாவின் மூலத்தோற்றம் பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவரகளின் பொன்மொழியோடு சார்ந்திருக்கிறது. “அல்லாஹ்வைப் பார்ப்பது போல் நீ வணங்க வேண்டும். நீ அவனைப் பார்க்கவில்லையென்றாலும் அவன் உன்னைப்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்துகொள்”. முராகபாவின் நேரடிப் பொருள், காத்திருத்தல், உத்தரவாதம் அல்லது பாதுகாப்பு என்பதாகும். சூஃபிகளின் சொல்லகராதியில் அது இவ்வாறு கருதப்படுகிறது, அதாவது, ஒருவர், ஆன்மீக ஆசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்ட வழிகாட்டுதல்களைத் தன்னிலே வளர்த்துக்கொள்ளும் உயர்ந்த எண்ணத்தில், உலகியல் ஈடுபாடுகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு தன்னை விடுவித்துக் கொள்வதாகும். வேறுவார்த்தைகளில் இவ்வாறு சொல்லலாம், அதாவது மனிதனின் உள்மனதில், உணர்வூட்டும் நுட்ப மையங்கள் (Subtle Centre of Consciousness) இருக்கின்றன. ஆன்மீக ஆசானிடமிருந்து வழிகாட்டல் பெற்ற பிறகு, ஒருவர், உலகியல் ஈடுபாடுகளிலிருந்து கால அவகாசமெடுத்து, அந்த நுட்பமையங்கள் மீது கவனம் செலுத்துவதே முராகபா ஆகும். முராகபா, மெஞ்ஞானத்திற்கு வழிவகுப்பதோடு, இறை நெருக்கம் உண்டாகும் பாதையை அமைத்துத் தருகிறது. சூஃபி ஆர்வலர் ஒருவர், ஏனைய அலுவல்களிலிருந்து தன்னை விடுவித்து, இறையருளை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் நிலையில் உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ ஒருவகையான செயல்பாடுகள் உள்ளத்தில் உண்டாவதை உணரத்தொடங்குகிறார். அது சிலசமயம் வெப்பத்தின் வடிவிலும், சில சமயம் அசைவுகளாகவும் மற்றும் சிலசமயங்களில் சிலிர்ப்பது போன்ற உணர்வாகவும் இருக்கலாம். இதயத்தின் அகமிய வடிவத்தையோ அல்லது வண்ணத்தையோ ஒரு போதும் முன்னோக்கலாகாது. ஏனெனில், எல்லாத் தன்மைகளுக்கும் அப்பாற்பட்ட்ட இறை உள்ளமையின் மீது மட்டுமே கவனம் யாவும் திசை திரும்பியிருக்கவேண்டும். தியானத்தில் குறைந்த பட்சம் 30 முதல் 45 நிமிடங்களாவது அவசியம் அமர்ந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு தோரணையில் அமரவேண்டுமென்பதில்லை. தியானத்தில் அமர்ந்த மாத்திரமே, ஆர்வலரின் மனதில் எண்ண அலைகள் அலைமோதத் தொடங்கும். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. “யோகாவைப் போல் அல்லது இன்ன பிற ஆன்மீக செய்முறை நுட்பங்களைப் போல், எண்ணங்களை ஒருமுகப்படுத்துவதில் நாம் முயற்சி செய்வதில்லை. நாம் இதயத்தை விழிப்புணர்வுள்ளதாக்கவே முயலுகிறோம்”, என ஹஜ்ரத் அவர்கள் அவ்வப்போது கூறுவார்கள்.

இதயம் ஒரு முறை விழிப்புணர்வு பெற்றதும், எண்ணங்களெல்லாம் படிப்படியாக அடங்கி விடும். இறுதியாக அவ்வார்வலர், மயக்கம் தோய்ந்த ஒருவித தன்னுணர்வற்ற நிலைக்குள்ளாகி, வேறொரு பரிமாணத்திற்குள் நுழைகிறார். அங்கே உறக்கத்திற்கும் மயக்கத்திற்கும் இடையே வித்தியாசம் உண்டு. இந்த மயக்கம் என்பது ‘சுயம் அழித்தலின்’ (Self Annihilation) நிழல் போன்றது. ஹஜ்ரத் ஷேக் அஹ்மது ஃபாரூகி சர்ஹிந்தி (ரஹ்) அவர்கள் இம்மயக்கம் தோய்ந்த நிலை பற்றி இவ்வாறு கூறுவார்கள் – “அவன் வருகிறான், வந்து உன்னை எடுத்துச் செல்கிறான்”. தூக்கத்தில் ஆன்மா கீழ்நிலையை நோக்கிக் ஈர்க்கப்பட்டு, இதயத்திற்குள்ளே (Heart) தஞ்சமடைந்து கொள்கிறது. மயக்க நிலையில் மேல்நோக்கி ஈர்க்கப்பட்டு சுயத்திற்குள்ளே (Self) தஞ்சமடைந்து கொள்கிறது. ஆர்வலர், அம்மயக்க நிலையில், தன்னுணர்வற்று, தான் இருப்பதையே அறிவதில்லை. இந்நிலையில் அவருக்கு சில அகக்காட்சிகளும் தோன்றும். சூஃபிகளின் சொல்லகராதியில் அதற்கு “கஷ்ஃப்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வகைக் காட்சிகளில் ‘எண்ண வெளிப்பாடுகள்’ கலந்திருக்கும் சாத்தியங்களிருப்பதால், அதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டியதில்லை. ஷேக் அஹ்மது ஃபாரூகி சர்ஹிந்தி (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்: “வெறுமனே ஆர்வலரின் உள்ளத்தை மகிழ்விக்கவே இவைகளெல்லம் இருக்கின்றன. ஆனால், இலக்கோ, இதற்கெல்லாம் மிக அப்பால் இருந்து கொண்டிருக்கின்றது”.

ஹஜ்ரத் அலாவுத்தீன் அத்தார் அவர்கள் கூறினார்கள்: “முராகபாவெனும் தியானப்பயிற்சியானது, மறுத்தல் மற்றும் உறுதிப்படுத்துதலை நினைவுகூறும் பயிற்சியை விடச் சிறந்ததாகும். முராகபாவின் மூலம் பௌதீக உலகிலும், ஆன்ம உலகிலும் இறை பிரதிநிதித்துவப் படித்தரத்தை அடைந்து கொள்ளும் சாத்தியங்கள் உண்டு”.

Total
0
Shares
முந்தையது

அகமிய பந்தம் (நிஸ்பத்)

அடுத்தது

இறைவனை நினைவுகூர்தல் (திக்ர்)

தொடர்புடைய இடுகைகள்
மேலும் வாசிக்க

இப்பாதையின் மீதான மெய்யறிவு

இவ்வான்மீகப் பாதையில் பயணித்தவர்களால் கண்டறியப்பட்ட ஆய்வுகள் யாவும் கொள்கைக் கோட்பாடுகளாக இல்லாமல், முற்றிலும் செயல்வடிவமாகவும், தனிப்பட்ட அனுபவமாகவும் இருப்பதால், இப்புரிதல்களை, வார்த்தைகளால் விளக்கிக் கூறுவது…
மேலும் வாசிக்க

இறைவனை நினைவுகூர்தல் (திக்ர்)

சூஃபி ஆசான்கள் திக்ரெனும் இறைவனை நினைவு கூர்தலை வலியுறுத்துவதின் நோக்கம், அது ஆர்வலரின் கவனத்தை இறைவனின் பக்கமாக முன்னோக்கச் செய்து, அவனைப்பற்றிய நம்பிக்கை, அறிவு…
மேலும் வாசிக்க

அகமிய பந்தம் (நிஸ்பத்)

நிஸ்பத் எனும் அரபிச்சொல்லின் பொருள், இருவரிடையே உள்ள உறவு அல்லது இணைப்பு என்பதாகும். சூஃபிகளின் சொல்லகராதியில் அது இறைவனுக்கும், மனிதர்களுக்குமிடயே உள்ள பந்தத்தைக் குறிக்கிறது.…
மேலும் வாசிக்க

உள்ளார்ந்த அருள் நோக்கு (தவஜ்ஜுஹ்)

நபிகளாருக்கு முதன் முறையாக வேதவெளிப்பாட்டை வழங்க வந்த நேரத்தில், வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூன்று முறை ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்த நிகழ்ச்சியை, பெரும்பாலான…